இப்படிதான் இருக்கு இலங்கை!

ஆர்.எஸ்.அந்தணன் எழுதும் பயணக்கட்டுரை

சுமார் 1200 கி.மீ பயணம்.

இலங்கையின் ஒரு பகுதியை பார்த்தாயிற்று. இறைச்சிக் கூடத்தில் நுழைந்த காக்காய், மூன்று நாட்களில் என்ன முடியுமோ, அவ்வளவையும் மென்று செரிக்கிற ஆர்வத்தோடு இருக்குமோ, அப்படிதான் நானிருந்தேன்.

கொழும்பில் இறங்கி, கண்டிக்கு பயணித்து அங்கிருந்து நுவரேலியாவை மேய்ந்துவிட்டு மீண்டும் கொழும்புவுக்கு வந்த அத்தனை கி.மீ தூரத்தில் பச்சே பசேல் தாண்டி பளிச்சென ஒரு தூய்மை இருந்தது. ஒரு பிச்சைக்காரர் கூட தென்படவில்லை. வாந்தியாக ஒட்டிக் கொண்ட போஸ்டர்கள், அசிங்கமாய் கிறுக்கப்பட்ட அரசியல் சுவர்கள், மேலே விழ காத்திருக்கும் கட் அவுட்டுகள் என்று எதுவும் தென்படவில்லை. நிறுத்தக் கோட்டை சிக்னல் விழுவதற்கு முன் தாண்டுவதில்லை. காரில் சீட் பெல்ட்! டூ வீலராக இருந்தால் குழந்தை, பெண்களுக்கும் கூட ஹெல்மெட்! (டிராபிக் போலீஸ்காரர்கள் லஞ்சம் பெறுவதில்லை என்றார் எங்களின் வழிகாட்டி சதீஷ்)

எப்போது குப்பை அள்ளப்படுகிறது. எங்கே கொட்டப்படுகிறது என்பதே புலப்படா வண்ணம் தெருவெங்கும் சுத்தம் சுத்தம். இந்த சுத்தம் நண்பர்களோடு நான் பயணித்த எல்லா இடங்களிலும் இருந்ததுதான் ஆச்சர்யம்.

இலங்கை மன்னர் ராவணன், வாயு பகவானுக்குதான் தெருவை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பொறுப்பை கொடுத்திருந்தாராம். அது நிஜமாக இருக்குமோ, என்னவோ?

இலங்கையின் ஒரு பகுதியை கொன்று குவித்த ரத்தம், இந்த சுத்தத்தில் மறைந்துவிடாது என்றாலும், நம்ம ஊர் இப்படியில்லையே என்கிற ஏக்கம் சூழ்ந்து கொண்டதை மறுக்க முடியாது.

இந்த சின்ன நாட்களில் நான் பெற்ற அனுபவத்தை அடுத்தடுத்த நாளில் எழுதுவேன். அதற்கு முன் இங்கு இடம் பெற்றிருக்கும் இந்தப்படம், ஒரு கொடூரத்தின் ஆறாத ரணம். ஆமாம்… விடுதலை இயக்கத்தின் பெரும் சூறாவளிக்கு காரணமாக இருந்த இடம் இது.

குட்டிமணி, ஜெகன் இவ்விருவரின் கண்களை உயிரோடு தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் இந்த வெளிக்கடை சிறையில்தான் அரங்கேறியது. அதற்கப்புறம் நடந்த விடுதலை இயக்கத்தின் வரலாறுதான் உங்களுக்கு தெரியுமே!

(இலங்கை பயணம் தொடரும்)

இலங்கை பயணம் -2

சொத்தை பல்லை பிடுங்குவதற்கு சொத்தையே கேட்கிற பல் டாக்டர்கள் தெருவுக்கு நாலு பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அகப்படாத அதிசய பல் ஒன்று கண்டியில் இருக்கிறது. (இந்த நகரத்தில்தான் எம்.ஜி.ஆர் பிறந்தார். அதனால்தானோ என்னவோ, எம்.ஜி.ஆரை போலவே அழகாக இருக்கிறது திரும்புகிற இடமெல்லாம்) அந்த அதிசயப் பல் கவுதம புத்தருடையது என்கிறார்கள்.

