சிம்புவை தெரிந்தளவுக்கு கணிதமேதை ராமானுஜரை தெரியவில்லையே? இயக்குனர் ஞான.ராஜசேகரன் வேதனை!
பாரதி, பெரியார் என்று ஞான.ராஜசேகரன் இயக்கிய படங்கள் இரண்டும் தமிழ்சினிமாவின் பொக்கிஷங்கள். வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் வித்தை தெரிந்தவர்களில் ஞான.ராஜசேகரனுக்கு முதலிடம் கொடுக்க தயங்கியதேயில்லை தமிழ்சினிமா ரசிகர்கள். அதற்கப்புறம் அவரை தேடி வந்த எல்லா வாய்ப்புகளும் இதுபோன்ற வாழ்க்கை வரலாறு டைப் படங்களாகவே இருக்க நொந்தே போனார் அவர்.
‘நான் ஒரு தலைவரை பற்றி படம் எடுக்கணும்னா அந்த தலைவர் மீது எனக்கொரு ஈர்ப்பு வரணுமில்லையா? அப்படி வராத வரைக்கும் அந்த படத்தை எப்படி என்னால் உருவாக்க முடியும்? அதனால் அமைதியாக இருந்துவிட்டேன். அந்த நேரத்தில்தான் அமெரிக்காவிலிருக்கும் என் மகளும் மருமகனும் அவர்களுடைய நண்பர்கள் இருவரும் என்னை தேடி வந்தார்கள். அவர்களின் நோக்கம் ஒரு படம் எடுக்கணும். அது சமுதாயத்துக்கு பயன்படுகிற மாதிரி இருக்கணும் என்பதுதான். என்ன மாதிரியான படமாக அது வர வேண்டும் என்று அப்போது நான் தீர்மானிக்கவில்லை. ஒரு ஹாலிவுட் படத்தில் ஒரு காட்சியை பார்த்து அசந்து போனேன். ஒருவன் இன்னொருவனை பார்த்து, ‘உன் மனசுல பெரிய ராமானுஜன்னு நெனைப்பா?’ என்று கேட்பான். நம் தமிழ்நாட்டில் பிறந்த ராமானுஜனை ஹாலிவுட் அப்படி கொண்டாடுகிறதே என்று தோன்றியது. அதற்கப்புறம் அவரை பற்றி படிக்க ஆரம்பித்தேன். அசந்து போனேன்.
அவரது கணித சமன்பாடுகள் பற்றி இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அவரால் உருவாக்கப்பட்ட ஈக்குவேஷன்ஸ்களில் பாதிதான் இப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் பாதி ஆராய்ச்சியிலிருக்கிறது. அவரது கணித அறிவை கண்டு வியக்க வேண்டிய நம் இந்தியர்கள் அவரை கேலிப்பொருளாகவே பார்த்த நேரத்தில், ஆங்கிலேயர்கள்தான் அவரது அறிவை வியந்து ஆராய்ச்சி படிப்புக்கு நிதியளித்து ஊக்குவித்தனர். ஒரு கட்டத்தில் இங்கு இவர்களின் கேலி பொருளாக இருப்பதை விட, வெளிநாட்டுக்கு சென்றுவிடுவதுதான் சரி என்று அங்கு கிளம்புகிறார் ராமானுஜன். 32 வயதிற்குள் ஏராளமாக சாதிக்கிறார். காசநோய் வந்ததால் இந்தியாவுக்கு வந்து இறந்தும் போகிறார். கடைசியாக அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகள் என்ன? அவரது இறுதி கால மருத்துவம் எப்படியிருந்தது என்பதையெல்லாம் கூட ஒரு புத்தகமாக எழுதி வைத்திருக்கிற அளவுக்கு அமெரிக்கர்கள் வியக்கிறார்கள் ராமானுஜரை.
ஆனால் நமக்குதான் அவரை பற்றி தெரியவில்லை. நான் சமீபத்தில் சில கல்லுரிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக போயிருந்தேன். ராமானுஜரை பற்றி கேட்டால் யாருக்குமே தெரியவில்லை. ஆனால் சிம்புவை பற்றி கேட்டால் உடனே சொல்கிறார்கள். அவரது லவ் ஸ்டேட்டஸ் வரைக்கும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் ரொம்ப கவலையாக இருக்கிறது என்றார் ஞான.ராஜசேகரன்.
இதுவரைக்கும் நான் எடுத்த படங்கள் எல்லாமே பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல சப்ஜெக்டுகளில் சமன் செய்து கொள்ள வேண்டிய அளவில் இருந்தது. முதன் முதலாக அந்த கவலை இல்லாமல் படம் எடுத்திருக்கிறேன். என் முந்தைய படங்களுக்கு மக்கள் தந்த வரவேற்பு இதற்கும் இருக்கும் என்று நம்புகிறேன் என்று ஞான.ராஜசேகரன் பேசி முடிக்கும் போது, ஒரு படைப்பாளியாக பளிச்சிட்டது அவரது முகம்.
அந்த ஒளி இருக்கும்வரை தமிழ்சினிமாவுக்கு இருட்டே கிடையாது.
முக்கிய குறிப்பு- படத்தில் ராமானுஜராக நடித்திருக்கும் அபினய் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பேரன். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை பாமா நடித்திருக்கிறார்.