‘கிடைச்சா டாணா இல்லேன்னா வேணா… ’ தனுஷ் அதிர்ச்சி

வேந்தர் மூவிஸ் ஏராளமான படங்களை வாங்கி வெளியிடுகிறது. அந்த நம்பிக்கையில் தமிழ்சினிமாவின் முன்னணி இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை மொய்த்து வருகிறார்கள். இப்படி யாராவது படம் வெளியிட முன் வந்தால்தான் கரையேறாமல் குவிந்து கிடக்கும் படங்களை கரையேற்ற முடியும். ஆனால்…? அவர்களுக்கும் வியாபார பலாபலன்கள் இல்லையென்றால் கொட்டிய பணம் என்னாவது? சவுரி தேய்ஞ்சு குடுமியான கதையாகிவிடும் அல்லவா? அதனால் சங்கரநேத்ராலயா மாதிரி முன்னணி கண் நிறுவனங்களிலிருந்து ‘கண் நுணுக்க கஷாயம்’ வாங்கிக் குடித்துவிட்டுதான் படமே பார்க்க ஆரம்பிக்கிறார்களாம்.

அண்மையில் இவர்களை நாடிப் போயிருக்கிறார் தனுஷ். இவரே தயாரித்து இவரே ஹீரோவாக நடித்திருக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை வாங்கி வெளியிடுங்களேன் என்று கேட்கதான் இந்த விசிட். இவரை வரவேற்று சிறப்பாக பேசிய சினிமா இன்சார்ஜ், கடைசியில் சொன்ன தகவல்தான் பகீர் பகீர்.

‘நீங்க அற்புதமான நடிகர். தேசிய விருது கூட வாங்கியிருக்கீங்க. இந்த படத்தை இப்போது நாங்கள் வாங்கி வெளியிடுவதில் ஒரு ஆட்சேபணையும் இல்லை. ஆனால் உங்கள் இன்னொரு தயாரிப்பான டாணா படத்தையும் எங்களுக்கே தர்றதா வாக்குறுதி கொடுங்க. இந்த படத்தை வாங்குறோம். இல்லேன்னா ஸாரி..’ என்றாராம்.

இந்த டாணா படத்தில்தான் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். தனுஷ் எங்கே போனாலும், சிவகார்த்திகேயனின் இந்த டாணா படத்திற்குதான் முதலிடம் தருகிறார்கள். தான் நடித்த படம் இரண்டாம் பட்சம்தான் என்கிற வெவஸ்த்தை கெட்ட வேதனையை நன்றாகவே அனுபவித்து வருகிறார் தனுஷ். இந்த நிலையில் வேந்தர் மூவிசும் இதே போலொரு பதிலை சொல்ல, காண்டாமிருக சூப் குடித்த மாதிரியாகிவிட்டாராம் தனுஷ்.

அந்த ஆத்திரமெல்லாம் சிவகார்த்திகேயன் மீது திரும்புவதாக கேள்வி.

Read previous post:
கதை சொன்ன கொடுமைக்கு இதுதான் தண்டனையா? கதறும் இயக்குனர்

ஜி.வி.பிரகாஷ் தாடி வைத்திருப்பதில் யாருக்கு நஷ்டமோ, லாபமோ? ‘பென்சில்’ பட இயக்குனருக்கு பெரும் வருத்தமாம். ஏன்...? அதை தெரிந்து கொள்வதற்கு முன் பிரகாஷின் ஆர்வக் கோளாறு யார்...

Close