சிறை மீண்ட பவர் ஸ்டாரும் அயர்ன் லேடி கிரண்பேடியும் ஒரே மேடையில்! -ரசிகர்களை மிரள வைத்த திகார் விழா

என்ன பஞ்சாயத்தோ, தெரியல. சரியாக கோர்த்துவிட்டு வேடிக்கை பார்த்தார் பேரரசு. அவரது ‘திகார்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அயர்ன் லேடி இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, திகார் சிறையின் முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பேடி சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அதே மேடையில் சிறைக் களிக்கு அஞ்சாத சிங்கம் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கும் இருக்கை இருந்தது. வம்படியாக இருவரையும் அருகருகில் அமரவைத்து படம் பிடித்தார்கள் பத்திரிகை போட்டோகிராபர்கள். தர்ம சங்கடம் என்பார்களே, அதை தன் ‘பளிச்’ சிரிப்பால் மூடி, அதற்கு மேல் ஒரு ரோஜா செடியையும் நட்டு வைத்தார் பவர் ஸ்டார்.

‘எல்லாரும் திகார் சிறையை வெளியில இருந்துதான் பார்த்திருப்பாங்க. ஆனால் அந்த சிறைக்கு போய், பல ஆராய்ச்சியெல்லாம் பண்ணிட்டு இங்கு வந்திருக்கார் பவர் ஸ்டார்’ என்று டைரக்டர் பேரரசு அவருக்கு லீட் கொடுக்க, விழுந்தடித்துக் கொண்டு சிரித்தது மொத்த கூட்டமும். ஏன் சிரிக்கிறார்கள் என்று புரியாமல் திகைத்த கிரண்பேடிக்கு பவர் ஸ்டாரின் லீலைகளையும் திகார் அனுபவங்களையும் கிரண்பேடிக்கு படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சந்திரசேகரன் மொழிபெயர்த்து சொல்ல, ஒரு புன்சிரிப்புடன் பவரை நோக்கினார் அவர்.

இருந்தாலும் தைரியமாக மைக்கை பிடித்த பவர், படபடவென பேச ஆரம்பித்தார்.

“ஃபங்ஷனுக்கு வாங்கன்னு கூப்பிட்டு உக்கார வச்சி இப்படிலாம் பண்ணக் கூடாது. இந்த நிகழ்ச்சிக்கு நான் வரணுமா, வேணாமான்னு யோசிச்சேன், எதையாவது கிண்டல் பண்ணுவாங்க, இருந்தாலும் பரவாயில்லை வருவோம்னு வந்தேன். எல்லாத்தையும் பார்த்துட்டோம், இதையும் பார்த்துடுவோம்னுதான் வந்தேன். ரமேஷ்கண்ணா சார், வெங்கடேஷ் சார்லாம் சொன்னாங்க. டெல்லிலாம் பரபரப்பா இருக்கும்னாங்க, அப்படிலாம் ஒண்ணுமேயில்லீங்க. திடீர்னு ஒரு நாள் நைட்டு 12 மணிக்கு டெல்லிக்கு கூட்டிட்டு போனாங்க. எதுக்குன்னு கேட்டேன், விசாரணைன்னு சொன்னாங்க. ஏங்க, முதல்லயே சொல்லக் கூடாது செலவுக்கு பணம்லாம் எடுத்து வச்சிருப்பேனேன்னு கேட்டேன்.

முதல்ல கொஞ்சம் யோசிச்சேன், எதுக்கு டெல்லிக்கு கூட்டிட்டு போறாங்க…தூக்கு ஏதாச்சும் போட்டுருவாங்களோன்னு…என்னதா ஆகுதுன்னு பார்ப்போமேன்னு கிளம்பிட்டேன். நான் வேணும்னே எந்தத் தப்பும் பண்ணலை, கூட இருந்தவங்க பழிவாங்கிட்டாங்க. கோடிக்கணக்கான ரூபாயை இழந்து, கோடிக்கணக்கான பொருளை இழந்து , இன்னைக்கு நான் இந்த இடத்துல இருக்கன்னா, அதுக்குக் காரணம் கடவுள்தான்.