நம் கண்ணுக்கு புலப்படுகிற மாதிரி ‘பப்பரக்கா’ என்று பரப்பி வைக்காமல், பாதுகாப்பான தங்கப் பேழையில் வைத்திருக்கிறார்கள். வருடத்திற்கு ஒருமுறை திறப்பார்களாம். அந்த பேழையை அழகான யானை முதுகில் வைத்து பல கி.மீ தூரம் ஊர்வலம் நடக்குமாம். வெளிநாட்டிலிருந்து ஆயிரக்கணக்கானோர் இந்த ஆலயத்தை வணங்க குவிகிறார்கள். டிக்கெட்? அந்த ஊர் பணத்திற்கு தலைக்கு ஆயிரம்!

கொடுத்துவிட்டு உள்ளே போன எங்களுக்கு கட்டுக்கடங்கா ஆனந்தத்தை வைத்திருந்தார் புத்தர். ஏதோ இனம் புரியாத பரவசம் மேலிட்டது. அப்போதும் நமது செல்ஃபி புத்தி மண்டைக்குள் மேல் சுர்ரென்று முளைக்க… அதைவிட வேகமாக முளைத்தார்கள் செக்யூரிடிகள். ‘புத்தருக்கு பின் புறத்தை காட்டி நிற்காதீர்கள்’ என்பதை டீசன்ட் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். அதையும் படிக்காத என் போன்ற ஜடங்களுக்குதான் அந்த வாய்மொழி ஸ்டாப்பிங்.

ஆங்… புத்தரின் பல்லை முதுகில் சுமந்த யானை ஒன்று திடீரென இறந்துவிட்டது. இறக்கிற நேரத்தில் அதன் கண்ணில் வழிந்த நீரோடு பாடம் பண்ணி வைத்திருக்கிறார்கள். என்னேவொரு தத்ரூபம்! கண்டியின் பெருமையே இந்த கோவில்தான். வருடம் முழுக்க பல லட்சம் சுற்றுலா பயணிகளை பக்தியோடு இழுக்கும் இந்த கோவில், ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் கண்களை உறுத்தியிருக்கிறது. கோவிலை ஒட்டிய சாலைக்குள் அதிரடியாக நுழைந்து மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

நல்லவேளையாக, கோவிலுக்கு சேதாரம் இல்லை. அன்று மூடப்பட்ட சாலை, இன்றும் அப்படியே மூடப்பட்டிருக்கிறது.

ஒரு ஆச்சர்யம் தெரியுமா? இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த ஐடியா கொடுத்து செயல்படுத்தியவரே திடீர் துரோகி கருணாதானாம். இன்று இலங்கை அமைச்சரவையில் இவரே ஒரு அமைச்சராகிவிட்டார்.

புத்தரின் பல்லை பாதுகாக்கிற யாரும், அவரது சொல்லை பாதுகாப்பதாக காணோம்….

(இன்னும் தகவல்களுடன் சில தினங்கள் கழித்து வருவேன்….)

 

 

 

 

இலங்கை பயணம் -3

சற்று விநோதமாகதான் இருக்கிறது இலங்கையர்களின் உணவு பழக்கம்! அதுவும் ஓட்டல்களில்…? ஹைய்யோயப்பா! அதிகாலை 7 மணிக்கெல்லாம் சாதம், குழம்பு, சிக்கன், மாட்டுக்கறி ஐட்டங்களை பரப்பி வைத்துவிடுவார்கள். கையை வைத்தால் ஜில்லென்று இருக்கிறது. அரிசியும் சீரக சம்பாவுக்கு ஜுரம் வந்த மாதிரி இளைத்துப் போயிருக்கிறது. ஒரு வாய் உள்ளே போவதற்குள் நமக்கு நாக்கு தள்ளி விடுகிறது.

