விஜய்யின் ‘சூப்பர் ஸ்டார் ’ விழா கேன்சேல்! காரணம் என்ன? வெளிவராத பின்னணி தகவல்கள்…

‘ஆகஸ்ட் 15 ந் தேதி விஜய் வருவார்…. மதுரை நகரமே திருவிழா கோலமாக இருக்கும்’ என்று நம்பிய அவரது ரசிகர்களும், மதுரை மக்களும் இந்த செய்தியை படித்தால் ‘இதென்னடா மதுரைக்கு வந்த சோதனை?’ என்று திடுக்கிடுவார்கள். ஏன்? விஜய் அந்த விழாவை நடத்த வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இதையடுத்து விழா தொடர்பாக எடுக்கப்பட்ட முயற்சிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டிருப்பதாக தகவல் கசிகிறது.

பிரபல வார இதழான குமுதம் ‘அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?’ என்ற கருத்துக்கணிப்பை நடத்தி, அதில் விஜய் வென்றதாக அறிவித்தது. அதையடுத்து தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களிடையே ஏற்பட்ட முணுமுணுப்புகளை மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள் கூட நன்றாகவே அறிவார்கள். இந்த கருத்துக்கணிப்பின் தொடர்ச்சியாக பெரிய விழா எடுத்து சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய்க்கு வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தது குமுதம் நிர்வாகம். அதற்கான ஏற்பாடுகளை திறம்பட நடத்தித்தர ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவின் வேலை என்ன? விஜய்யை வாழ்த்துவதற்காக முன்னணி ஹீரோக்களையும் முக்கிய நடிகர்களையும் மதுரைக்கு அழைப்பதுதான். அப்படி அழைக்க கிளம்பிய போதுதான் விதவிதமான பதில்களை கேட்க நேர்ந்ததாம்.

பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர், ‘சார்… பல வருஷம் கழிச்சு இப்பதான் நான் அஜீத் படத்தில் நடிக்கிறேன். இந்த விழாவுக்கு நான் வந்தால் கண்டிப்பா அவரது கோபத்திற்கு ஆளாக நேரிடும். அதனால் என்னை விட்ருங்க’ என்றாராம். தமிழ்சினிமாவுக்கே பெருமை சேர்த்த நடிகர் ஒருவரின் வாரிசை இந்த விழாவுக்கு அழைத்தார்களாம். அவர் கேட்ட கேள்விதான் செம திடுக். ‘நீங்க இப்படியொரு விழா எடுத்து விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கிற விஷயம் ரஜினியண்ணனுக்கு தெரியுமா?’ என்றாராம் அவர். அப்படி கேட்டதோடு நிற்கவில்லை. ‘அண்ணன்தான்ங்க சூப்பர் ஸ்டார். நான் அந்த விழாவுக்கு வந்தா, சூப்பர் ஸ்டார் அவரு இல்லே, வேறொருத்தருன்னு நானே ஒத்துக்கிட்டதா ஆகிருமே?’ என்றாராம்.

மார்க்கெட்டில் முன்னணியிலிருக்கும் ஹீரோக்களில் சிலர், ‘ இப்பல்லாம் எங்க படம்தான் எவ்வித இடைஞ்சலும் இல்லாம ரிலீஸ் ஆகிட்டு இருக்கு. அதை நாங்களே கெடுத்துக்கணுமா?’ என்றார்களாம். இப்படி திரும்புகிற இடமெல்லாம் திடுக் திடுக்… பதில்களால் என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் விஜய்யிடமிருந்து போன். ‘தயவு செய்து இந்த விழாவை நிறுத்திருங்க. ஏற்கனவே கத்தி பட பிரச்சனை ஸ்டார்ட் ஆகியிருக்கு. இந்த நேரத்தில் இந்த விழா பாசிட்டிவ்வான விளைவுகளை தராது. அதனால் நான் மறுபடியும் சொல்லும்போது விழாவை வைங்க. இப்போதைக்கு வேணாம்’ என்றாராம் அழுத்தம் திருத்தமாக. அதற்கேற்றார் போல நிகழ்ச்சியை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ல் நடத்த காவல் துறை அனுமதி கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் என்று கருதப்பட்டதாம்.

இதையடுத்து விழா நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் நடைபெறுமா என்பது முக்காலும் உணர்ந்த ஞானிகளால் கூட முடியாத காரியம் அல்லவா?

கொண்டை ஊசி பலத்துல கூந்தல் நிற்கலாம்… தலையே நிற்கணும்னா நடக்குமோ?

Read previous post:
திருமணம் என்னும் நிக்காஹ் -விமர்சனம்

இந்த படத்தின் ஒன் லைனை இப்படியும் சொல்லலாம்! ரயிலில் கிடைத்த காதல், வெயிலில் விரித்த குடை மாதிரி இதமாக இருந்ததா? இல்லையா? ‘ரயில் சினேகம் பிளாட்பாரத்தோடு போச்சு’...

Close