டெல்லி ‘திகார்’ ஜெயில்ங்கறது உண்மையிலேயே நல்ல ஜெயில். இந்தியாவிலேயே எந்த ஜெயில்லயுமே ஐஸ் க்ரீம், கூல்டிரிங்ஸ், இதெல்லாம் கிடைக்காது, ஆனால் அங்க கிடைக்கும். என்னை நைட்டு எட்டு மணிக்கு கொண்டு போய் விட்டாங்க. ஒண்ணுமே தெரியலை, ஒரு ரூம் கொடுத்தாங்க, அங்க ரெண்டு பேர் படுத்திருந்தாங்க. என்னடா இதுன்னு யோசிச்சேன். நான் உண்மையிலேயே கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும், அங்க திகார் ஜெயில்ல இருக்கிற 1200 போலீசும் எனக்கு ரசிகரா மாறிட்டாங்க. அவங்க கிட்ட முதல் கேள்வி என்ன பவரு இங்க எதுக்கு வந்திருக்கீங்க, ஏதாச்சும் ஷுட்டிங்கான்னாங்க. நாம பொய் சொல்ல முடியாது, எப்படியும் 20 நாளாச்சும் இருந்தால்தான் பெயில் கிடைக்கும். ‘இல்ல…அப்படி..ஒரு வழக்கு விஷயமா வந்திருக்கன்னு சொன்னேன்…

பரவாயில்லை பவரு..இங்க இருக்கிறதப் பத்தி போய் படம் எடுங்கன்னாங்க. உங்க கூட ரூம்ல நைட்டு படுத்திருந்தது யாரு தெரியுமான்னு கேட்டாங்க, அவங்க கற்பழிப்பு கேஸ்ல உள்ள வந்தவங்கன்னாங்க…அப்பாடா…நம்மள விட்டாங்கடா சாமின்னு..நினைச்சேன். ஒரு நாள் இன்னொரு செல்லுக்குப் போனேன், அங்கப் பார்த்தால் பெரிய பெரிய முதலைங்க..சாதாரணமான ஆளுங்க கிடையாது. என்னைக் கேட்டாங்க, என்ன விஷயம்னு, இல்லங்க இந்த மாதிரி சின்ன விஷயம்ங்கன்னு சொன்னேன். என்னது சின்ன விஷயமா, நான் எவ்வளவு போட்டிருக்கேன் தெரியுமா…இரண்டாயிரம் கோடி..நான் கடப்பாரை…நீ குண்டூசி..ன்னாங்க.

எதுக்கு இத சொல்றன்னா, ஒவ்வொரு இடம் போகும் போதும், நமக்கு விதவிதமான அனுபவம் கிடைக்குது. இந்தியால எங்கு சென்றாலும் என்னால சமாளிக்க முடியும். நான் எல்லாத்தையும் விட்டுட்டேன், என் ரசிகர்கள்ல ஒருத்தன் சொன்னான், தலைவா நீ உள்ள போ, உனக்கு உயிரே கொடுப்பன்னான், ஆனால், ஒரு பாட்டில் தண்ணி கூட கொடுக்கலை என்று முடித்தார் ஆடியன்சின் ஆரவாரமான கைத்தட்டல்களுக்கிடையில்.

திகார் படத்தின் பாடல்கள் அடங்கிய சி.டியை கிரண்பேடி வெளியிட, சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.ஊ.சி யின் பேரன் சிதம்பரம் பிள்ளை பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினிக்கு தனியாக ஒரு சிறப்பு பரிசே கொடுக்கலாம். திடீரென நான் பேசுறதை நீங்க மொழி பெயர்த்துருங்க என்று கிரண் பேடி கேட்டுக் கொள்ள, எவ்வித அச்சமும் இல்லாமல் அதை மொழி பெயர்த்த விதமும், நிகழ்ச்சியை தொகுத்தளித்த விதமும் அருமை.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
லிங்காவை வாங்கிய வேந்தர். சுற்றி வளைத்து உள்ளே வந்தது லைக்கா? வேர் இஸ் வேல்முருகன்?

துக்குனா தும்பிக்கை, இறக்குனா இடி என்று அதிரடியாக தயாராகிக் கொண்டிருந்த ‘லிங்கா’, வேக வேகமாக ரன் எடுத்து க்ளீன் யூ சர்டிபிகேட்டும் வாங்கிவிட்டதாம் சென்சாரில். இனி பிரமாண்டமான...

Close