தனி ஒருவன்- விமர்சனம்

தியேட்டருக்குள் குளோஸ் அப்பில் என்ட்ரி கொடுத்து வாயெல்லாம் எச்சில் தெறிக்க, “தக்காளி… நான் தனியாளுதான். ஆனா ராணுவம்ம்ம்’” என்று ஹீரோ பல்லை கடித்தால் அது பேரரசு படம்! அதே ஹீரோ வெகு யதார்த்தமாக தனது எமோஷன்ஸ் காட்டினால் மோகன் ராஜா படம் என்று வருங்காலம் வகுத்துக் கொள்ளும்! இந்த ‘தனியொருவன்’, டைரக்டர் மோகன் ராஜாவை ஆக்ஷன் இயக்குனர்கள் வரிசையில் இணைக்கிறது! ஜோரா ஒருமுறை கைதட்டுங்கோ! படம் என்னாவொரு விறுவிறுப்பு?

‘உன் நண்பன் யாரென்று சொல். உன் கேரக்டரை சொல்கிறேன். உன் எதிரி யாரென்று சொல். உன் கெப்பாசிடியை சொல்கிறேன்!’ இந்த ஒரு வரி மந்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது கதையும் திரைக்கதையும்!

பயிற்சி கல்லூரியில் படிக்கும் போதே சமூக விரோதிகளை பந்தாடுகிறார்கள் ஜெயம் ரவியும் அவரது நண்பர்களும். கையும் களவுமாக போலீசிடம் மாட்டிக் கொடுத்துவிட்டு எஸ் ஆகிவிடும் அவர்கள்தான் பின்னாளில் பொறுப்பான போலீஸ் அதிகாரிகள் ஆகிறார்கள். ஐயோ கொடுமை. அவர்கள் பிடித்துக் கொடுத்த அதே சமூக விரோதிகள், அதிகார மட்டத்தின் ஆணி வேராக இருப்பதை கண்டு கொதிக்கிறார்கள். “என் எதிரி யார்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்” என்று நாட்டையை தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் படா பெரிய வில்லன் அரவிந்த்சாமியை நெருங்குகிறார் ஜெயம்ரவி. சிறுத்தை வாய்க்குள் கைவிட்டால் விரலுக்கு மட்டுமா ஆபத்து? சிதறியடிக்கிறார் ஜெயம் ரவியை. இறுதியில் தன்னை சிதறடித்த அரவிந்த்சாமியை ஹீரோ, ஐயகோ ஆக்குகிறாரா இல்லையா? உச்சி மண்டையில் சூடத்தை கொளுத்திப் போட்ட மாதிரி அப்படியொரு விறுவிறு முடிவு. ஒன்ஸ் எகெய்ன் வெல்கம் மோகன் ராஜா! (பெயர் மாற்றம் பண்ணும்போதே கிரீடத்திற்கும் ஆர்டர் கொடுத்துட்டாரு போல)

திரி கொளுத்திவிட்டதை போல பரபரவென இருக்கும் ஜெயம் ரவியை பார்த்தாலே பிடித்துப் போகிறது நமக்கு. ஒருத்தி லவ்வை சொல்லிட்டா என்றதுமே வழிந்து உருகாமல், ஜென்ட்டிலாக விலகிக் கொள்ளும்போது தனது லட்சியத்தை சரக்கென்று உணர வைத்துவிடுகிறார் ஆடியன்சுக்கு. தன் உயிர் நண்பனை வில்லனுக்கு காவு கொடுத்துவிட்டு அவர் தவிக்கும் தவிப்பும், ஆத்திரமும், பாய்ந்து பாய்ந்து தாக்கும் கொடூரமும் ஒரு பர்பெக்ட் ஆக்ஷன் ஹீரோவாக்குகிறது ரவியை. அப்படியே காதல் வந்தபின் வேறொரு ரவியாகிவிடுவது ரசவாதம் அன்றி வேறென்ன? “பேசாதே… எல்லாத்தையும் அவன் கேட்டுகிட்டு இருக்கான். ஐ லவ் யூ” என்று அவர் போர்டில் எழுதிக்காட்டுகிற காட்சிக்கு தியேட்டரில் விசில். தன் உடம்புக்குள் ஒரு கருவி பொருத்தப்பட்டுள்ளது என்பதை அவர் அறிந்து கொள்கிற காட்சி கூட திருப்பமில்லை, அதற்கப்புறம் அவர் இரண்டு பெண்களை மரணத்திலிருந்து தப்புவிக்கிறாரே… அது திருப்பம்!

