தமிழன் என்று சொல்! விஜயகாந்த் படம் டிராப் ஆனது ஏன்?
தமிழனெல்லாம் ஒன்றுமையா இருக்கணும் என்று மேடைகளில் முழங்கிக் கொண்டே, இன்னொரு பக்கம் அவனை ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழமாக்கிக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்களின் சாயம் வெளுக்கிற நேரம் வந்து கொண்டேயிருக்கிறது. எப்படியிருந்தாலும் வாக்காளன் தலையில் மிளகாய் பொடிதான்! இந்த தேர்தலில் விஜயகாந்த் ஹீரோவாகிவிட, மற்ற மற்ற பெருந்தலை அரசியல்வாதிகளெல்லாம், அவர் வீட்டு முன் காத்துக்கிடக்கிற காட்சி அரசியல் அநாகரீகத்தின் உச்சம்
அவ்ளோ பெரிய விஜயகாந்த் மீண்டும் ஹீரேவாக நடிப்பதாக சொல்லப்பட்ட ‘தமிழன் என்று சொல்’ படம் என்னாச்சு என்ற கேள்வி வருமில்லையா? விசாரித்தால் பகீர் தகவல்தான் கிடைக்கிறது. அப்படம் கைவிடப்பட்டதாக சொல்கிறார்கள். அருண் பொன்னம்பலம் என்ற இளைஞர் உருவாக்கிய இப்படத்தின் கதை நிஜமாகவே பிரம்மாதம். ஆதித்தமிழன் வாழ்ந்த குமரிகண்டம் கடலில் மூழ்கிவிட்டது. கதைப்படி மரைன் என்ஜினியரான சண்முக பாண்டியன் (ஜுனியர் கேப்டன்) கடல் ஆராய்ச்சி விஷயமாக சில விஷயங்களை அலசி ஆராய, அங்கு குமரிகண்டமும் அங்கு வாழ்ந்த ஆதித் தமிழர்களும் கிடைக்கிறார்கள். அதில் ஒரு மன்னன்தான் விஜயகாந்த் என்று போகிறது கதை.
கிட்டதட்ட முப்பது நாட்களுக்கும் மேல் படம் பிடிக்கப்பட்டதாம். அப்புறம் என்ன காரணத்தாலோ, “ஷுட்டிங் இப்ப வேணாம். பிறகு பார்த்துக்கலாம்” என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். “ஆமாய்யா… டின்னர் குளோஸ்” என்பதைதான் நாகரீகமாக பிறகு பார்த்துக்கலாம் என்பார்கள் சினிமாவில். அப்படிதான் இந்த படத்திற்கும் சொல்லப்பட்டதா என்பதை தேர்தல் முடிவுகள்தான் தீர்மானிக்கும் போலிருக்கிறது.
இன்னொரு உறுதிப்படுத்தப்படாத தகவல். இந்த படத் தயாரிப்பாளர்களில் ஒருவர் அதிமுக காரராம். விஷயம் மேலிடத்திற்கு தெரிய வந்து அவர் ஜகா வாங்கியதால்தான் இந்த முடிவு என்றும் கூறப்படுகிறது. நிஜம் என்னவோ? குமரிகண்டம் மாதிரி அதையும் மூழ்க விடாம வெளிப்படையா சொல்லுங்கப்பா!