மீண்டும் ஆபாசத்தை நோக்கி… பெரிய கம்பெனியின் சிறிய நோக்கம்!
பரங்கி மலை ஜோதி தியேட்டரே கூட திருந்தி ரஜினி பட ரிலீஸ் சென்ட்டர்களில் ஒன்றாகி விட்டது. ஆனால் படமெடுக்கும் சில சினிமா கம்பெனிகள் போடும் ரிவர்ஸ் கியர், சினிமாவை ஆதிக் ரவிச்சந்திரன் லெவலுக்கு கொண்டு போய் கொண்டிருப்பதுதான் ஐயகோ! ஜோக்கர் மாதிரியான படங்கள் முக்கி முனகி ஆடியன்ஸ் மனசுக்குள் இடம் பிடிப்பதற்குள், பெட்ரோல் காலியாகி ஆக்சிலேட்டரும் அந்து போய் விடுகிறது. ஆனால் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா மாதிரியான படங்கள் 100 கி.மீ வேகத்தில் ஓடி, கல்லாவை புல்லாக்குகிறது.
இந்த கெட்ட சகுனத்தை நெட்டித்தள்ளுவதற்குதான் இங்கு ஆளே இல்லை. நினைத்தால் 100 ஜோக்கர்களையும் 50 அப்பாக்களையும் எடுக்கிற அளவுக்கு சக்தி இருந்தும், ஏ.ஜி.எஸ் மாதிரியான நிறுவனங்கள் எதை நோக்கிப் போகின்றன என்பதற்கு இன்றைய அறிவிப்பு ஒன்றே பெருத்த உதாரணம்.
ஒரு காலத்தில் கள்ளக்காதல் ‘மேட்டர்’ ஒன்றை வலுவாகவும், வழவழப்பாகவும் சொல்லி கல்லா கட்டிய படம் திருட்டுப்பயலே. பத்திரிகையாளர்(?) சுசிகணேசன் இயக்கிய இந்த படம், ஏஜிஎஸ் சினிமாஸ்சின் முதல் படம். மாளவிகா தன் கள்ளக்காதலனுடன் சல்லாபிக்கும் வீடியோ ஒன்றை வைத்து பல கோடிகள் கேட்டு மிரட்டும் ஜீவன் கடைசியில் மாட்டினாரா இல்லையா என்பது கதை. அந்த சில நிமிஷ வீடியோதான் மொத்த படத்தையும் தள்ளிக் கொண்டு போன ஹாட் கேக்.
இப்போது அப்படத்தின் பார்ட் 2 வை எடுக்கப் போகிறதாம் ஏ.ஜி.எஸ். டைரக்டர்? அதே சுசி கணேசன்தான்.
பாபிசிம்ஹா ஹீரோவாக நடிக்க, வில்லனாக நடிக்கிறார் பிரசன்னா. ஹீரோயின் கேரக்டருக்கு கொழுத்த மீன் ஒன்றை தேடி வருகிறார்களாம்.