தேர்தலுக்கு முன்னாடியே தெறி வரட்டும்! குறுக்கு சால் ஓட்டும் லைக்கா?
வரப்போகும் படங்களில் மத யானை போல சிலுப்பிக் கொண்டு நிற்பது ‘தெறி’ மட்டும்தான். விஜய், அட்லீ, கலைப்புலி தாணு என்று பிரமாண்டங்கள் ஒன்று சேரும் படம் “எப்போது வரும்?” என்று காத்திருக்கும் கண்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் இப்படத்தை ஏப்ரல் 14 ந் தேதி தமிழ் வருடப்பிறப்புக்கு கொண்டு வரலாமா? வேண்டாமா? என்ற குழப்பங்கள் நிலவி வந்ததை இன்டஸ்ட்ரி அறியும். “தேர்தலுக்கு பிறகுதான் வரட்டுமே” என்று விஜய்யும் நினைத்ததாக கூறப்பட்ட நிலையில், படத்தை மொத்தமாக வாங்கி வெளியிடும் லைக்கா, “எலக்ஷனாவது… ஒண்ணாவது… யானை ரெடி, மேளம் ரெடி, கூட்றா கூட்டத்தை” என்கிற அளவுக்கு குஷி மூடில் இருக்கிறதாம்.
அதுமட்டுமல்ல, கபாலி படத்தையும் இதே நிறுவனம்தான் வெளியிடுகிறது. இரண்டு சூப்பர் ஸ்டார்களின் படங்களை அடுத்தடுத்து வெளியிடும் போது குறைந்த பட்சம் இரண்டு மாத இடைவெளியாவது வேண்டும் அல்லவா? அதனால்தான் முதலில் தெறியை இறக்கிவிடுவோம் என்று முடிவு செய்திருக்கிறதாம் அந்நிறுவனம்.
அவர்களின் ராஜ கட்டளையை அடுத்து மளமளவென ஆடியோ வெளியீட்டு விழா நடத்தப்பட்டு, ரிலீஸ் தேதியை நோக்கி ஓட ஆரம்பித்திருக்கிறது தெறி!