மீண்டும் காதல் ரூட்டில் தமிழ்சினிமா! நலன் குமரசாமியின் முயற்சி
சூது கவ்வும் என்ற சூப்பர் படம் கொடுத்த இயக்குனர் நலன் குமரசாமி ஆள்தான் வெயிட்! அதில் ஒரு கிலோவை கூட அவர் தன் தலையில் ஏற்றிக் கொள்ளவில்லை. சூது கவ்வும் வெற்றிக்குப்பின் சுமார் ஒரு டஜன் தயாரிப்பாளர்கள் அவரை சுற்றி சுற்றி வந்தபோதிலும், ‘நல்ல கதை சிக்கட்டும். பிறகு அட்வான்ஸ் வாங்கிக்கிறேன்’ என்று அத்தனை பேரையும் அன்போடு அனுப்பி வைத்தவர். அதற்கப்புறம் சில மாத இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதியை ஹீரோவாக்கி ‘காதலும் கடந்து போகும்’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
நடுவில் ‘கை நீளம்’ என்ற தலைப்பில் சொந்தக் கதையை படமாக்க நினைத்தவர் ஒரு கட்டத்தில் அது சரியாக வராது போல தெரிந்ததும் அந்த கதையை அப்படியே தள்ளி தூரமாக வைத்துவிட்டார். அதற்கப்புறம் கொரியன் படம் ஒன்றின் கதை உரிமையை முறைப்படி வாங்கிதான் இந்த ‘காதலும் கடந்து போகும்’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். உண்மையில் சூது கவ்வும் படத்திற்கு முன்பே இந்த கதையைதான் நான் இயக்கியிருக்கணும். என்ன காரணத்தாலோ அது தள்ளிப் போச்சு என்கிறார்.
நினைத்திருந்தால் மற்றவர்கள் போல, அந்த கொரியன் படத்தை அப்படியே உருவி, பட்டி டிங்கரிங் பார்த்து சொந்த சரக்காக கூட கொடுத்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் குறுக்கு வழியில் முயலாமல் கிட்டதட்ட ஐம்பது லட்சம் கொடுத்து ரைட்ஸ் வாங்கி படமெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
“சூது கவ்வும் படத்தின் ஹிட்டுக்கு பிறகு முன்னணி ஹீரோக்கள் உங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முன் வந்திருப்பாங்க. ஆனால் ஏன் திரும்பவும் விஜய் சேதுபதியுடன்?” கேட்டால் பளிச்சென்று பதில் சொல்கிறார் நலன். “ஹீரோக்கள் வர்றாங்க. ஓ.கே. அவங்களுக்கான கதை வேணுமில்ல? இந்த கதைக்கு பொருத்தமா இருந்தவர் விஜய் சேதுபதி. நெருங்கிய நண்பரும் கூட. அதனால்தான் அவருடன்” என்றவர், படம் பற்றி பேச ஆரம்பித்தார்.
“தமிழ்சினிமாவில் காதலையும் நட்பையும் சம அளவில் சொன்ன படம் குறைவு. உதாரணத்துக்கு ‘உன்னாலே உன்னாலே’ மாதிரி படங்கள் பண்ணணும்னு எனக்கு நிறைய ஆசை இருந்தது. இந்த படம் அப்படியொரு ஜானர் படமா இருக்கும். கண்டவுடன் காதல் என்கிற இலக்கணம் இந்த படத்தில் இல்ல. ஹீரோவும் ஹீரோயினும் பழகுவாங்க. அவங்க தங்கள் காதலை சொல்லும்போது படம் முடிஞ்சுருக்கும்!”
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா நடித்திருக்கிறார். சமுத்திரக்கனிக்கு போலீஸ் அதிகாரி வேடமாம். “சூதுகவ்வும் மாதிரி ஒரு காட்சி கூட வந்திடக் கூடாதுன்னு மெனக்கெட்டிருக்கேன். பார்த்துட்டு சொல்லுங்க” என்கிறார்.
ஆமாம்… அது ப்ளஸ்சா, இல்ல மைனஸ்சா? நலன் குமரசாமியின் தன்னம்பிக்கையை பார்த்தால், ப்ளஸ் என்றுதான் தோன்றுகிறது!