ரஜினி, கமல், அஜீத், விஜய்… டாப் ஹீரோக்கள் யாரும் எட்டிப்பார்க்காத அம்மா ஆதரவு உண்ணாவிரதம்!
மிக மிக அசாதரணமான சூழ்நிலைதான் இது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படாத திரையுலகம் அவதியை சந்திக்க நேரும் என்பதை இங்கிருக்கிற அனைவரும் உணர்ந்தேயிருக்கிறார்கள். அதன் விளைவாக இருக்கலாம். அல்லது உளப்பூர்வமான ஆதரவாக கூட இருக்கலாம். மக்கள் முதல்வர் (?) ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் தமிழ் திரையுலகம் சார்பில் இன்று சென்னை விருந்தினர் மாளிகை எதிரே மிகப்பெரிய உண்ணாவிரதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதைப்போலவே தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினரும் தங்கள் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இந்த ‘மவுன’ உண்ணாவிரதம் ஒரு நாள் மட்டுமான அடையாள உண்ணவிரதம்தான். பொதுவாகவே இதுபோன்ற உண்ணாவிரத நேரங்களில் மைக் அமைக்கப்பட்டிருக்கும். அதன் முன் வந்து எல்லா நடிகர் நடிகைகளும் தங்கள் கருத்துக்களை ஆவேசத்தோடும், அல்லது அமைதியான முறையிலும் வெளிப்படுத்துவார்கள். சிலர் உணர்ச்சிவயப்பட்டு பேசி, வம்பை விலைக்கு வாங்கிக் கொள்வதும் உண்டு. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ‘மவுன’ உண்ணாவிரதம் என்று கூறியிருக்கிறார்கள்.
அதற்குள், ‘நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நடக்கும் இந்த உண்ணாவிரதம் சட்ட விரோதமானது. நீதிமன்ற அவமதிப்புக்குள்ளானது. இதற்கு அனைவரும் பதில் சொல்ல நேரிடும்’ என்றெல்லாம் புரளியை கிளப்பிவிட்டுவிட்டார்கள் கோடம்பாக்கத்தில். அப்புறமென்ன? எங்கேயோ விழுந்த கல்லுக்கு, இங்கேயே உச்சா போய்விடுகிற காக்காய் போல பறந்தடித்து பதுங்கிவிட்டார்கள் பலர்.
நடிகர் சங்கம் சார்பாக சரத்குமார், ராதாரவி, ராமராஜன் உள்ளிட்ட சொற்ப நடிகர்கள் மட்டும் வந்திருந்தார்கள் . ஒருவேளை உண்ணாவிரதம் முடிகிற நேரத்தில் மார்க்கெட்டில் இருக்கும் முன்னணி நடிகர்கள் வருவார்களோ என்னவோ? நாம் விசாரித்தவரை ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, விஷால், கார்த்தி உள்ளிட்ட ஒருவரும் இங்கு வரப்போவதில்லையாம். (விஜய் வராவிட்டாலும் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் வந்திருக்கிறார்)
இதுவே அம்மா வெளியில் இருந்திருந்தால்? (இப்படிதான் குந்துனாப்ல கிரைண்டர் சுவிட்சை போட்டூட்டு போயிருவானுங்க இந்த மீடியாக்காரனுங்க… ! ஃபீலிங்ஸ்?)