சினிமாவுலகம் ஸ்டிரைக்! திட்டமிட்டபடி வருமா அஜீத் விஜய் படங்கள்?
“ஜுன் 1 ந் தேதியிலேர்ந்து இழுத்து பூட்றா எல்லாத்தையும்” என்று கட்டளையிட்டுவிட்டது விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம்.
பட வேலைகள் முடக்கம். ரிலீஸ் கிடையாது. படப்பிடிப்பு கிடையாது. எடிட்டிங், டப்பிங், மிக்சிங் என எந்தப்பணிகளும் நடக்கப் போவதில்லை.
தமிழ் திரையுலகத்தில் கிட்டதட்ட இருபது வருடங்களுக்கு பின் இப்படியொரு ஸ்டிரைக் வருகிறது. முன்பு படைப்பாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் நடுவே பிரச்சனை ஏற்பட்டு ஸ்டிரைக் வந்தபோது ஏராளமான தொழிலாளர்கள் அன்றாட சாப்பாட்டுக்கே அல்லாடினார்கள். அரசே அவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கியது. அந்தளவுக்கு மீண்டும் ஒரு பஞ்சம் வந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டாலும், இப்படியொரு அதிரடி நடக்காவிட்டால் தயாரிப்பாளர்கள் யாரும் நிம்மதியாக வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டது சங்கம்.
க்யூப் சிஸ்டம் மூலமாகதான் தியேட்டரில் படங்கள் போடப்பட்டு வருகின்றன. இதற்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்திய க்யூப் நிறுவனம், கட்டண குறைப்புக்கு செவி சாய்க்கவில்லை. வேறு ஏற்பாடுகள் செய்வதற்காகதான் இந்த ரிலீஸ் நிறுத்தம் என்றும் கூறுகிறார்கள். இது ஒருபுறமிருக்க… தமிழ்சினிமா இனிமேல் எதிர்பார்க்கும் முக்கிய படங்கள் இரண்டுதான். ஒன்று அஜீத்தின் விவேகம். மற்றொன்று விஜய்யின் 61 வது படம். இவ்விரண்டு படங்களின் ஷுட்டிங் இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த மாத இறுதிக்குள் அப்படங்களுக்கு போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நிறைவடைய சாத்தியமே இல்லை. ஸ்டிரைக் ஜுன் ஜுலை என்று தொடரும் பட்சத்தில், இந்த போஸ்ட் புரடக்ஷன் பணிகள் எப்போது நிறைவடைந்து…? எப்போது வெளிவந்து…?
ஒருவேளை தயாரிப்பாளர் சங்கம் வைத்திருக்கும் நிபந்தனைகளில் பாதி நடந்தாலும் கூட, இந்த ஸ்டிரைக் நடக்கப் போவதில்லை. அஜீத் விஜய் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்!
https://youtu.be/Wx8idKJKsfM