முடிஞ்சா பாருங்க… அலறவிடும் ஸ்ரீதிவ்யா
அந்தஸ்து ஏற ஏற அலட்டலும் ஏறும் என்பது உலகறிந்த பொதுக்குறள்தான். அதற்காக றெக்கை முளைச்சதும் பறக்கவிட்டா வளர்த்தவனின் முதலீடுக்குதான் நஷ்டம் வந்து சேரும். அதனால் விட மாட்டேன் என்று மார் தட்டிக் கொண்டு கிளம்ப தயாராகியிருக்கிறார்களாம் இரண்டு தயாரிப்பாளர்கள். முறைப்படி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்து பஞ்சாயத்துக்கு இழுத்துவிட வேண்டும் என்பதுதான் அவர்களது திட்டம்.
அதுசரி… சிக்கியது யார்?
நம்ம ஸ்ரீ திவ்யாதான். ஊதாக்கலரு ரிப்பனுக்கு முன்னாலிருந்த ஸ்ரீ திவ்யா அதற்கப்புறம் இல்லை. அவருக்கு அடித்த திடீர் ஹிட்டின் காரணமாக தன்னுடைய பழைய சகவாசத்தையெல்லாம் கூண்டோடு மூட்டை கட்டிவிட்டார் அவர். தமிழ்சினிமாவில் நடிக்க வந்த புதுசில் அவர் ஒப்புக் கொண்ட இரண்டு படங்கள் காட்டு மல்லி மற்றும் நகர்புறம். வெறும் ஆயிரங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டுதான் ஒப்பந்தம் ஆனாராம்.
ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெளிவந்தபின் அவரது சம்பளம் லட்சத்தில் ஏறி கோடியை தொட்டுவிடும் போலிருக்கிறது. முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடி சேர வேண்டும். அல்லது ஜி.வி.பிரகாஷ் மாதிரி நாடறிந்த பிரபலங்களுடன் ஜோடி சேர்வது என்கிற கொள்கையில் குன்றிமணி அளவுக்கு கூட பின் வாங்குவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் அவர். இந்த நேரத்தில் போய், நகர்புறம் தயாரிப்பாளரும் காட்டு மல்லி தயாரிப்பாளரும் கால்ஷீட் கேட்டால் கொடுப்பாரா?
கால்ஷீட் அல்ல, கை துடைக்கும் ஷீட் கூட இல்லை என்று கூறிவிட்டாராம் அவர். அதனால் ஏற்படும் விளைவுகளை நெஞ்சு நிமிர்த்தி எதிர்கொள்ளவும் தயாராகிவிட்டார். பஞ்சாயத்து தீர்ப்புலதான் இருக்கு ஸ்ரீதிவ்யாவின் பியூச்சர் டெக்னிக்!