‘என் கதையை திருடிட்டாங்க… ’ அஜீத்தின் என்னை அறிந்தால் படத்திற்கும் சிக்கல்?
‘இனிமே யாராவது இப்படி கௌம்பி வந்தீங்க? அவ்ளோதான்…’ என்று விஜயகாந்தின் நாக்கை இரவல் வாங்கிக் கொண்டு துருத்த ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கம். ‘கதை திருட்டு குற்றம் சாட்டுகிறவர்களுக்கு எதிராக எங்க நடிகர் சங்கம் மொத்தமும் ஒரே குரல் கொடுப்போம்’ என்று சமீபத்தில்தான் சங்க தலைவர் சரத்குமார் கூறியிருக்கிறார். அதற்குள் ‘என்னை அறிந்தால்’ கதை என்னோடது என்று கூறிக் கொண்டு சுற்றி வர ஆரம்பித்திருக்கிறார் ஒரு உதவி இயக்குனர்.
ஆனால் அர்த்த ராத்திரியில கனவு கண்டு அந்த நிமிஷமே மறந்து போன நிலைமைதான் அவருக்கு. ஏன்? ஆதாரம் இல்லீங்ணா ஆதாரம் இல்ல… ! கவுதம் மேனன் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி சில படங்களை தயாரித்தார் அல்லவா? (நடுநிசி நாய்களை அவ்வளவு சீக்கிரம் மறந்திர முடியுமா? அது புடுங்குன புடுங்கு கொஞ்சமா நஞ்சமா?) அந்த நேரத்தில்தான் இந்த உதவி இயக்குனர் கவுதம் மேனனின் உதவியாளரிடமும், அவரது தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு பெண்மணியிடமும் இந்த கதையை சொன்னாராம். அப்போது கவுதம் இருந்த நிலைமையில் படத்தை தொடங்கவே முடியவில்லை.
இப்போது ‘என்னை அறிந்தால்’ படத்தின் கதையை பற்றி கேள்விப்படுகிற போது அது தன் கதையா இருக்குமோ என்று சந்தேகப்படுகிறாராம் அந்த உதவி இயக்குனர். ஆனால் இவர் பஞ்சாயத்துக்கு போகிற இடத்திலெல்லாம், ‘நீ கதை சொன்னதுக்கு ஆதாரம் இருக்காப்பா…?’ என்று கேட்டு கேட்டே விரட்டியடிக்கிறார்களாம்.
சிவ பெருமாளாவே இருந்தாலும், உச்சந்தலையில் ஏறி பிறையை பிடிச்சு தொங்காம விட மாட்டாய்ங்க போலிருக்கே?