வந்தேமாதரத்துக்கு ஆசைப்பட்டேன்! வந்துச்சே ஸ்மைல் ப்ளீஸ்!

பீச், பார்க், குட்டி குட்டி பூங்காக்கள் என்று எங்கு சென்றாலும், அதிகாலை நேரத்தில் உட்கார்ந்து ஹோஹொலே… என்று சிரித்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்! லாபிங் தெரபியாம்! வாய் விட்டு சிரிச்சா நெஞ்சுவலி வராது என்கிறது மருத்துவம். அதற்காகதான் இப்படி கும்பல் கும்பலாக கூடி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். “மனுஷன்னா சிரிக்க வேணாமாய்யா…” என்று உலகம் முழுக்க சிடுமூஞ்சிகளை சிரிக்க வைக்கவென்றே மெனக்கெடுகிறது நல்ல மனசுக்காரர்களின் மெனக்கெடல்! அந்த வரிசையில் நம்ம இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, தயாசைரஸ், யுகபாரதி, எஸ்.மகேஷ்… அப்படியே இவர்களுடன் இன்னும் ஒரு டஜன் பேர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். ஏன்? விஷயம் அப்படி…

இவர்களின் முயற்சியில் ஸ்மைல் ப்ளீஸ் என்ற இசை ஆல்பம் தயாரிக்கப்பட்டுள்ளது. தயாசைரஸ் இசையில் எஸ்.மகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்தின் அத்தனை பாடல்களையும் யுகபாரதி எழுதியிருக்கிறார். இதில எங்கிருந்து வந்தார் ஸ்ரீகாந்த் தேவா?

எஸ்.மகேஷ் பேச ஆரம்பித்தார். முதல்ல படம் பண்ணணும் என்ற நோக்கத்தில்தான் ஒண்ணு கூடுனோம். அதுக்கு இடையில் ஒரு மியூசிக் ஆல்பம் பண்ணுவோமேன்னு தோணுச்சு. சிரிப்பின் முக்கியத்துவம், தண்ணீரின் அவசியம்னு மனுஷனுக்கு தேவையான விஷயங்களை கருத்துகளா வச்சு ஆறு பாடல்களை உருவாக்குனோம். முதல்ல ஒரு பாடலுக்கு வீடியோ வடிவம் கொடுக்கணும்னு ஆசைப்பட்டப்போதான் ஒரு பிரபலமானவர் அதில் நடிச்சா நல்லயிருக்கும்னு தோணுச்சு. உடனே ஸ்ரீகாந்த் தேவாவை அணுகினோம். அவரும் மனப்பூர்வமாக ஒத்துழைச்சார். ‘புன்னகை ஒன்றுதான்…’ என்ற பாடலை மலேசியாவில் வச்சு ஷுட் பண்ணினோம். பரபரப்பான ஷெட்யூலுக்கு நடுவில் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஸ்ரீகாந்த்தேவாவுக்கு நன்றி என்றார் மகேஷ்.

இந்த பாடல் யூட்யூப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்திருக்கிறார்கள்.

“எனக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘வந்தேமாதரம்’ ஆல்பம் மாதிரி தனி ஆல்பம் பண்ணணும்னு ஆசை இருந்திச்சு. படம் படம்னு ஓடி இதோ 100 படங்களை தொடப்போறேன். ஏதோ என் ஆசையை நிறைவேற்றணும்னே கிளம்பி வந்த மாதிரி வந்திருக்காங்க. அதனால் நடிச்சு கொடுத்தேன்” என்று ஸ்மைல் ஆகிறார் ஸ்ரீகாந்த் தேவா.

“கேரளா, மும்பை மாதிரி இங்கேயும் மியூசிக் ஆல்பங்களுக்கும் ஒரு கேட் திறக்கணும். அதுதான் எங்க ஆசை” என்கிறார்கள் கோரஸாக!

எல்லா ஆசையும் சிரிப்பிலிருந்துதானே துவங்குகிறது. வெல்வீர்கள் ப்ரோஸ்…!

ஆல்பத்தை காண இங்கே க்ளிக் பண்ணவும்-
https://youtu.be/ZIscgVNZdcY

Read previous post:
எல்லாம் எனக்கு ரஜினி சார் கொடுத்ததுதான்- கிருமி தயாரிப்பாளர் ஜெயராமன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உதவியாளராக இருந்த ஜெயராமன், 'கிருமி' படத்தின் மூலமாக தயாரிப்பாளராகி இருக்கிறார். அவரை ரஜினி வாழ்த்தியிருக்கிறார். JPR பிலிம்ஸ் கோவை வழங்கும் 'கிருமி' படம்...

Close