இன்று படம் ரிலீஸ்… டைரக்டருக்கு அடி உதை! தாக்கிய மர்ம நபர்கள் தப்பியோட்டம்
தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி அங்குசம் என்ற படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார் மனு கண்ணன். இந்த படத்தின் வரிவிலக்கு தொடர்பாக ஆளுங்கட்சி அமைச்சருக்கும் இவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், படத்தில் அம்மாவின் புகழ் பாடுவது போல சில காட்சிகள் இருப்பதால், இவர் யார் கட்சி? என்கிற குழப்பம் ரசிகர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் இன்று காலை தனது படம் வெளியாகும் பிவிஆர் திரையரங்கத்திற்கு தனது நண்பர்கள் இருவருடன் சென்றார் மனு கண்ணன்.
தியேட்டர் நிலவரத்தை தெரிந்து கொண்டு வெளியே வந்தபோது இவரையும் இவருடன் வந்த தயாரிப்பு நிர்வாகி குமரனையும் சில மர்ம நபர்கள் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். முகத்தில் கர்சீப் கட்டிக் கொண்டு தாக்கிய அவ்விருவரும், பலமாக இவர்களை தாக்கிய பின் அதே பைக்கில் தப்பியோடியிருக்கிறார்கள். படுகாயமுற்ற மனு கண்ணன், அருகாமையிலிருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காலை சுமார் பத்தரை மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவம் திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.