தற்காப்பு விமர்சனம்

இந்த படத்தின் டைரக்டர் ஆர்.பி.ரவி இதற்கு முன் நூடுல்ஸ் விற்றுக் கொண்டிருந்திருப்பார் போலும்! அடி எது, முனை எது என்று தெரியாதளவுக்கு ஒரு திரைக்கதை தாக்குதல்!

ஒரு என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரியை கொண்டாட வேண்டிய போலீஸ் உயரதிகாரிகள், அவரையே என்கவுன்ட்டர் போட துடிக்கிறார்கள். கடைசியில் அவர் செத்தாரா, வாழ்ந்தாரா என்பது கிளைமாக்ஸ்! இவரை தவிர படத்தில் இரண்டு காதல் ஜோடிகள். அவர்களின் தனித்தனி டிராக் என்று நகர்கிறது கதை. ஒரு கோர்வையாக கொண்டு செல்லப்பட வேண்டிய கதையை, நறுக்கி நறுக்கி படமெங்கும் தெளிக்கிறார்களா? நமக்கு நெறி கட்டுகிறது. இந்த லட்சணத்தில் ஸ்கிரீன் ஓரத்தில் டைம் குறிப்பு வேறு!

படத்தின் ஹீரோ சக்திவேல் வாசு. ஒரு கம்பீரமான போலீஸ் அதிகாரிக்குரிய அத்தனை மேனரிசங்களும் இருக்கிறது அவரிடத்தில். மிக ஸ்டைலாக அவர் குற்றவாளிகளை போட்டுத்தள்ளுவதை ரசித்துக் கொண்டேயிருக்கலாம். நல்ல படம் அமைந்தால், தவிர்க்க முடியாத ஹீரோவாக பிரமோஷன் ஆகலாம். படத்தின் இன்னொரு ஹீரோவாக சமுத்திரக்கனியையும் ஏற்றுக் கொள்ளலாம். அவர் ஹியூமன் ரைட்ஸ் அதிகாரியாக வருகிறார். சக்திவேல் வாசு உள்ளிட்ட மேலும் சிலரை அவர் விசாரிக்கும் பாணி, செம லவ்வபுள்! ஒரு போலீஸ்காரன்னா எப்படியிருக்கணும் என்று சமுத்திரக்கனி கிளாஸ் எடுக்க எடுக்க, இவரைப்போல சினிமாவில் க்ளீன் இமேஜ் நடிகர்கள் சொல்வது எவ்வளவு பொருத்தம் என்பதை மனசு ஏற்றுக் கொள்கிறது.

அதற்கப்புறம் அந்த காதல் ஜோடிகள். ஒரு காதல் ஜோடியின் கதை ட்ரெய்னிலேயே நடக்கிறது. அப்படியெல்லாம் ஒரு ஹனிமூன் கூபே இருக்குமா என்பதை சாதாரண ரசிகன் வியந்து ரசிப்பான். ஒரு கூபேவுக்குள் இரண்டு வாலிப வயசுகள். முகத்தை மிளகு ரசம் போல வைத்துக் கொண்டாலும், காதல் வராமலிருக்குமா? வந்து தொலைகிறது. வழக்கம் போல காதலுக்கு எதிர்ப்பு. இருவரும் சந்தித்து ஓடிவிட ஒரு இடத்தை செலக்ட் செய்கிறார்கள். அந்த இடம் சக்திவேல் வாசுவை போலீஸ் போட்டுத்தள்ள குறி வைத்திருக்கிற ஸ்பாட். அதே இடத்திற்கு வந்து சேரும் இன்னொரு ஜோடியும் இந்த களேபரத்தில் சிக்கிக் கொள்ள, மொத்த குருவிக் கூட்டமும் பொசுங்கிப் போவதாக காட்டுவதுதான் கவலை.

காதலுக்கு சாவு. கம்பீரமான போலீசுக்கு சாவு. டைரக்டர் சொல்ல வரும் நீதி என்னவாம்?

ஒவ்வொரு என்கவுன்ட்டருக்கு பின்னாலும் ஒரு சுயநலம் இருக்கிறது. ஒரு அதிகார மட்டத்தின் ஆணவம் இருக்கிறது. அதில் பலிகடா ஆக்கப்படுவது சாகிற குற்றவாளி மட்டுமல்ல, கொல்கிற அதிகாரியும்தான்! இப்படியொரு நாட் கிடைத்தும், அதை தாட் பூட்டென்று உடைத்து தள்ளிய இயக்குனரை நொந்து கொள்ள வேண்டியதுதான். நல்லவேளை படத்தின் ஒளிப்பதிவாளர் நம்மை ஆறுதல் படுத்துகிறார். மிக இயல்பான லைட்டிங்குகள். பாராட்டுகள் ஜோன்ஸ் ஆனந்த். குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ் பைட்டில் உங்கள் கேமிரா அநாயசமாக உழைத்திருக்கிறது.

பின்னணி இசையில் பரபரப்பு கூட்டுகிறார் மியூசிக் டைரக்டர். ஆக்ஷன் இயக்குனரும் அவர் வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

இப்படி துப்பாக்கி, தோட்டாவெல்லாம் சிறப்பாகதான் இருக்கிறது. ஆனால் வெடிதான் புஸ்…?

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கரையோரம் விமர்சனம்

கடலோரம் என்று கூட தலைப்பு வைத்திருக்கலாம். அலையை ரசிப்பதா, செதுக்கி வச்ச சிலையை ரசிப்பதா என்று திக்குமுக்காட வைக்கிறார் நிகிஷா பட்டேல்! இந்த படத்தின் மொத்த ‘கவன...

Close