விஜய்யின் ‘கத்தி ’க்கு ஆதரவாக சவுந்தர்யா ரஜினியின் முதல் கையெழுத்து!

நல்ல நேரத்தை நோக்கி ஒவ்வொரு நாளும் முன்னேறிக் கொண்டிருக்கிறது ‘கத்தி’யின் போக்கு. விட்டேனா பார்… என்று மொத்த அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் அருவாளை தீட்டிக் கொண்டிருப்பது யாவரும் அறிந்த விஷயம்தான். இருந்தாலும் படத்தின் பாடல் வெளியீட்டு தேதி, மற்றும் போஸ்ட் புரடக்ஷன் வேலைகளை எவ்வித தொய்வும் இன்றி செய்து கொண்டிருக்கிறது கத்தி டீம்.

கத்தி- லைக்கா பிரச்சனை ஸ்டார்ட் ஆன அடுத்தடுத்த நாட்களிலேயே இந்த படத்தின் பாடல் வெளியீட்டு உரிமையை வாங்குவதாக ஒப்பந்தம் போட முன் வந்த சோனி ஆடியோ நிறுவனம் தெறித்துக் கொண்டு ஓடியதை ஏற்கனவே நமது இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தோம். இப்படி ஒவ்வொருவராக கத்தியின் வியாபாரத்தை பதம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலை மறைந்து கடந்த சில தினங்களாக சுமூக சூழலை எட்டிக் கொண்டிருக்கிறது. அதன் முதல் கட்டமாகதான் இந்த விவகாரத்தில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தன்னாலான முயற்சிகளை எடுப்பதாக வாக்குறுதியும் அளித்திருக்கிறார். விஜய்யை அழைத்து சென்று முதல்வரை சந்திக்க வைக்கவும் முயல்கிறார்.

மேலும் ஒரு பாஸிட்டிவ் செய்தி. கடந்த சில தினங்களுக்கு முன் ஈராஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டாரல்லவா சவுந்தர்யா ரஜினிகாந்த்? அவர் வந்ததும் எடுத்த முதல் வியாபாரம் கத்தி படத்தின் ஆடியோவைதானாம். யாரும் வாங்குவதற்கே அஞ்சிய இந்த பாடல்களை தைரியமாக வாங்கியிருக்கிறார் சவுந்தர்யா. சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு ஈராஸ் நிறுவனத்திற்காக கைமாறியிருக்கிறதாம் கத்தி ஆடியோ.

சவுந்தர்யாவின் தைரியத்தை பாராட்டதான் வேண்டும்!

Read previous post:
களத்தில் குதித்தார் சரத்குமார் ‘ கத்தி ’ தப்பிக்குமா?

எலி வளையா இருந்தாலும், தனி வளை வேணும் என்று விஜய் ரகசியமாக நினைத்ததன் விளைவு? இன்று அவரது படங்கள் வரும்போதெல்லாம் கொம்பு சீவிக் கொண்டு நிற்கிறது அரசியல்!...

Close