தாரை தப்பட்டை- விமர்சனம்
‘பஞ்சாங்கத்தை கிழிச்சு, அதில் பரலோகத்தையே மடிச்சுடுவாரு பாலா’ என்பதாக கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறது உலகம்! அவரோ, “உங்க நம்பிக்கையில இடி விழ…’’ என்பதை போல ஒரு படத்தை எடுத்திருக்கிறார். அழகான பொண்ணு. அவளை சுவத்தோடு வச்சு தேய்ச்சு மிதிக்கிறதுக்கு கன்னங்கரேல்னு ஒரு ஆளு. 14 ம் நூற்றாண்டில் வாழ்கிறோமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தும் பேக்ரவுன்டுகள். நடுநடுவே ஐயோ… என்று காதைக்கிழிக்கும் ஈனக் குரல்கள்! இவை இருந்தால் போதும் ஒரு பாலா படம் சமைக்க! ‘அவருக்கென்ன? சமைத்துவிட்டார். அகப்பட்டது நானல்லவோ!’ ஆகிறான் ரசிகன்.
எம்ஜிஆர் கையால் கலைமாமணி வாங்கிய சாமிப் புலவரை தேடி தஞ்சாவூருக்கு வருகிற டிஸ்கவரி சேனல், அவரிடம் காலத்துக்கு ஏற்ற ஒரு மிக்ஸ்டு ஐட்டத்தை கேட்க, “டேய்… யாருகிட்ட வந்து? அதுக்கெல்லாம் ஒரு மூதேவி இருக்கு. அதைக் கேளு” என்கிறார் கோபமாக. (ஒருவேளை அந்த சாமிப் புலவர்தான் பாலாவோ? காலத்துக்கு ஏத்த மாதிரி ஒரு படம் கொடுங்கன்னு கேட்கற ரசிகன்தான் அந்த டிஸ்கவரி சேனலோ?) “ஹு இஸ் மூதேவி” என்று அவனை தேடும் அவர்களுக்கு, அது சாமிப்புலவரின் மகன் சன்னாசி என்று தெரிகிறது. அதற்கப்புறம் சன்னாசி ஊத, சொந்தப்பந்தங்களெல்லாம் ஆட, நிமிர்ந்து உட்காருகிறோம். ‘பாலா என்னவோ பண்ணப் போறாருடா!’
இந்த சன்னாசியிடம் அதே கூட்டத்திலிருக்கும் கரகாட்டக்காரி வரலட்சுமி “மாமோய்… மாமோய்…” என்று மனம் உருகுகிறார் எந்நேரமும்! ஆங்… சொல்ல மறந்தாச்சே. அந்த சன்னாசி, நம்ம சசிகுமார்தான். அவர் தலைவிரி கோலமாக நாதஸ்வரம் ஊதுவதை ஒருமுறை கண்ணை மூடிக்கொண்டு கற்பனை பண்ணிப் பாருங்களேன்… (போவீங்களா, தியேட்டருக்கு போவீங்களா?) அதற்கப்புறம் வரலட்சுமி எப்படிப்பட்ட கற்புக்கரசி என்பதை காட்டுவதற்காக அந்தமான் வரைக்கும் டிராவல் ஆகிறார்கள். அட… அந்தமானையாவது சுத்திக் காட்டுனாங்களா? அங்கு போயும் வரலட்சுமியின் தொப்புளைதான் சுற்றி சுற்றி காட்டுகிறார்கள். அதுக்கெதுக்கு அந்தமானுக்கு போகணும்? அங்க செய்யுற அதே வேலையை மதுரை குற்றாலம்னு நம்ம ஊர்லேயே கூட செஞ்சுருக்கலாமே?
