சூர்யா-கார்த்தி ஒரே படத்தில்! தயாராகிறது ஸ்வீட் காம்போ?
கார்த்தியை சந்தித்தாலும் சரி, சூர்யாவை சந்தித்தாலும் சரி. “எப்ப அண்ணன் தம்பி ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கப் போறீங்க?” என்று கேள்வி கேட்காமல் பேட்டியை முடிப்பதில்லை பிரஸ். “நேரம் வரணும். அதுக்கேற்ற கதை வரணும்” என்று விதவிதமாக காரணங்கள் சொல்லி தப்பித்தே வந்தார்கள் பிரதர்ஸ். கார்த்திக்குக்கும் சூர்யாவுக்கும் தமிழ்சினிமாவில் தனித்தனி அந்தஸ்து, தனித்தனி வியாபாரம் என்று மரியாதை பலமாகவே இருக்கிறது. இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று யார் விரும்பினாலும் அதற்கேற்ற ‘சம்திங் சம்திங்’ வேண்டுமல்லவா?
அதை பைசா குறையாமல் அள்ளித்தரவும் பலர் தயாராக இருக்கிறார்கள். இருந்தாலும், யாரோ ஒருவருக்கு ஏன் விளைய வேண்டும். அதுதான் நமக்கே சொந்தமாக சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கிறதே என்ற நினைப்பும் கூட, இந்த முயற்சி தள்ளிப் போக காரணமாக இருந்திருக்கலாம். இப்போது அதற்கான காலம் கனிந்திருப்பதாகவே ஒரு பேச்சு கிளம்பியிருக்கிறது இன்டஸ்ட்ரியில். இந்த நல்ல காரியத்தை நடத்தப் போகிறார் அருவா டைரக்டர் ஹரி.
அவரது சிங்கம் 3 படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் சூர்யாவுடன் தோன்றப் போகிறாராம் கார்த்தி. நினைத்தால் பெரிய கேரக்டரே கூட கொடுத்திருக்கலாம். ஆனால் இதை ஒரு வெள்ளோட்டமாக வைத்துக் கொள்வோம். ரசிகர்களின் ஆரவாரத்தையும் வரவேற்பையும் வைத்து இருவரையும் முழு நீள கேரக்டரில் பிறகு நடிக்க வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறாராம் ஹரி.
ஹரி… நீங்க எது செஞ்சாலும் அதுதான் சரி!