திருடன் போலீஸ்- விமர்சனம்

சிம்மக்குரலோன் சிவாஜி தன் நாபிக் கமலத்திலிருந்து வசனத்தை பீய்ச்சிய காலம் தொட்டே காக்கி சட்டை கதைகள் தமிழ்சினிமாவில் நிறைய உண்டு. லத்தியால் ஒத்தியெடுக்கிற கதைகளும் வந்ததுண்டு. லத்தியே பிய்த்துக் கொண்டு போகிற அளவுக்கு போட்டுத் தாக்கிய கதைகளும் உண்டு. ‘திருடன் போலீஸ்’ கூட போலீஸ் கதைதான். ஆனால் இதுவரை சொல்லப்படாத விதம். சொல்லப்படாத ரகம்! இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக்ராஜு யாரிடமும் பணியாற்றியதில்லையாம். முனியாண்டி கோவில்ல முட்டிபோட்டு உருண்டாலும் நம்புற மாதிரியில்லையே பிரதர்! வசனங்களில் அப்படியொரு ஸ்மார்ட்நெஸ். கழுத்தோரம் சென்ட்டிமென்ட் புடைத்துக் கொண்டு கிளம்பி, கண்ணோரத்தில் நீர் எட்டிப்பார்க்கும் நேரத்தில், பொசுக்கென்று ஒரு ஜோக்கை போட்டு டிராக்கை திருப்புகிற லாவகம் இருக்கிறதே… அதற்காகவே ரிப்பீட் அடித்து பார்க்கலாம் ‘திருடன் போலீஸ்’ படத்தை.

டிபார்ட்மென்ட் ஆட்கள் குடியிருக்கும் அபார்ட்மென்ட்டில் அசிஸ்டென்ட் கமிஷனர் முத்துராமனின் மகன் நிதின் சத்யாவுக்கும், கான்ஸ்டபிள் மகன் தினேஷுக்கும் அவ்வப்போது உரசல். பிள்ளைகள் சண்டையில் நடுவில் நுழையும் அப்பா முத்துராமன், தந்திரமாக கான்ஸ்டபிளை கொலை செய்ய வைக்கிறார். அந்த ஏரியா ரவுடி ராஜேந்திரனை என்கவுன்ட்டரில் போடுவதற்காக செல்லும் கான்ஸ்டபிள் ராஜேஷ் ராஜேந்திரனாலேயே கொல்லப்படுகிறார். அப்பா இறந்ததை நினைத்து மகன் தினேஷ் ஒரு சொட்டு கண்ணீர் விடணுமே? ம்ஹும். அந்தளவுக்கு ‘பின்புறத்தில்’ பின்னி எடுத்த அப்பாவை எப்போது நினைத்தாலும் எரிச்சல் அவருக்கு. கொலை செய்யப்பட்ட கான்ஸ்டபிள் உடலை அரசு மரியாதையோடு அடக்கம் செய்ய வரும் கமிஷனர் நரேன், தினேஷுக்கு போலீஸ் வேலை போட்டுக் கொடுக்க, அப்பா பட்ட சிரமம் எல்லாம் அப்புறம்தான் புரிகிறது மகனுக்கு. அப்பா ராஜேஷை நினைத்து நினைத்து உருகுகிறார். அவரை கொலை செய்த ரவுடி ராஜேந்திரனையும், கொலை செய்ய துண்டிய அசிஸ்டென்ட் கமிஷனரையும் என்ன செய்தார் என்பது க்ளைமாக்ஸ்!

சுடுகாட்ல சுட்ட அப்பளம் விற்ற மாதிரி, சூடான இந்த கதையில் எங்கேயிருந்து காமெடி வந்துச்சு? அங்குதான் தலைநிமிர்ந்து நிற்கிறது இயக்குனரின் வித்தை!

தினேஷ் இன்னும் குக்கூ ஃபீலிங்ஸ்சிலிருந்து மீளவில்லை என்பதை அந்த மேனரிசங்கள் நினைவுபடுத்தினாலும், நாலைந்து காட்சிகள் போனதும் நமக்குள் நுழைந்து ஆட்சி பண்ண ஆரம்பித்துவிடுகிறார். லஞ்சம் வாங்காத போலீசாக நெஞ்சு நிமிர்த்தும் அவர், தனது எதிரியான நிதின் சத்யா வீட்டிலேயே எடுபிடி வேலை செய்ய வேண்டியிருக்கிறதே என்று குமுறுகிற காட்சிகள் சூப்பர்ப். சட் சட்டென்று நெஞ்சு பொங்கி ‘எங்கப்பாடா…’ என்று பால சரவணனை படுத்தி எடுக்கும்போது ரகளையாகிறது தியேட்டர். கப் அண் சாஸர் போல பொருத்தமான ஃபிரண்ட்ஸ் இவரும் பால சரவணனும். ‘நீ பொம்பள கையால அடி வாங்கிட்டு வந்திருக்கே, நான் திருட்டு பயலுங்களுக்கு சோறு வாங்க போறேன். ஆனா இது தெரியாம நம்மளை கண்டு பயபுள்ளைங்க எப்படி தெறிச்சு ஓடுறானுங்க பாரு. அதான் போலீஸ் வேல…’ என்று பாலசரவணன் உண்மையை உடைக்கும்போது சிரிக்காத இதழ்கள் உண்டோ?

போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும், கீழே வேலை செய்யும் கான்ஸ்டபிள்களுக்கும் இடையே இருக்கும் மலை – மடு வித்தியாசத்தை புட்டு புட்டு வைக்கிறது வசனங்களும் காட்சிகளும். அதே நேரத்தில் போலீஸ் வேலையின் கண்ணியத்தையும் பொட்டில் அடித்த மாதிரி சொல்கின்றன வசனங்கள்.

