திருமணம் என்னும் நிக்காஹ் -விமர்சனம்
இந்த படத்தின் ஒன் லைனை இப்படியும் சொல்லலாம்! ரயிலில் கிடைத்த காதல், வெயிலில் விரித்த குடை மாதிரி இதமாக இருந்ததா? இல்லையா?
‘ரயில் சினேகம் பிளாட்பாரத்தோடு போச்சு’ என்றில்லாமல் அதற்கப்புறமும் தொடர்ந்தால் அதன் வலி வேதனை ஜாலி சோதனைகள் எப்படியிருக்கும்? அதுதான் இந்த படத்தின் டிராவல்! அப்படியென்றால் படத் தலைப்பில் வரும் ‘நிக்காஹ்..’. ‘திருமணம்…’ அதெல்லாம்? லவ்வர்சுக்குள் வரும் சிக்கலே அதுதானய்யா….
ரயில் டிக்கெட் கிடைக்காத ராகவாச்சாரி என்கிற ஐயங்கராத்து பையனான ஜெய், அபுபக்கர் என்ற பெயரில் பயணம் செய்கிறார். அதே பெட்டியில் வரும் ஐயங்கராத்து பெண்ணான நஸ்ரியா ஆயிஷா என்ற பெயரில் பயணமாகிறார். தனது சின்ன சின்ன அக்கறைகள் மூலம் நஸ்ரியாவை கவரும் ஜெய், ரயில் பயணம் முடிவதற்குள் நஸ்ரியா மனசில் இடம் பிடித்துவிடுகிறார். சென்னை வந்த பிறகும் நட்பு தொடர்கிறது. மாற்று பெயர்களால் ஒரே மதம் என்று சந்தோஷப்படுகிற இருவர் மனசிலும், தங்களது நிஜமான மதம் பற்றி தெரிய வந்தால் என்னாகும் என்கிற அச்சம் இருக்கிறது. இருந்தாலும், காதல் அந்த அச்சத்தை மிச்சம் வைக்காமல் காலி பண்ண, அதே மாற்றுப் பெயரிலேயே காதலை தொடர்கிறார்கள்.
அதே நேரத்தில், எதிரெதிர் மதம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் பீறிட இருவருமே அது பற்றி தெரிந்து கொள்ள ஆவலாகிறார்கள். ஜெய் திருவல்லிக்கேணி முஸ்லீம் பெரியவர் ஒருவரது வீட்டுக்கு போய் இஸ்லாம் பற்றி எல்லா சந்தேகங்களையும் கரைத்துக் குடிக்கிறார். விதி? அந்த வீட்டிலும் ஒரு இளம்பெண்ணை வைத்திருக்க, அவருக்கு ஜெய் மீது காதல். தனது தோழி ஆயிஷாவின் பெயரையே தனது பெயரென சொல்லிக் கொண்டிருக்கும் நஸ்ரியா, அவரிடம் இஸ்லாம் பற்றி அவ்வப்போது கேட்டு தெரிந்து கொள்கிறார். இருவரும் சந்திக்கும் போதெல்லாம் கற்ற பாடங்கள் கை கொடுக்கிறது. காதலையும் வளர்க்கிறது. ஒரு கட்டத்தில் இருவருக்குமே ஒரே மதம்தான். இவ்வளவு காலம் பொய்யாக நடித்தோம் என்று புரிய வருகிற நேரம்தானே நல்லநேரம்? ஆனால் இவர்களே அதை கெட்ட நேரமாக்கிக் கொள்கிறார்கள். இவ்வளவு காலம் பொய் சொல்லிவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சியில் தவிக்கிறார்கள். வேறு வழியில்லாமல் பிரியவும் செய்கிறார்கள். மீண்டும் காதல் இவர்களை இணைத்ததா என்பது க்ளைமாக்ஸ்.
கனவில் கூட அசைவத்தை நினைக்காத இருவரும் பிரியாணி பற்றி சிலாகித்துக் கொள்வதில் ஆரம்பித்து, சின்ன சின்ன சுவாரஸ்யங்களால் படத்தை நகர்த்துகிறார் அறிமுக இயக்குனர் அனீஸ். இவரே ‘பாய்’ என்பதால், இஸ்லாம் பற்றிய எல்லா விபரங்களும் கொட்டிக்கிடக்கிறது படத்தில். அதேநேரத்தில் இஸ்லாமுக்கும் இந்து மதத்திற்கும் இடையே இருக்கிற ஒற்றுமைகளை அவர் காட்சிகளாகவும் வசனங்களாகவும் வைக்கிற போதுதான், நாட்டில் இவ்வளவு மத துவேஷங்கள் வேண்டுமா என்கிற நியாயம் புரிபடுகிறது.