‘சூடா இல்லையா?’ என்றால், நம்மை வேற்று கிரக ஆசாமி போல பார்க்கிறார் சர்வர். நாம் போன இடத்திலெல்லாம் இதே ஜோலியாக இருந்தது.

கண்டியில் ஒரு ஓட்டலுக்கு வெளியே நின்று உள்ளே போகலாமா, வேண்டாமா என்று யோசிக்கிற நேரத்தில் உள்ளேயிருந்து ஓடி வந்தார் சர்வர். உணவகத்தின் பெயர் ‘புட் சட்னி’. சார்… வலைப்பேச்சு அண்ணனுங்கதானே நீங்க, உங்களை இங்க பார்ப்பேன்னு நினைக்கவே இல்ல? என்றவரின் குரலில் அநியாயத்துக்கு சந்தோஷம். வாங்க.. வாங்க.. என்று உள்ளே அழைக்க, நமக்கு மனம் கொள்ளா சந்தோஷம். தெரிஞ்சவராயிட்டாரு. அதுவும் நம்ம ஃபேன். ஒரு சிக்கன் பீஸாவது சூடா கிடைச்சுடும் என்று நினைத்தோம். பட்… அந்த நினைப்பில் மேலும் ஒரு ஐஸ் துண்டை அள்ளிப் போட்டார் அந்த ஃபேன்.

‘அண்ணே… காலையில் செய்யறதோட சரி. அதுக்கப்புறம் அதை சுட வைக்க மாட்டோம்’ என்றார். எல்லா ‘நான் – வெஜ்’ உணவிலும் நித்திலி கருவாட்டு எண்ணையை ஊற்றி விடுகிறார்கள். சமயங்களில் சில ஐட்டங்களில் அதை பொன் தூவலாக தூவியும் வைக்கிறார்கள். என்னை பொருத்தவரை அது பொண நாத்தம்!

இலங்கையிலிருந்த மூன்று நாட்களிலும் மதிய உணவு எனக்கு மட்டும் உவ்வே…ய்! நல்லவேளையாக கண்டியில் ‘பாலாஜி ஓட்டல்’ என்ற சொர்க்க வாசல் இருந்தது. காலையில் சுட சுட மசால் தோசை, பூரி, வடை, இட்லி என்று அசத்துகிறார்கள். ஒரு நாளை கடத்திய இரவும் காலையும் இந்த ஒரு ஓட்டல் காப்பாற்றியது என்னை. விலைதான் சொரேர்… ஒரு மசால் தோசை… 280 ரூபாய். இத்தனைக்கும் அது நம்ம ஊர் பாலாஜி பவன் ஸ்டேட்டஸ்சில்தான் இருக்கிறது. சாதாரண ஓட்டல்களில் கூட டீ 50 ரூபாய்.

கண்டியிலிருந்து கொழும்பு வந்தோம். கொழும்பு…. சுற்றுலா பயணிகளின் சொர்க்கம்தான். அதுவும் பணம் இருப்பவர்களுக்கு பிளாட்டினத்தில் செய்த பிஸ்கோத்து!

நம்மை வரவேற்ற நண்பர் அரவிந்தன் கொழும்பின் முக்கிய வீதியில் காபி ஷாப் வைத்திருக்கிறார். வாங்களண்ணா… என்று வாய் நிறைய அழைத்த அந்த இலங்கை தமிழ் இப்போதும் நெஞ்சில் ரிப்பீட் அடிக்கிறது.

‘அரவிந்தணன்னா… வாய்க்கு ருசியா கொஞ்சம் சாம்பாரும், சூடா நாலு இட்லியும் கிடைக்குமா?’ என்றேன். ‘அண்ணா… நேரம் கடந்திருச்சே. ஒரு தந்திரம் சொல்றேன். அதை செய்ங்கோ…’ என்றார். பேரதிர்ச்சியும் பெரும் கூச்சமுமாக கேட்டுக் கொண்டேன்.