இந்த படத்தின் ஆகப்பெரிய பலமே, ரவுடி ராஜேந்திரனும், ஜான் விஜய்யும்தான். என்னாவொரு பாடி லாங்குவேஜ்?! அதுவும் தினேஷின் அடி பொறுக்க முடியாமல் வெவ்வேறு வேஷங்களில் தப்பி ஓடும் ராஜேந்திரனுக்கு அந்த ஃபிகர் வேஷம்… வாவ்! கடைசியாக தினேஷிடம் சிக்கிக் கொண்டு தன்னால் கொலை செய்யப்பட்ட ராஜேஷின் போட்டோவை வணங்கும்போது, ‘இந்த சனியன்தான் உன் பிள்ளைன்னு தெரிஞ்சுருந்தா உன்னை கொன்னே இருக்க மாட்டேன்’ என்று வாய்விட்டு புலம்புவதும், ‘எங்கப்பனை கொன்னுட்டானேன்னு நீ அழுவுற. உங்கப்பனை ஏண்டா கொன்னேன்னு தினம் தினம் நான் அழுவுறேன்’ என்று ராஜேந்திரன் சீரியசாக புலம்புவதும் அல்டிமேட் சிரிப்ப்பய்யா…!

டிபிக்கல் வில்லனாகவே நடித்திருக்கிறார் முன்னாள் ஹீரோ நிதின் சத்யா. இந்த படத்தில் காதல் இருக்கிறது. காதலிக்க ஐஸ்வர்யா இருக்கிறார். ஆனால் இதெல்லாம் இருந்தா என்ன? இல்லாட்டிதான் என்ன? என்கிற மாதிரியே அரைகுறையாக தத்தளிக்கிறது லவ்!

ஒரே ஓரு பாடல் காட்சியில் ஈகோ பார்க்காமல் ஆடிக் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. அந்த பெருந்தன்மைக்காகவே இந்த பாடலை ரசிக்கலாம். அதற்காக யுவன்சங்கர்ராஜாவின் இசையை ரசிக்கலாம் என்று அர்த்தமல்ல. இந்த படத்தின் பெரிய திருஷ்டி பொட்டே யுவனின் இசைதான். பாவம்… மனுஷனுக்கு இதைவிட பெரிய வேலை இருக்கே, என்னதான் செய்வார் அவரும்? ஒளிப்பதிவாளர் சித்தார்த் , எடிட்டர் பிரவீன் கே.எல் ஆகியோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

திலீப் சுப்பராயனின் சண்டைக்காட்சியில் நெருப்பாக சீறுகிறார் தினேஷ். ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தை நோக்கி ஒரேயடியாக அவர் தாவினாலும் பொறுத்துக் கொள்ளலாம்.

போலீஸ் யூனிபார்ஃம் மேல் காக்கா வந்து ‘கக்கா’ போன மாதிரியான ஆக்ஷன் கதைகளுக்கு விடுதலை! இனிமேல் திருடன் போலீஸ் விளையாட்டில் சிரிப்பு முட்டிக்கொள்ளும். அந்த புண்ணியத்தை கட்டிக் கொண்டிருக்கிறார் அறிமுக இயக்குனர் கார்த்திக்ராஜு.

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. thanbi velupraba says

    என்ன ஆச்சு..Mr. அந்தணன், யுவனை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், you dont mention about his music in your review..அதுக்காக இப்படி கேவலமாக/ மடத்தனமாக விமர்சிக்கவேண்டோம்..இந்த படத்தில் மிக குறிப்பிடப் படவேண்டிய ரோல் யுவனுக்கு..இதை மனசாட்சியுள்ள/ காதுகேட்கும் திறனுள்ள – எல்லோரும் ஒத்துகொள்வார்கள் , இந்த அந்தணனை தவிர..

    சென்னையின் பிரபல வாணொலி நடத்திய கருத்துக்கணிப்பில் ரகுமான் இசையில் ஐ, காவியத்தலைவன், அனிருத் இசையில் கத்தி என பிரம்மாண்ட படங்கள் வந்தாலும், இதையெல்லாம் பின்னுக்கு தள்ளி யுவனின் திருடன் போலிஸ் படத்தில் வரும் ‘பேசாதே பார்வைகள் வீசாதே’ பாடல் முதல் இடத்தை பிடித்துள்ளது..

    இது போன்ற சிறிய படங்களுக்கு/ புதிய இயக்குனர்கள் அறிமுக படங்களுக்கு ‘காசு’ பார்க்காமல் ‘மனசு’ -வைக்கும் ஒரே இளைய தலைமுறை இசைஅமைப்பாளர் -யுவன் மட்டும் தான்..(கழுகு, வானவராயன் வல்லவராயன், திருடன் போலீஸ், குங்குமபூவும் கொஞ்சுபுறாவும், இன்னும் எத்தனையோ இருக்கு)..

    ‘முதல்ல’ -நீங்க உங்கள் மனநிலையையும்/ ‘காதுகேட்கும் திறனையும்’ செக் பண்ணவும்..

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
முடிஞ்சா பாருங்க… அலறவிடும் ஸ்ரீதிவ்யா

அந்தஸ்து ஏற ஏற அலட்டலும் ஏறும் என்பது உலகறிந்த பொதுக்குறள்தான். அதற்காக றெக்கை முளைச்சதும் பறக்கவிட்டா வளர்த்தவனின் முதலீடுக்குதான் நஷ்டம் வந்து சேரும். அதனால் விட மாட்டேன்...

Close