தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்- விமர்சனம்

‘தெரியாம நடிக்க வந்திட்டேன்’ என்பதை போல ஆரம்பகாலங்களில் அச்சுறுத்தி வந்த விஜய் வசந்த், ‘என்னமோ நடக்குது’ மூலம் மனசுக்கு நெருக்கமாகியிருந்தார். அவரது குடும்பத்திற்கே பழக்கப்பட்ட ‘தவணை முறை’ திட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்சினிமாவின் முக்கிய நடிகராகியிருக்கிறார் என்பதை இந்த படத்தின் இரண்டாம் பாதி நிரூபித்திருப்பதால், விஜய் வசந்த்… ‘ கோ அஹெட்! ’ அவருக்கு பில்டப் கொடுக்கும் பல வசனங்களில், தன் நிலைமையை உணர்ந்து ‘டேய்… என்னை பார்த்தாடா?’ என்று பம்முகிறாரே…. அங்கேயிருக்கிறது அவரது பணிவு. ஒரு படம் ஓடிவிட்டால் போதும். நான்தான் ரஜினி என்று மிடுக்கு நடை நடக்கும் சின்னஞ்சிறு ஹீரோக்கள் விஜய் வசந்திடம் ட்யூஷன் படிக்கப் போகலாம்.

கண்டதும் காதல் இருக்கிறதே… அது மனுஷனை கண்டந்துண்டமாக்கிவிடும் என்பதுதான் இந்த படத்தின் மஞ்சக்கரு, வெள்ளைக்கரு எல்லாம்! ஸ்கூலில் படிக்கும் நாயகி ரஸ்னா வீட்டில் அவ்வளவு செல்லம். அவர் கடைசி வரை கொஞ்சி கொஞ்சி பேசுவதை கேட்டால் நமக்கே ரெண்டு போடலாம் போலிருக்கிறது. இருந்தாலும் மூன்றாம் பிறை ஸ்ரீதேவிக்கு நெக்ஸ்ட் லெவலில் நின்று விஜய் வசந்தை படுத்தி எடுக்கிறது அந்த வளர்ந்த குழந்தை. வேறொன்றுமில்லை… வீட்ல எனக்கு நிச்சயம் பண்றாங்க. வாழ்ந்தா உன்னோடதான் என்று கிளம்பிவிடுகிறார் அவர். வேறு வழியில்லாமல் அவரை இழுத்துக் கொண்டு ஊட்டிக்கு கிளம்புகிறார் விஜய் வசந்த். நடுவில் குறுக்கிடும் ரஸ்னாவின் முறை மாமன் பவன், ‘போங்க… ஆனால் பத்து நாள் சேர்ந்து வாழ முடியுதான்னு பாருங்க. இல்லேன்னா திரும்பி வந்திருங்க. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் பேசவே கூடாது’ என்று வழிவிட்டு அனுப்புகிறார். இந்த பத்து நாளும்…? அதுதான் செகன்ட் ஹாஃப்! புது டைப்பான கதை. சுவாரஸ்யமான வசனங்கள், காட்சிகள் என்று ரகளை அடிக்கிறார் அறிமுக இயக்குனர் கே.ராமு.

காதல் மட்டுமே புத்தியை நிறைத்திருக்க, தன் காதலி காயத்ரியை ‘தேவதை…’ என்று வாயார அழைத்து மற்றவர்களையும் தேவதை என்று அழைக்க வைத்து அந்த சந்தோஷத்திற்காக கொண்டு போன ரூபாயை எல்லாம் கிஃப்ட் கொடுத்தே தொலைக்கும் விஜய் வசந்த், ஓடிப்போன மூன்றாம் நாளே சோத்துக்கு சிங்கியடிப்பதுதான் அந்த பத்து நாள் குருட்ஷேத்திரம். இவர் கேரட் தோட்டத்தில் காய் பிடுங்கி கையும் உடம்பும் சோர்ந்து போய் வந்தால், கார்த்திக்….என்று செல்ல்ல்லம் கொஞ்சியபடியே நாய்க்கு சோறு ஊட்டிக் கொண்டிருக்கிறார் ரஸ்னா. கடன் வாங்கி வந்த பத்து நாள் மளிகை பொருளையெல்லாம் ஒரே நாளில் சமைத்து விஜய்யை மிரள வைக்கிறார். அதுவும் சாம்பாரில் அப்படியே முழுசாக முட்டை கோஸ், வெண்டைக்காய்களை போட்டு வைத்திருப்பதையெல்லாம் கண்டு அதிர்கிறது தியேட்டர். போதும் போதாதற்கு காரட் தோட்டத்திற்கே வந்து வேலைக்கு உலை வைக்கும் காட்சியும் செம க்ளாப்ஸ்.

இவர் செய்யும் டார்ச்சர்கள் எதையும் பொருக்க முடியாமல், பாத்ரூம் சுவற்றில் முட்டிக் கொண்டு அழும் விஜய் வசந்த் நிஜமாகவே பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார். இதுதான் பழைய பாக்யராஜ் பாணி. இதை விடாமல் பற்றிக் கொண்டால், விஜய் வசந்துக்கு செமத்தியான எதிர்காலம் இருக்கிறது.

ஒரு பெண் எவ்வளவு விளையாட்டு புத்தி உள்ளவளாக இருந்தாலும், குறிப்பிட்ட நொடியில் பொறுப்பான தாய்குலம் ஆகிவிடுவாள் என்பதை அழகான நடிப்பால் உணர்த்துகிறார் ரஸ்னாவும். இவருக்கு டப்பிங் கொடுத்திருப்பவர் எவரோ? பாதி பாராட்டுகளை அவருக்கும் கொடுத்துவிடுவதுதான் நியாயம்!

ஒரு ஹீரோவாக வந்திருக்க வேண்டியவர் பவன். என்ன காரணத்தினாலோ தட்டி தட்டி போய் இன்னும் வில்லனாகவே முறைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த படத்தில் அவர் வெறும் வில்லன் மட்டுமல்ல, புத்திசாலி தாய்மாமனும் கூட. ஹீரோவுக்கு இணையாக ரசிகர்களின் அன்பை அள்ளிக் கொள்கிறார். படத்தில் மயில்சாமி, கிரேன் மனோகரெல்லாம் இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் ஒரு தம்படி பிரயோஜனம் இல்லை. எல்லா புகழும் வசன உரையாடல்காரருக்கும் விஜய் வசந்துக்கும்தான்.

பி.ஆர்.ஸ்ரீநார்த் என்பவர்தான் இசையமைப்பாளர்! நார்த் மட்டுமல்ல, மற்ற மூன்று திசைகளிலும் கூட கேட்கும்படி இருக்கிறது பாடல்கள்.

படத்தின் முதல் பாதியை வேறு ஒருவரும் இரண்டாம் பாதியை வேறு ஒருவரும் எழுதி இயக்கியிருப்பார்களோ என்கிற சந்தேகத்தை தருகிறது இடைவேளை மு.பி. வித்தியாசங்கள். முதலில் இருந்தே அப்படிதானா? அல்லது முடியலைடா சாமீய்… என்பதற்காக திருத்தம் செய்யப்பட்டதா? அந்த அண்ணாச்சிக்கே வெளிச்சம்!

தெரியாம கூட இந்த படத்தை மிஸ் பண்ணிடாதீங்க லவ்வர்ஸ்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் – ஜெயலலிதா வேண்டுகோள்

பெங்களூர்: அதிமுகவினர் யாரும் என்னைப் பார்க்க சிறைக்கு வர வேண்டாம். தமிழக மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்....

Close