நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலை வணங்கிட வைத்துவிடும்!
ஒரே நாள் ஓப்பனிங் ஷோவில் தலையெழுத்தையே மாற்றிவிடும் சக்தி சினிமாவுக்கு மட்டும்தான் உண்டு. நேற்று வரை நீ யாரோ, இன்று முதல் நீ வேறொ என்று ரசிகர்கள் ஓடி வந்து அரவணைத்துக் கொள்வதும் இங்கேதான். இந்த விந்தை உலகத்தில் பந்தை தவறவிட்டவர்களும் உண்டு. பந்தாக உதை பட்டவர்களும் உண்டு. அந்த பிளே கிரவுண்டே நான்தான், முடிஞ்சா வந்து ஆடிப்பாரு என்பவர்களும் உண்டு. இதில் மூன்றாவது ரகத்துக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
ராஜ்கிரண் அலுவலகத்தில் ஆபிஸ் பாயாக இருந்த வடிவேலுவை ‘அடா புடா’ போட்டு பேசிய சிலர், அதே வடிவேலுவை ‘வடிவேலு சார்…’ என்று அவர் எதிரில் இல்லாத போதும் உச்சரிக்கிற அளவுக்கு உச்சத்தை கொடுத்ததை ஒரு உதாரணமாக சொல்லலாம். இதுபோல பல உதாரணங்கள் இங்கே உண்டு. லேட்டஸ்ட் உதாரணம் சூரி.
தற்போது சூரி சென்னையிலிருக்கும் ஒரு முக்கியமான பில்டிங்கை விலைக்கு வாங்கியிருக்கிறார். அது ஒரு சினிமா அலுவலகம். கலாபக் காதலன் என்ற படம் வந்ததே, நினைவிருக்கிறதா? அந்த ஆபிஸ்தான் இப்போது சூரியின் கையில். ‘ஒரு காலத்தில் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு அங்க போயிருக்கேன். ஆனால் அதில் நடிக்க வாய்ப்பு தரல. இருந்தாலும் பரவாயில்ல என்று திரும்பி வந்திட்டேன். இப்போ அந்த பில்டிங் விலைக்கு வருதுன்னாங்க. உடனே வாங்கிட்டேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றார்.
இன்னும் எங்கெல்லாம் மறுக்கப்பட்டாரோ, அதெல்லாம் கூட விலைக்கு வருதான்னு பார்க்கலாம்…