நடுவில் வரலட்சுமியை கண்டு அவரிடம் மதி மயங்கும் புதுமுகம் சுரேஷ், கெஞ்சி கூத்தாடி, அடிவாங்கி, மிதிபட்டு வரலட்சுமியை கட்டிக் கொள்கிறார். சொந்த ‘மாமோய்’ வந்து கெஞ்சுவதால் அந்த கல்யாணத்துக்கு ஒப்புக் கொள்ளும் வரலட்சுமி, அதற்கப்புறம் சுரேஷிடம் அடிவாங்கி, மிதிபட்டு சாவதுதான் மிச்ச கதை என்பதும், அந்த சுரேஷை சன்னாசி விரட்டி விரட்டி, பாய்ஞ்சு பாய்ஞ்சு, குதறி குதறி கொல்லுவதுதான் க்ளைமாக்ஸ் என்பதும் உங்களுக்கு தெரியாதா என்ன?
பாலா படத்திலிருக்கும் பர்பெக்ஷன் இதில் இல்லை என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் இது. சசிகுமார் நாதஸ்வரம் ஊதுகிறார். ஆனால் அதிலிருக்கும் ஓட்டைகளில் இருக்கிற விரல்களை கூட அவர் அசைக்கவில்லை. பழைய பாலாவாக இருந்திருந்தால், அந்த ஓட்டையில் சசியின் விரலை விட்டே ஒடித்திருப்பார். முகத்தில் ஒரே எக்ஸ்பிரஷனோடு ‘மண்வாசனை’ பாண்டியன் போலவே நடமாடும் சசியின் கேரியருக்கு, சன்னாசி ஊதியது நாதஸ்வரம் அல்ல. சங்கு!
படத்தின் ஆகப்பெரிய அற்புதமே வரலட்சுமிதான். கொப்பும் குலையுமாக அவர் குதிப்பதை ரசிப்பதற்கு ஒரு கூட்டம் வரும் என்றாலும், அவரது எக்ஸ்பிரஷன்களும், அகன்ற தொண்டையில் ஆஹ்ஹோய்… என்று சிரிக்கும் அழகையும் ரசிக்கவே இன்னொரு கூட்டம் வரும். படத்தில் அவர் ஆடியிருக்கும் அந்த ஆட்டம், தஞ்சாவூர் கும்பகோண கரகாட்டக்காரிகளுக்கெல்லாம் காளி சோடா இறங்கி அடித்தொண்டையை நனைச்சுருக்கும்!
புதுமுகம் சுரேஷுக்கு இரண்டு விதமான தோற்றங்கள். அந்த முதல் தோற்றத்தில் இந்த பூனையும் கஞ்சா அடிக்குமா என்பது போலிருக்கிறார். பிற்பாதியில் அதே ஆள். அதே கண்ணாடி… ஆனால் பர்பாமென்ஸ்? பிச்சு உதறியிருக்கிறார்.
பாலாவின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் ஜி.எம்.குமார், திமிர் பிடித்த கலைஞராம். வெளிநாட்லேர்ந்து ஒருவன் வந்து பரிசு தர்றான். அதை கழட்டி அவன் தலையிலேயே மாட்டிவிட்டு போகிற அளவுக்கு வித்தை திமிர் பிடித்து அலைகிறாராம். செக்கும் சிவலிங்கமும் தெரியாதவர் எப்படி அவ்வளவு பெரிய வித்வான் ஆனார் என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. இது பாலா படம்! ஆனால் கிடைத்த வேடத்தை மிக சிறப்பாக செய்திருக்கிறார் அவர்.
படத்தில் நடித்திருக்கும் ஏனைய கரகாட்டக்காரிகளும், அவர்களின் உழைப்பும் திடலில் விளைத்த திணைப் பயிர்.
இந்த படத்தில் கொஞ்ச நேரமாவது கண்ணை மூடிக் கொண்டு உட்கார முடிகிறது என்றால், அதற்கு முழு காரணம் இசைஞானி இளையராஜாதான். பாடல்களும், பின்னணி இசையுமாக பிரவாகமெடுத்து ஓடுகிறார். செழியனின் ஒளிப்பதிவில் முதன் முறையாக ஒரு விசேஷமும் இல்லை.
கருவாட்டை சும்மாட்டுல கட்டி வச்சுகிட்டு நாறுதே நாறுதேன்னா…? முதல்ல அதை தலையிலேர்ந்து இறக்கி தரையில விடுங்கப்பா! சினிமா பழகட்டும்….!
-ஆர்.எஸ்.அந்தணன்