சூர்யாவின் ‘ஐ ’ பிரமோஷன்! வெளிவராத பின்னணி தகவல்கள்
நடிகர் சூர்யா கடந்த சில தினங்களாக தனது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பகுதிகளில் ஐ படத்தை பற்றிய தனது வியப்பை தெரிவித்து வருகிறார். அத்துடன் விட்டிருந்தால் கூட அந்த விஷயம் மற்றவர்களால் ஒற்றை சாளர வழியாக பார்க்கப்பட்டிருக்கும். ஆனால் அவர் மேலும் ஒரு படி முன்னேறி விக்ரமுக்கு பாராட்டுகளை தெரிவித்ததுதான் சந்தேகத்தின் முதல் படி. ஏனென்றால் இருவரும் நகையும் சதையும் அல்ல…. நகமும், நகவெட்டியும்!
கடந்த பல வருடங்களாகவே இப்படி கிழக்கும் மேற்குமாக இருக்கும் இவர்களை ஐ என்கிற திரைப்படம் மட்டும் ஒன்று சேர்த்துவிட முடியுமா என்ன? எல்லாருக்கும் ஏற்படும் சந்தேகம்தான். அதே நேரத்தில் சக கலைஞனை இன்னொரு கலைஞன் பாராட்டுவதை ஏன் இப்படி ‘பிளீச்சிங் பவுடர் ’ கண்ணோடு பார்க்க வேண்டும்? என்கிற கேள்வியும் எழும். எதுவாக இருந்தாலும், கோடம்பாக்கத்தில் கேட்ட சில குமுறல்கள்தான் இந்த செய்தியின் அவசியம்.
சுமார் பதினைந்து கோடி செலவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் அல்லவா? அதற்கான பலன், அழைத்து வந்த ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கிடைத்ததை விட, சூர்யாவுக்குதான் அதிகம் கிடைத்தது என்று கருதினாராம் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். சூர்யாவும் அர்னால்டும் சந்தித்துக் கொண்டது தவறு அல்ல. போட்டோ எடுத்துக் கொண்டதும் தவறு அல்ல. ஆனால் ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அர்னால்டு அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளிவருவதற்கு முன்பே சூர்யாவும் அர்னால்டும் ஒன்றாக நிற்கும் படத்தை மீடியாவில் வெளியிட்டதுதான் தவறு என்று கருதினாராம். தனது மனக்குமுறலை நேரடியாகவே சூர்யாவின் அப்பாவும் நடிகருமான சிவகுமாருக்கு போன் செய்து வெளிப்படுத்தினாராம்.
அதிலிருக்கும் உண்மையை புரிந்து கொண்ட சூர்யா, மனசாட்சியின் படி நடக்க முடிவெடுத்தார். அதன் விளைவுதான் தனது சமூக வலை தளத்தில் ஐ பற்றிய பிரமோஷன் மேளாவை சூர்யா தொடர்ந்து கொண்டிருப்பது.
பாவம்னு ஒண்ணு இருந்தா, பரிகாரம்னு ஒண்ணும் இருக்குமில்லையா?