அறுபது கோடி அபேஸ்! எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டால் நடிகர் சங்கம் பகீர்!
நடிகர் சங்க பிரச்சனை உச்சகட்டத்திலிருக்கிறது. இளம் தலைமுறை முண்டா தூக்கிக் கொண்டு கிளம்பியதில் மூத்த தலைமுறை முழுவதும் அப்செட்! கேள்வி பேட்டி என்றாலே சிம்பிள் கேள்விகளுக்கு அதைவிட சிம்பிளாக பதில் சொல்லிவிட்டு ஓடிவிடும் விஷால், இந்த தந்திடி.வி சேனலில் கேள்வி சிங்கம் ரங்கராஜ் பாண்டேவுடன் வாதாடுகிறார். சமயங்களில் அவரையே தடுமாற வைக்கிறார். அந்தளவுக்கு வேகம் வேகம்…
இளைய நடிகர்களின் இந்த வேகமும், கூட்டு முயற்சியும் சங்கத்திற்கு பலமா? பலவீனமா? வெல்வார்களா? தோற்பார்களா? என்று ஆயிரமாயிரம் கேள்விகள் எழுந்தாலும், இவர்களுக்கான செல்வாக்கு ஒவ்வொரு நாளும் கூடிக் கொண்டே செல்வதையும் உணர முடிகிறது. சரத்குமாரோ, ராதாரவியோ எந்த நேரம் அழைத்தாலும் என்ன பிரச்சனை என்று கேட்டு பழகியவர்கள். நள்ளிரவாக இருந்தாலும் கூட ஸ்பாட்டுக்கு வந்து நிற்க கூடியவர்கள். அவர்களையே ஸ்தம்பிக்க வைக்கிற இந்த தலைமுறை ஒருவேளை தப்பி தவறி வெற்றி பெற்றாலும், அவர்களை போல களப்பணியாற்றுவார்களா என்ற சந்தேகம் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் இருந்து வருகிறது.
இந்த நேரத்தில்தான் பெரிய இடியை தூக்கி தலையில் போட்டிருக்கிறார் நடிகர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான எஸ்.வி.சேகர். மிஸ்டர் க்ளீன் என்ற இமேஜ் எஸ்.வி.சேகருக்கும் இருப்பதால், அவரது பேச்சை அலட்சியமாக ஒதுக்கிவிடவும் முடியாமல் நிற்கிறது திரையுலகம். என்னதான் சொல்லியிருக்கிறார் அவர்?
நடிகர் எஸ்.வி. சேகர் மன்னார்குடியில் உள்ள இயல் இசை நாடக மன்ற சங்கத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
நடிகர் சங்க கட்டிடத்தை வாடகைக்கு விட்டதன் மூலம் ரூ. 60 கோடி ஊழல் நடந்துள்ளது. போலி உறுப்பினர்களை அதிகமாக சேர்த்துள்ளனர். அதனை வரைமுறைப்படுத்தவில்லை. 9 பேர் நிர்வாக குழுவில் இடம் பெற்றிருக்கும் போது சரத்குமாரும், ராதாரவியும் சேர்ந்து தன்னிச்சையாக அனைத்து முடிவுகளையும் எடுத்துள்ளனர். இதுவரை தாங்கள் பொறுப்பில் இருந்த போது நடந்த அனைத்து ஊழல்களையும் மூடி மறைப்பதற்காகத்தான் மீண்டும் தலைவர் பதவியை தக்க வைத்து கொள்வதற்காக முயற்சி செய்கின்றனர் என்றார்.
திடீரென அவர் 60 கோடி ஊழல் நடந்திருப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.