அது என்ன? சொல்றேன்…

(இலங்கை பயணம் தொடரும்)

 

 

 

இலங்கை பயணம் -4

எல்லா மனுஷனுக்கும் சர்வ பெரிய சாத்தானே நாக்குதான்! ருசிக்கும் போதும் சரி, பேசும் போதும் சரி. லிமிட் தாண்டினால் ரிவிட் நிச்சயம். கண்டியிலிருந்து கொழும்பு வந்திறங்கிய அன்றைய ராத்திரி பதினொரு மணிக்கு சாத்தானின் உக்கிரம் சற்றே பலமாக இருந்ததால்தான் அரவிந்தனிடம் ருசியான இட்லியும், சாம்பாரும் கேட்டிருந்தேன்.

இந்திய உணவு வகை ஓட்டல்கள் யாவும் கல்லா கட்டி விட்டு கட்டிலை விரித்து கொட்டாவி விடுகிற நேரத்தில் அவர்தான் என்ன செய்வார்? அந்த ஐடியாவை தயங்கி தயங்கி சொன்னார். அவர் தூய தமிழில் சொன்னதன் சாராம்சம் இதுதான்.

இங்கிருந்து சுமார் நாலு கி.மீ தொலைவில் ஒரு கேஸினோ இருக்கிறது. அதாவது சூதாட்ட கிளப்! அவர்களின் ஒரே டார்க்கெட் இந்தியர்கள்தான். அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டு பணக்காரர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள். லட்சங்களை இறைத்துவிட்டு ஆயிரங்களை அள்ளிக் கொண்டு கிளம்பினாலும், அந்த சோகம் அவர்களை ஒன்றும் செய்யாது. மறுபடி மறுபடி வருவார்கள். மறுபடி மறுபடி சூதாடுவார்கள். மறுபடி மறுபடி தோற்பார்கள். மறுபடி மறுபடி குடித்து குடித்து என்ஜாய் ஆவார்கள்.

சரி… நான் கேட்ட இட்லிக்கும் சாம்பாருக்கும் இங்கென்ன தீர்வு இருக்கிறது?

இந்த சூதாட்ட கிளப்பில்தான் விடிய விடிய இட்லி, பொங்கல், பூரி, வடையுடன் சிக்கன் ப்ரை, மட்டன் குழம்பு, சட்னி மற்றும் சாம்பார் ஐட்டங்களை சுட சுட வழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள். அவ்வளவும் மதுரை, காரைக்குடி மெஸ்களையே எச்சில் ஊற வைக்கிற ரகம். சொற்ப காசை வைத்து சூதாடிவிட்டு சுட சுட சாப்பிட்டு வாங்களேன்…

அரவிந்தன் சொன்ன ஐடியா சூப்பர். ஆனால், நமக்கும் சரி… நம்முடன் வந்த நண்பர்களுக்கும் சரி. சூதாட்டம் என்பது சுத்தமாக ஆகாது. நாக்கு போ போ என்றது. நடு மண்டை நோ நோ என்றது. மண்டைக்கும் நாக்குக்கும் நடந்த மாஸ் சண்டையில் இறுதியில் நாக்கே வெல்ல, நமக்காக அரவிந்தன் ஏற்பாடு செய்திருந்த அந்த 98 லட்ச ரூபாய் காரில் ஏறி கேஸினோ வாசலில் இறங்கினோம்.

வந்திறங்கிய காரும், மேல் பாக்கெட்டில் சொருகப்பட்டிருந்த பாஸ்போர்ட்டின் ஒரு முனையும் வாசலில் நின்ற அழகழகு செக்யூரிடி குயின்களை மேலும் புன்னகைக்க வைத்தது. உள்ளே போங்க… என்று அன்போடு அனுப்பி வைத்தார்கள்.