ஜெய், ஐயங்கராகவும் முஸ்லீம் இளைஞனாகவும் இரண்டு கெட்டப்புக்குமே அட்டகாசமாக செட் ஆகிவிடுகிறார். (நிஜத்திலும் என்பதுதான் ஆச்சர்யம்) நீலாங்கரை தாண்டி ஆபிசில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அவர், ‘இன்னும் பத்து நிமிஷத்தில் மவுண்ட் ரோடிலிருப்பேங்க’ என்று கூறிவிட்டு ஒவ்வொரு சிக்னலிலும் நஸ்ரியாவின் போன் கால்களை சமாளிப்பது அழகோ அழகு. ஒவ்வொரு இக்கட்டான நேரத்திலும், ‘என் கல்யாணம் உங்க தலைமையில்தாங்க’ என்று அந்த முஸ்லீம் பெரியவரிடம் இவர் சொல்வதுதான் சிக்கலையும் உருவாக்குகிறது. அதே சிக்கலையும் அவிழ்க்கிறது. எப்படியோ? நமக்கு ‘வடகறி’ கொடுத்து இம்சை செய்யவில்லை ஜெய்.
நஸ்ரியா தமிழில் ஒப்பந்தமான முதல் படம் இது. அவரது நிக்காஹ் நேரத்தில்தான் ரிலீசாகிறது. (என்னே ஒரு ஒன்றுமை?) அவரது கண்கள் மட்டுமே பாதி டயலாக்கை பேசி விடுகிறது. துறுதுறு நஸ்ரியா, அதற்கப்புறம் கவலை நஸ்ரியாவாக காட்சி கொடுக்கும் போதுதான் காதல் எவ்வளவு மோசமான வியாதி என்பது புரிகிறது. மனதுக்குள் பூத்த அவ்வளவு காதலையும் ஜெய் மீது வைத்து விட்டு வீட்டில் சொன்னார்கள் என்பதற்காக ஒரு சாம்பார் டப்பிக்கு அவர் சம்மதம் சொல்வதும் பகீர்தான்.
சுவாரஸ்யமான ஒரு ஊதாக்கலரு ரிப்பனில் அவசியமில்லாமலே ஏகப்பட்ட முடிச்சுகள் போட்டிருக்கிறார் இயக்குனர் அனீஸ். காதலர்கள் இருவரும் இத்தனை காலம் பொய் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரே மதம்தான் என்பதை அவர்களே புரிந்து கொள்கிற காட்சியும், அதை ரசிகர்களுக்கு அவிழ்க்கிற காட்சியும், வினாடியில் கடந்து விடுகிறது. கண்மூடி திறப்பதற்குள் என்ன நடந்தது என்பதே புரியாமல் தவிக்கிறார்கள் ரசிகர்களும். ‘அட… நாம ரெண்டு பேருமே பிராமின்தானா? நல்லதா போச்சுடா நாராயணா…’ என்ற கொண்டாட்டத்தோடு முடிய வேண்டிய படம், அதற்கப்புறமும் எக்ஸ்ட்ரா பிட்டிங்குகளுடன் அலைவது ஏன் வாத்தியாரே? அப்புறம்… அந்த திருவல்லிக்கேணி இஸ்லாம் பெரியவரின் குடும்பம் ஜெய்யை ஏன் கொலை வெறியோடு துரத்த வேண்டும்?
படத்தின் ஆகப்பெரிய பலம் மதம் தொடர்பான ஆழமான விளக்கங்கள் என்றால், மற்றொன்றாக கம்பீரம் காட்டுவது ஜிப்ரானின் இசை. மெலடிகளில் உயிர் தடவுகிறார் மனுஷன். சில்லென… தாரா தாரா… இரண்டு பாடல்கள் அருமை. லோகநாதனின் ஒளிப்பதிவும் அழகு. படத்தில் வரும் சில முக்கியமான குழப்பங்களை தீர்க்க வேண்டிய எடிட்டர் காசி.விஸ்வநாதன் கூட தன் அனுபவத்தில் சறுக்கியிருக்கிறாரே, அதுதான் வேதனை!
அறிமுக இயக்குனர் அனீஸ் யோசித்திருக்கும் பல காட்சிகளில் சுவாரஸ்யம் ப்ளஸ் சமூக பொறுப்புணர்வு. இஸ்லாமிய பெண்ணை காதலித்த பின்பு அவர்கள் தொடர்பான குண்டுவெடிப்பு தீவிரவாத செய்திகளை கூட ஜெய் தவிர்க்க நினைப்பதாக காட்டுகிறாரே, பளிச்!
தயிர் சாதத்தில் கறி மசாலாவையும், பிரியாணிக்குள் கறி வேப்பிலையையும் மிக்ஸ் பண்ணிய சாமர்த்தியத்திலும் ஆஹா போட வைக்கிறார் அனிஸ்!
பட்…? திருமணம் என்னும் ‘குஸ்கா’!
-ஆர்.எஸ்.அந்தணன்