சூர்யா சார் டென்ஷன் கொடுத்துட்டாரு! பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கவலை

பல நூறு கோடிகளை அள்ளிவிழுங்கிவிட்டு அசுர பாய்ச்சலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது பாகுபலி! நான் ஈ, மஹதீரா போன்ற படங்களின் மூலம் இந்தியாவின் மிக முக்கியமான இயக்குனராகிவிட்டார் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவரது லேட்டஸ்ட் மிரட்டல்தான் இந்த பாகுபலி. தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸ், மற்றொரு முக்கிய ஹீரோ ராணா, நம்ம சத்யராஜ், நாசர், இவர்களுடன் அனுஷ்கா, தமன்னா என்று எல்லாருமே நமது வீட்டுக்குள் வந்து ‘சவுக்கியமா?’ என்று கேட்டுவிட்டு போகிற நட்சத்திரங்கள். தமிழ், தெலுங்கு என இருமொழி படமாக இதை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமவுலி.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ‘ஒரு முக்கியமான விஷயம். நல்லா குறிச்சுக்குங்க. இது நேரடி தமிழ் படம்… இது நேரடி தமிழ் படம்’ என்று அழுத்தி அழுத்தி சொல்லிக் கொண்டிருந்தார் சத்யராஜ். படத்தின் ட்ரெய்லர் எல்லாரையும் அப்படியே வாயடைக்க வைத்திருந்ததைப் போலவே டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் பேச்சும் வாயடைக்க வைத்தது எல்லாரையும். எவ்வளவு பெரிய டைரக்டர் அவர். ஆனால் அவரது பேச்சில் தானென்ற அகந்தை துளியும் இல்லை. ‘நான் படிச்சதெல்லாம் சென்னைதான். வெளியூர்ல போய் ஜெயிச்சுட்டு வந்த ஒருவன் சொந்த ஊருக்கு திரும்பும்போது என்ன மனநிலையில் இருப்பானோ, அந்த மனநிலையில் நான் இருக்கிறேன்’ என்று பேச ஆரம்பித்தார். ‘ஒவ்வொரு நாளும் எனக்கு சத்யராஜ் சார் கஷ்டம் கொடுக்காமல் போனதில்ல’. என்று ராஜமவுலி சொல்லி சற்று சஸ்பென்ஸ் விட, ஏரியாவில் பலத்த மவுனம்.

‘தினமும் ஆயிரக்கணக்கான ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள், மற்றும் அங்கிருக்கிற எல்லா டிபார்ட்மென்ட் மீதும் என் கண்கள் இருக்கும். சமயத்தில் சத்யராஜ் சார் பேச வேண்டிய டயலாக்ஸ் எல்லாத்தையும் எடுத்து முடிச்சுட்டு வேறே யோசனையில் இருப்பேன். ஆனால் கிளம்பும்போது என்னை தேடி வந்து இரண்டு கையையும் எடுத்து கும்பிட்டு, ‘சார் கிளம்பட்டுமா?’ என்பார். ஐயய்யோ… சாரை கவனிக்காம இருந்துட்டமேன்னு மனசு பதறும். இப்படி தினமும் நடக்கும். அவர் எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட்? அவர் போர்ஷன் முடிஞ்சதும் சொல்லாமல் கூட கிளம்பி போகலாம். ஆனால் ஒரு நாள் கூட அப்படி போனதில்ல. அவர்தான் அப்படின்னா, நம்ம சூர்யா சார் கடைசி நேரத்துல எனக்கொரு டென்ஷன் கொடுத்துட்டாரு’

‘பாகுபலி தெலுங்கு ட்ரெய்லர் வெளியீட்டுக்கு வந்திருந்தார். அப்போ சும்மாயில்லாமல் சார்… இந்த படத்தில் எனக்கும் ஒரு சின்ன ரோல் கொடுத்தா சந்தோஷமா இருக்கும்னு ஸ்டேஜ்ல சொல்லிட்டு போயிட்டார். என்னோட ட்விட்டருக்கு அதுக்கப்புறம் ஏகப்பட்ட ஃபேன்ஸ். ஒரே கேள்விகள். சூர்யா சாரை எப்ப நடிக்க வைக்க போறீங்கன்னு கேட்டுகிட்டேயிருக்காங்க’ என்றார்.

இந்த படத்தின் ஹீரோ பிரபாஸ், கிட்டதட்ட ரெண்டு வருஷங்கள் பாகுபலிக்காக கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். நம்ம த்ரிஷா புகழ் ராணா இதில் வில்லனாக நடிக்கிறார். தயங்கி தயங்கிதான் அந்த கேரக்டர்ல நடிக்கிறீங்களா என்று கேட்டாராம் ராஜமவுலி. உடனே யெஸ் சொல்லியிருக்கிறார் ராணா. ஸ்டண்ட் காட்சிகளில் கூட வாள் சண்டையாக இருந்தாலும் சரி, கம்பு சண்டையாக இருந்தாலும் சரி. முதலில் தான் அதை முறையாக கற்றுக் கொண்டுதான் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார் ராஜமவுலி.

ஆச்சர்யம் என்னவென்றால், பாகுபலியில் அனுஷ்காவின் அதிர வைக்கும் சண்டைக்காட்சிகளும் சில இருக்கிறதாம். இந்த விழாவுக்கு அவரும் வந்திருந்தார். பதுமைகள் வாள் தூக்கினால் வீரர்களின் கதி என்னாவது? என்பது போலவே இருந்தது அவரது லுக்!

முக்கியமான செய்தி- இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை ஏராளமான கோடிகளை கொடுத்து வாங்கியிருக்கிறார் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா.

Read previous post:
காக்கா முட்டை இயக்குனருக்கு குவியும் பாராட்டுகள்! எரிச்சலில் வெற்றிமாறன்?

அண்மையில் திரைக்கு வந்து தியேட்டர்களை கொண்டாட வைத்திருக்கும் படம் ‘காக்கா முட்டை’. யாரும் எதிர்பாராத விதமாக இந்த படத்தைக் காண கொத்து கொத்தாக தியேட்டருக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்...

Close