உள்ளே… நன் பகலா, நடு இரவா என்பதே தெரியாதளவுக்கு சூரியன்களை ஆங்காங்கே தொங்க விட்டிருந்தார்கள். ஒரே வெளிச்சம் வெளிச்சம். திரும்பிய திசையெல்லாம் பேரழகிகளும் கைகளில் மதுக்கோப்பையோடு நின்றார்கள். சும்மாயில்லை… விளையாடிக் கொண்டிருக்கும் ஆண்களின் தோளில் தொங்கிக் கொண்டு… முதுகில் ஏறிக் கொண்டு…! அந்த பணக்கார பிக் பாஸ்களின் புண்ணியத்தில் அந்த குடிக் கோப்பை நிரம்பிக் கொண்டேயிருக்கிறது. குடித்துக் கொண்டே இருக்கிறார்கள் பெண்கள்.

இப்போது நாக்கு மக்கர் பண்ண ஆரம்பித்தது. கண்ணுக்கு உணவு கிடைத்த பின்பு, நாக்கென்ன பெரிய நாக்கு. போடா போக்கத்த நாக்கே… என்று சுருட்டி உள்ளே வைத்து விட்டு கண்கள் இரண்டையும் வெளியே தள்ளிக் கொண்டிருந்தேன். இப்போது என் இரு கண்களும் லைட் ஹவுஸ் ஆகியிருந்தது.

“சாப்ட்டு வந்து பார்த்துக்கலாம். முதல்ல வாங்க” என்ற நண்பர்கள், முதல் புளோரில் அமைந்திருந்த விருந்து கூடத்தை நோக்கி நகர… மனசில்லாமல் நானும் அவர்கள் பின்னாலேயே நடந்தேன். அப்போதுதான் அந்த மின்சார ஷாக்!

குடித்துக் கொண்டிருந்த இளம் பெண் ஒருத்தி, தன் வெண்டைக்காய் விரல்களால் என் ஸோல்டரில் கை வைத்து என்னவோ சொன்னாள்… மட்டுமா, ஸோல்டரோடு என்னை இழுத்தாள். அவள் பேசியது சிங்களமா, தமிழா, இந்தியா… ஏதோவொன்று. நான் திரும்புவதற்குள், காதுக்குள் வந்து சொன்னார் சக்தி.

அண்ணே… நிக்காம வாங்க!

(இலங்கை பயணம் தொடரும்)

 

 

இலங்கை பயணம் -5

அந்த வெண்டைக்காய் விரல்களால் என் ஸோல்டர் 2000 ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தை இழுக்கிற எலக்ட்ரிக் ஹோல்டர் போலானதை பற்றியெல்லாம் சக்திக்கு கவலையே இல்லை போல. ‘அண்ணே.. திரும்பி பாக்காம வாங்க’ என்றாரல்லவா? அவர் ஏன் அப்படி சொன்னார் என்பதை பிறகு பார்ப்போம்.

முதலில் இந்த கேஸினோவின் அருமை பெருமைகளை சொல்லிவிடுவது நல்லது. இந்த சூதாட்ட கிளப்புக்கு ரெகுலர் கஸ்டமர்கள் நம்ம கோடம்பாக்கத்திலேயே நிறைய பேர் இருக்கிறார்களாம். நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என்று வாரத்திற்கு இரண்டு முறையாவது அங்கு விசிட் அடித்துவிடுவார்களாம். இவர்களை ஸ்பெஷல் டிக்கெட் போட்டே அழைக்கிறதாம் இந்த சூதாட்ட கிளப். இவர்களுக்கு பிரிமியம் கார்டு, கோல்டு கார்டு என்று தரம் பிரித்து கொடுப்பதுடன், புது மாப்பிள்ளை ரேஞ்சுக்கு மரியாதையையும் அள்ளி அள்ளி கொடுத்து வருகிறதாம் கிளப். (எல்லாமே பிற்பாடு நாம் விசாரித்து அறிந்து கொண்ட தகவல்)

நாம் உணவுக் கூடத்தை நோக்கி போய் கொண்டிருந்தபோதே இரண்டு கண்கள் எங்களை உற்று நோக்கியது போல ஒரு ஃபீலிங். உற்றுப் பார்த்த கண்களை அதே கண் வேகத்துடன் ஜும் செய்தால், படக்கென வேறு பக்கம் ஒரு ரோபோவைப் போல திரும்பிக் கொண்டார் அந்த சிரிப்பு நடிகர். இவனுங்க எதுக்கு இங்க வந்தானுங்க என்பதை போல இருந்தது அந்த பார்வை. நேருக்கு நேர் பார்த்தாலும் சிக்கல். போய் எதையாவது எழுதி தொலைச்சுருவானுங்க. அதனால் கண்டுக்காம இருப்போம் என்று நினைத்திருக்கலாம். அரை வினாடியில் ஆளே எஸ்கேப்.