நயன்தாராவுக்கு என்னாச்சு என்று தெரியவில்லை. நினைத்திருந்தால் அவரை அழகுப் பதுமையாக காட்டியிருக்கலாம். ஒளிப்பதிவாளர் ராம்ஜிக்குதான் என்னாச்சு? (‘சட்டியில இருந்தால்தானே சர்வ் பண்ண முடியும்?’னு மட்டும் பதில் சொன்னா தெரியும் சேதி!) இருந்தாலும் ஒரு அட்வைஸ்… நயன்தாரா புத்துணர்ச்சி முகாமுக்கு போக வேண்டிய நேரம் வந்தாச்சு. ஆனால் அவரையும் நேசிக்க வைத்துவிடுகிறது படத்தின் போக்கு. விரக்தியின் எல்லையில் இருக்கும் ரவியை ஒரு டயலாக்கில் மீட்டெடுக்கிறார் அவர். விறுவிறு க்ளைமாக்ஸ் வரும் நேரத்தில் நயன், ரவி டூயட்டை யோசித்தது எடிட்டரோ, இயக்குனரோ? சுத்த வேஸ்ட் சாரே!

அரவிந்த்சாமி….! வெகு காலம் கழித்து வந்திருக்கிறார். எதற்கும் அலட்டிக் கொள்ளாத அவரது பாடி லாங்குவேஜும், கிள்ளாமலே வலிக்க வைக்கும் லாவகமும், பெற்ற அப்பனையே “போட்டுத்தள்ளு” என்று உத்தரவிடும் அசால்ட்டும், எங்கய்யா போயிருந்தே இவ்ளோ நாளா? இனி அவரே அலுத்துப் போகுமளவுக்கு புரட்டி எடுக்க கிளம்புவார்கள் ஒவ்வொரு சினிமா டைரக்டரும். உஷார் மன்னவா!

அதற்கப்புறம் மனசில் நிக்கமற நிறைந்து கொள்வது நம்ம தம்பி ராமய்யா! ஒரு அப்பாவி, மினிஸ்டர் ஆன பின்பும் அப்பாவியாக இருந்து, மகன் நகர்த்தி வைக்கும் இடத்திலெல்லாம் கொலு பொம்மை போல உட்கார்ந்து, கடைசியில் “என் புள்ள இப்படி பண்ணிட்டானே” என்று அதிர்ந்து… சான்சே இல்ல தம்பி சார்! அதிலும் முதலமைச்சர் முன்பே நீங்க படிக்கும் அந்த அறிக்கை… களேபரம்!

ஹிப்ஹாப் தமிழனையெல்லாம் ஒரு இசையமைப்பாளர் என்று கொண்டாடுகிற இயக்குனர்களை பார்த்தால் மனசு உர்ர்ர்..ராகிறது. சட்டிப்பானை உருட்டல்தானே இப்போது இசை? நல்லவேளை, பின்னணி இசையில் காப்பாற்றுகிறார்கள் ஹிப்பும் ஹாப்பும்!

வசனங்களில் கவனிக்க வைத்து கைதட்ட வைக்கிறார்கள் சுபா!

படத்தின் மையமான மருந்து, டெஸ்ட், கடத்தல், எல்லாவற்றையும் மறக்கடித்துவிட்டு நமது சட்டையை பிடித்து பின்னாலேயே இழுத்துக் கொண்டு ஓடுகிறது டைரக்டரின் சேசிங்குக்கு இணையான திரைக்கதை!

தனியொருவன்(கள்) கூட்டம் சேர்த்துக் கொண்டு வந்து பார்க்க வேண்டிய படம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
Maiem Movie Promo Video

https://www.youtube.com/watch?v=IfCwki06aUc

Close