ஸ்ஸ்ஸ்ஸ்… ஓவர் மேக்கப்புப்பா! ஹீரோயினை கலாய்த்த ஹீரோ
வில்லன் பவனுக்கு இப்போதுதான் முக ‘விலாசம்’ வந்திருக்கிறது. எப்பவோ ஹீரோவாக பிரமோஷன் ஆகியிருக்க வேண்டியவர், இப்போதுதான் ‘விலாசம்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தை இயக்குகிறார் பா.ராஜகணேசன். எழுதுவது கூட சுலபம். எழுதியதை சுமப்பதற்கு நடிகர் நடிகைகளை பிடிப்பதுதான் குதிரை கொம்பு. இந்த படத்தில் பவனுக்கு ஜோடியாக நடிக்க யார் யாரையோ வலை வீசித் தேடிக் கொண்டிருந்த ராஜகணேசன், ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில் குமாரை தேடி அவரது அலுவலகத்திற்கு போனாராம்.
அங்கேதான் இந்த சனம் வந்திருந்தார். ஏன் அவர் ஆபிசுக்கு இவர் போக வேண்டும்? இவருக்கும் அவருக்கும் என்ன கனெக்ஷ்ன் என்பதையெல்லாம் கிசுகிசு எழுத்தாளர்கள் அலசி ஆராய வேண்டிய துப்பு ஏரியாவாச்சே? இந்த படத்தின் பிரஸ்மீட்டில் இந்த கேள்வியையும் வைத்தார்கள். எப்படியோ பதில் சொல்லி தப்பித்தார் யு.கே. செந்தில் குமார். அங்கே வந்திருந்த சனம் டைரக்டர் கண்ணில் பட அவரையே ஹீரோயினாக்கிவிட்டார் ராஜகணேசன்.
‘இந்த பொண்ணு நல்ல கலர்ங்க. ஆனா ஏன்தான் அவ்வளவு மேக்கப்புன்னு தெரியல. படத்துல டூயட் சாங்ல அவங்க மேலேயிருக்கிற பவுடரெல்லாம் என் சட்டையிலதான் இருந்திச்சுன்னா பாருங்களேன்’ என்றார் பவன். அவர் சொல்லி முடிக்கையில் வெட்கத்தால் மேலும் சிவப்பானது சனத்தின் ஃபிகர். இன்னொரு ஹீரோயினான சுஜிபாலா, அண்மையில் ஒரு இயக்குனருடன் இணைத்து பேசப்பட்டவர். இருவருக்கும் முட்டிக் கொண்டு போலீஸ் விசாரணை என்று போய் கொண்டிருக்கிறது பிரச்சனை. இந்த நேரத்தில் அவரை சூழ்ந்து கொண்ட மீடியாக்களிடம், அந்த சம்பவம் பற்றியெல்லாம் எதுவும் கேட்காதீங்க என்றார் அழாத குறையாக. இருந்தாலும் படத்தில் இவர் ஆடியிருக்கும் ஒரு குத்தாட்டம், கவலையே இல்லாதவரை போல காண்பித்தது சுஜிபாலாவை.
இனிமே தொடர்ந்து ஹீரோவாகதான் நடிப்பீங்களா என்றால், ஆமாம்… என்றார் பவன். எல்லாம் விலாசத்தின் மீது இருக்கிற நம்பிக்கை!