வந்த வேலையை முடித்துக் கொண்டு கீழே இறங்குவதற்குள், போன புள்ளைங்க என்னாச்சோ, ஏதாச்சோ… என்கிற அச்சத்தோடு ஸ்பாட்டுக்கே வந்துவிட்டார் அரவிந்தன். ‘ஓசி சோறு உடம்புக்கு ஆகாது. காசு இருக்கு. கைத் திறமையை காட்டுங்க’ என்று நாம் சூதாடும்படி கேட்டுக் கொள்ள… ‘இதே கேஸினோவுல நான் விட்ட காசுக்கு இன்னும் நாலு தலைமுறைக்கு இவனுங்க ஓசி சோறு போடணும். கூச்சத்தை விட்டுட்டு வாங்கண்ணே…’ என்று அப்படியே எங்களை ‘ட்டோ…’ செய்தார்.

எக்ஸிட் ஆகிற நேரம். மீண்டும் அதே அழகு டோல்கேட்!

மனோபாலா மாதிரி ஒருவரும், பாலாசிங் மாதிரி இன்னொருவரும் உள்ளே வர… அதே மின்னல் பெண்கள் அவர்களையும் கண்ணால் தொட்டார்கள். கைகளால் இழுத்தார்கள். துவண்டார்கள். மிரள விட்டார்கள். எல்லாம் பிசினஸ் ட்ரிக்!

அண்ணே… இங்க வர்றவனெல்லாம் டாலர்ல கண் விழிச்சு, யூரோவுல பல் விளக்குறவனுங்க! நம்மள்லாம் உண்டியல்ல விழுந்த ஒத்த ரூவா. ‘அவ கூப்பிட்டான்னு நீங்களும் போவப் பார்த்தீங்க’ என்றார் சக்தி.

‘சரியாப்போச்சு… கூப்பிடுற இடத்துக்கெல்லாம் போறதுக்கு நான் என்ன கோபால்சாமி வகையறாவா?’ என்று சொல்லிவிட்டு சிரித்தேன்.

‘இதைவிட பிரமாதமான ஒரு என்டர்டெயின்ட்மென்ட் இருக்கு. போறீங்களா?’ என்றார் அரவிந்தன்.

பேசாம இந்த ஊருக்கு ‘கொழும்பு’ன்னு பேரு வச்சதுக்கு பதிலா ‘கொழுப்பு’ன்னு வைக்க சொல்லுங்களேன் என்றேன். ஏனென்றால், அவர் சொன்ன அந்த ஸ்பாட்டில் அப்படி துள்ளின மீன்கள்!

(இலங்கை பயணம் தொடரும்)

 

 

 

 இலங்கை பயணம் -6

கொழும்பில் இயங்குகிற சூதாட்ட விடுதிகள், இளம் பெண்கள் ஆடுகிற ‘பப்’ கள் போன்றவற்றை மகிந்த ராஜபக்சேவின் மகன்தான் நடத்தி வருகிறாராம். (அரளி செடியில் அல்லியா பூக்கும்? கரெக்டுதான்!) பட்… இலங்கையில் வியப்பதற்கு நிறைய இருக்கிறது. முதலில் அதை சொல்லிவிட்டு அந்த தங்க மீன்கள் ஸ்பாட்டுக்கு போகலாமா?

சென்னை உயர்நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் ஒரு கேள்வி கேட்டிருக்கிறது. ‘வண்டி ஓட்டிக் கொண்டே செல்போனில் பேசுகிறவர்களிடமிருந்து செல்போனை பறித்தாலென்ன?’ என்பதுதான் அந்த கேள்வி. ஒரு நான்கு நாட்களுக்காவது லீவு போட்டு விட்டு இலங்கை பக்கம் எட்டிப்பார்க்க சொல்லலாம் நம்ம ஊரு அதிகாரிகளை!

