நானும் என் மகளும் ஆங்கிரி பேட்தான் விளையாடுவோம்… அஞ்சான் நிகழ்ச்சியில் சூர்யா கலகல!
இன்று மீண்டும் தன் ரசிகர்களை சந்தித்தார் சூர்யா. ‘தோளின் மேலே பாரம் இல்லே… கேள்வி கேட்க யாரும் இல்லே…’ என்கிற அந்தஸ்தில்தான் இருக்கிறார் அவர். ஆனாலும், ‘அஞ்சான் ஹிட்’ என்கிற நல்ல செய்தி காதில் விழுகிற வரைக்கும் அவருக்கும் ஒரு சின்ன படபடப்பு இருக்கும்தானே! எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இன்று பிரஸ்சையும் ரசிகர்களையும் ஒரு சேர சந்தித்தார் சூர்யா.
அதற்கான அவசியம்?
‘அஞ்சான்’ படத்திற்காக ஸ்பெஷலாக ஒரு கேம் உருவாக்கப்பட்டிருக்கிறது. செல்போனில், கம்ப்யூட்டரில் டவுன் லோட் செய்து விளையாட வேண்டியதுதான். சூர்யாவின் அனிமேஷன் உருவம் கார் ஓட்டி வரும் அந்த காட்சியை அவ்வளவு தத்ரூபமாக வடிவமைத்திருந்தார்கள். ‘கேட்பினும் பெரிது கேள்’ என்கிற டைப்பாச்சே யூடிவி தனஞ்செயன்? இந்த கேம் பிளானையும், அதை மார்க்கெட்டிற்கு லாஞ்ச் செய்ததையும் ஒரு டி.வி நிகழ்ச்சியாக்கி அமர்க்களப்படுத்தியிருந்தார்.
நிகழ்ச்சியில் டைரக்டர் லிங்குசாமியும் கலந்து கொள்ள, சூர்யாவின் பேச்சில் வழக்கம் போல உற்சாகம். முதல்ல காலையிலிருந்து வெளி வந்துகிட்டிருக்கும் ஒரு செய்திக்கு விளக்கம் சொல்லிடுறேன். கார்த்தி நல்லாயிருக்கான். அவனுக்கு ஒண்ணுமில்ல, லேசா ஃபுட் அலர்ஜி. அவ்வளவுதான். உடம்புல வாட்டர் டி ஹைட்ரேஷைன் ஆனதால் டயர்டாகிட்டான். இப்ப மருத்துவமனையில் ரெஸ்ட் எடுத்துகிட்டு இருக்கான். ஊடகங்களில் வெவ்வேறு விதமா செய்தி வர்றதால இந்த விளக்கம் சொல்ல வேண்டியதாயிருக்கு.
கார்த்தி வழக்கம் போல அரட்டையடிச்சுட்டு இருக்கான். நர்ஸ், டாக்டர்களிடம், ‘நான்ங்கறதால எனக்கு இந்த ரூமை கொடுத்திருக்கீங்களான்னு கேட்டிருக்கான். அந்த ரூம் நம்பர் ஃபோர் ட்வென்ட்டி’ என்று சூர்யா சொல்ல, ஒரே சிரிப்பலை! நானும் என் மகளும் இந்த மாதிரி கேம்ஸ் நிறைய விளையாடியிருக்கோம். ஆங்கிரி பேட் எங்களுக்கு பிடிச்ச விளையாட்டு. இப்போ நானே அப்படியொரு கேம்ல வர்றேங்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றார்.
பொதுவாகவே ஒரு படத்தை எப்படியெல்லாம் பிரமோஷன் பண்ணுறது என்று விதவிதமா யோசிக்கிறவர் யூடிவி தனஞ்செயன். இந்த படத்திற்கும் அப்படிதான் பிரமாண்டமா விளம்பரம் செய்யுறார். என் தம்பி போசும் அந்த விஷயத்தில் நிறைய செலவு பண்ணுவார். ரெண்டு பேரும் சேர்ந்திருக்கிறாங்க. பிரமோஷனுக்கு கேட்கணுமா என்ன? என்ற லிங்குசாமி, ரசிகர்களுக்கு இன்னொரு நல்ல தகவலையும் சொன்னார். நாளை (30/7/14) அஞ்சான் சென்சார் காட்சியாம். வருகிற ஆகஸ்ட் 15 ந் தேதி படம் திரைக்கு வரும் என்றார்.
இந்த ஒன்றை யானைக்காக அத்தனை படங்களும் தள்ளி நிற்க, யானையின் பிளிறலுக்காக குழந்தைகள் கூட வெயிட்டிங்!