மழை, காற்று…கரண்ட் கட்? கவலையில் தியேட்டர்கள் அதிர்ச்சியில் விநியோகஸ்தர்கள்!
ரக ரகமாக பட்டாசு, வித விதமாக படங்கள் என்று ஒரு காலத்தில் களை கட்டிய தீபாவளி, இப்போது பொசுக்கென இரண்டே படங்களுடன் தன் கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டது. (நடுவில் இஞ்சி முறப்பா என்றொரு படம் கணக்கிலேயே வராமல்!) தமிழகத்தை பொருத்தவரை சுமார் 425 தியேட்டர்களில் வேதாளமும், சுமார் முன்னூத்தி சொச்ச தியேட்டர்களில் தூங்காவனமும் வெளியாகிறது. தொடர்ச்சியாக நான்கு நாட்கள் லீவ்! மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வரப்போகிறார்கள் என்கிற சந்தோஷக் கணக்கை சந்தேகக் கணக்காக்கிவிட்டது மழை.
தூரல், சாரல், அடைமழை, பேய் மழை எல்லாவற்றையும் தாண்டி, நஷ்ட மழைக்குள் நனைந்து விடுவோமோ என்கிற அச்சத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறது அநேக தியேட்டர்கள். அதுவும் வட மாவட்டங்கள் சுத்த மோசம்! பாண்டிச்சேரி, காரைக்கால், கடலூர், சிதம்பரம், நெய்வேலி, மயிலாடுதுறை, கும்பகோணம், உள்ளிட்ட முக்கியமான ஏரியாக்களில் அமைந்திருக்கும் தியேட்டர்களில் கவலை மேகங்கள் உச்சியில் நின்று கண்ணீரை வீசிக் கொண்டிருக்கிறது.
யெஸ்… சம்பந்தப்பட்ட ஏரியாக்களில் பல பகுதிகளில் கரண்ட் கூட இல்லை. இப்படி பாதிக்கப்படப் போவது சுமார் 120 தியேட்டர்கள் என்கிறது தகவல். இந்த எண்ணிக்கையும் இதிலிருந்து வரும் கலெக்ஷனும் கணிசமான தொகையல்லவா? வானிலை அறிக்கைப்படி இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை விடாது என்பதால், பல தியேட்டர்காரர்கள் விநியோகஸ்தர்களுக்கு தருவதாக சொன்ன அட்வான்ஸ் தொகையை தராமல் இழுத்தடிக்க, விநியோகஸ்தர்கள் சென்னையிலிருக்கும் தயாரிப்பாளர்களிடம் தலையை சொறிய, எல்லாருடைய நிலைமையும் ரங்க ராட்டினம் ஆடிக் கொண்டிருக்கிறதாம்.
வருண பகவானே, வழிவிடு! அதே நேரத்தில் ஏரி குளத்தை மட்டும் எப்படியாவது நிரப்பிடு!!
தமிழ் நாட்டில் கடந்த 3 நாட்களாக நல்ல மழை மற்றும் புயல் அடித்து வந்தது., இதில் இவனை பார்க்க ரசிகர்கள் திறந்டார்கலாம். பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்.