அங்கு சீட் பெல்ட் அணியாமல் ஒருவரும் காரை ஸ்டார்ட் பண்ணுவதில்லை. ஐந்து வயசு பிஞ்சுக் குழந்தையாக இருந்தாலும் ஹெல்மெட் அணிவிக்காமல் டூ வீலரை இயக்குவதேயில்லை. குடித்துவிட்டு ஸ்டியரிங்கை தொடுபவர்கள் இல்லவே இல்லை. ஏன்? குமட்டுல இடிச்சு, குடல்ல நசுக்குற வழக்கமெல்லாம் அதிகாரிகளுக்கு இல்லை. மாறாக ஒன்றே ஒன்று செய்கிறார்கள். குடித்துவிட்டு வண்டி ஓட்டினால் ஸ்பாட்டிலேயே லைசென்ஸ் காலி. இம்மீடியெட் அரெஸ்ட். அது மட்டுமா…? சென்னையில் சிக்குகிறவனை கன்னியாக்குமரி கோர்ட்டுக்கு அலைய வைக்கிறார்கள். கன்னியாக்குமரியில் சிக்குகிறவன் அங்கிருந்து குறைந்தது ஐநூறு கிலோ மீட்டர் தள்ளியிருக்கிற கோர்ட்டுக்கு விரட்டுகிறார்கள். ரெண்டு முறை போய் வந்தால் தலா ஐயாயிரம் காலி. அலைச்சல் வேறு. எவன் சீட் பெல்ட்டை மறப்பான்? எவன் குடித்துவிட்டு வண்டியை எடுப்பான்?

தெருவில் மேய்கிற மாடுகள், கண்ட இடத்திலும் புழுக்கை போடும் ஆடுகள், எங்கும் நடமாடவில்லை. நாங்கள் தங்கிய அந்த நான்கு நாட்களும் எந்த இடத்திலும் ஒரு பிச்சைக்காரர் கூட தென்படவில்லை. பேனர் இல்லை. போஸ்டர் இல்லை. கொடி, தோரணம் இல்லை இல்லை. மொத்தத்தில் நாட்டை அழுக்காக்குகிற எந்த அசிங்கமும் இல்லை. எங்கோ ஓரிடத்தில் மைத்ரி சிறிசேனா வினைல் ஒன்றும், ராஜபக்சே வினைல் ஒன்றும் தென்பட்டது.

இந்த ‘இல்லை’ லிஸ்ட்டில் முக்கியமாக சொல்ல வேண்டியது இன்னொன்றும் இருக்கிறது. நடிகனை தலைவனாக கொண்டாடும் கூட்டம் அங்கு இல்லவே இல்லை. மொத்த இலங்கைக்குமே 150 ப்ளஸ் தியேட்டர்கள்தான். அவ்ளோ பெரிய கண்டி மாநகரத்தில் ஒரு சில தியேட்டர்தானாம். மாதத்திற்கு இரண்டு நாட்கள்தான் தமிழ் படமே ஓடுகிறது. அதுவும் பேட்ட, விஸ்வாசம் மாதிரியான பெரிய ஹீரோக்களின் படங்கள்.

டிவியில ஓட்றதுக்கு புட்டேஜ் வேணுமே, படங்கள் இல்லாவிட்டால் வேறு எதை போட்டு ஓட்டுவார்கள்? இருக்கவே இருக்கிறது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இசை ஆல்பங்கள். முகம் தெரியா ஆட்கள் பாடுகிறேன் பேர்வழி என்று கொன்றெடுக்கிறார்கள்.

ஆங்… சொல்ல மறந்தாச்சு. அந்த ஊர் நயன்தாரா நமக்கு பரிச்சயமான பூஜாதான். ஒரு கல்லூரி விளம்பர வினைல் ஒன்றை 100 கி.மீ தள்ளி ஓரிடத்தில் பார்த்தேன். பூஜா பூத்திருந்தார் அதில்!

(இலங்கை பயணம் தொடரும்)

 

 

 

 இலங்கை பயணம் -7

‘மது வாந்தி’ இல்லாமல் ஒரு ‘மன சாந்தி’ இருக்கிறதா? போங்கண்ணே… நீங்களும் உங்க பயணக்கட்டுரையும் என்று அலுத்துக் கொண்ட அன்பு நண்பர்கள் இலங்கையின் டாஸ்மாக்குக்கு இதயத்தை தொலைக்க கடமைப்பட்டவர்கள். புத்தி பேதலிக்கிற இடங்களில் கூட ‘சுத்திப்போடுகிற’ அளவுக்கு சுத்தம் காக்கிறார்கள் மது பிரியர்கள். அருகிலிருக்கும் படம் வெள்ளவத்தை என்ற இடத்திலிருக்கும் ஓயின் ஷாப். அரசாங்கமே நடத்துகிற மதுக்கடைதான் அதுவும். ஒரே ஒரு ஜன்னல் கம்பிக்குள் ஓராயிரம் கைகளை நீட்டி, குய்யோ முய்யோ என்கிற கூச்சலெழுப்பும் வேலையே இல்லை அங்கு. டீசன்ட் தம்பிகளாக இருக்கிறார்கள் அனைவரும்.

தமிழகத்தின் சதவீதத்தோடு இலங்கை குடிபிரியர்களின் சதவீதத்தை கணக்கிட்டால், கூட்டல் கணக்கே குமுறி செத்துவிடும். அப்படியிருக்கிறது படு சுமாரான கூட்டம். அங்கு குடித்துக் கொண்டிருந்த ஒரு சரக்கரிடம் ‘இங்கு டூப்ளிகேட் சரக்கு விற்கப்படுகிறதா?’ என்றேன். ‘டூப்ளிகேட்டா, அப்படின்னா?’ என்றார். மறுநாள் காலை மண்டை கனத்தோடு எழும் அத்தனை குடிகாரர்களுக்குமான சாட்டை சொல் அது. ஹ்ம்… தமிழ்நாடு இந்த கேடுகெட்ட விஷயத்தில் கூட குணம் காக்கவில்லையே குடிமக்கா?

இலங்கையின் எல்லா அரசு பலகையிலும் முதலில் சிங்களம், அதற்கப்புறம் தமிழ், மூன்றாவதாகதான் ஆங்கிலம் என்று மொழி ஆதிக்கம் செலுத்துகிறது. இத்தனைக்கும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டால், முதலில் ஆங்கிலத்தை வைத்தால் கூட தப்பில்லை. அவ்வளவு வெள்ளைத் தோலர்கள் எங்கு பார்த்தாலும் திரிகிறார்கள். அறிவிப்புகளில் காணப்படும் தூயத் தமிழ் அற்புதம் அற்புதம்!

இலங்கை ஏர்போர்ட் இமிகிரேஷன் பகுதியில் வினோதமான ஒரு அறிவிப்பு பலகை தென்பட்டது. அதன் கீழே மூன்று நாற்காலிகள். அதில் ‘மத குருமார்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று எழுதப்பட்டிருந்தது.

எனக்கென்னவோ நம் ஊரு டாஸ்மாக்கில் ஐயப்ப சாமிகளுக்கு ஒதுக்கப்பட்ட டம்ளர்கள் தான் நினைவுக்கு வந்தன!

(இலங்கை பயணம் தொடரும்)

3 Comments
  1. Gnaavel says

    Andhanan enru peyar vaiththukkondu asaiva itengalaich chaappiduvadhu patrich cholli, andhanargalai avamadhikkireergale/

  2. Gnaavel says

    en karuththai veliyida dhairyam illaiyaa?

  3. Zafri says

    waiting for the next article about srilanka

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Airaa | Megathoodham Lyrical

https://www.youtube.com/watch?v=S7hNNqGeHfs

Close