திருநாள் விமர்சனம்

காபிக்கு பேர் போன கும்பகோணத்தில் நடக்கும் கதை. ஆனால் காபி வாசனைக்கு பதில் ஒரே ரத்த வாசனை! கதையே ரவுடிகளை பற்றியது என்பதால், ஏ பாசிட்டிவ்-ல் ஆரம்பித்து இசட் நெகட்டிவ் வரைக்கும் ரத்தக்குளியல் நடத்துகிறார் ஹீரோ. சட்டையிலிருந்து பிளேடை உதட்டாலேயே உருவி, அதை புரோட்டா மெல்லுவதை போல மென்று எதிராளி முகத்தில் துப்பி ஓட வைக்கும் ‘ஷார்ப்’பான ரவுடி ஜீவா. இவருக்கு வரும் காதலும், சோதனையும்தான் முழு படம்.

கதை நடக்கும் ஏரியாதான் கும்பகோணம், வடசென்னை, மன்னார்குடி, மதுரை என்று மாறுகிறதே தவிர, கதையென்னவோ இப்படி பல தோசைகளை பார்த்த ஒரே தோசைக்கல்லாகதான் இருக்கிறது.

ஏரியா ரவுடி சரத் லோகித்வாவுக்கு அல்லக்கையாக செயல்படும் பிளேடு, அவரது எல்லா அநியாயத்தையும் செய்து முடிக்கும் தளபதியாக இருக்கிறார். அதே ஊரில் எல்கேஜி குழந்தைகளுக்கு டீச்சரம்மாவாக இருக்கும் நயன்தாராவின் கனவில் அடிக்கடி ஊடுருவி அவருக்கு தாலி கட்டும் ஜீவா, ஒரு சந்தர்ப்பத்தில் அதுவே நிஜமாகிற சந்தர்ப்பத்தில், தன் முதலாளி சரத் லோகித்வாவை பகைத்துக் கொள்ள நேரிடுகிறது. காதலியோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிற ரவுடியை, போட்டுத்தள்ள வேண்டும் என்று முன்னாள் முதலாளி சரத் நினைக்க, ஜீவாவின் ரீயாக்ஷன் என்ன என்பதோடு முடிகிறது படம்.

ஜீவாவின் முறைப்பும், மேக்கப்பற்ற அந்த முகமும், கும்பகோணம் தஞ்சாவூர் பக்க பொறுக்கிகளை அப்படியே கண்முன் கொண்டு வருகிறது. அவர் பிளேடை உருவுகிற அந்த காட்சி, எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பு தட்டாத அமர்க்களம். ஒரு ரவுடி நிம்மதியாக திருந்தி வாழ நினைத்தாலும், போலீசும், ரவுடிகளும் விட மாட்டார்கள் என்பதை பொட்டில் அறைந்த மாதிரி சொல்கிற காட்சிகளில் உணர்ந்து நடித்திருக்கிறார் ஜீவா. குறிப்பாக என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரியிடம் கெஞ்சுகிற அந்தக்காட்சி மாவட்டத்துக்கு மாவட்டம் நடக்கும் எழுதப்பட்டாத போலீஸ் ரெக்கார்டு. காதல் காட்சிகளில் கூட ரொம்ப வழியாமல், தன் ரவுடி இமேஜ் உணர்ந்து மிடுக்கு காட்டும் ஜீவாவை நிறைய ரசிக்க முடிகிறது.

நயன்தாராவுக்கும் படத்தின் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமிக்கும் என்ன கொடுக்கல் வாங்கலோ? வைக்கப்பட்டிருக்கும் பல கோணங்களில் நயன்தாரா என்ற மோகினி பிசாசு, வெறும் பிசாசாகவே தெரிகிறது. மேக்கப்மேன் பிரச்சனையா? ஒளிப்பதிவில் சிக்கலா? அல்லது டிஐ எபெக்டில் கோளாறா? கண்டு ஆராய வேண்டிய முக்கியமான தருணத்தில் இருக்கிறார் நயன்தாரா. இல்லையென்றால், பல இடங்களில் உங்கள் ரசிகர் மன்றங்கள் காலாவதியாகிவிடும் அபாயம் இருக்கிறது மோகினி. அதிலும் வாடி வதங்கிய வெற்றிலை கொடியாக இருக்கிறது அவர் தேகம்! என்னதான் இருந்தாலும், எல்கேஜி ராஸ்கல் ஒருவன் கொடுக்கும் அந்த லிப் கிஸ்…. ஜாலியோ ஜிம்கானா!

சற்று ஓவராகவே மிரட்டியிருக்கிறார் வில்லன் சரத் லோகித்வா. பிறக்கும் போதே இவர் வில்லனாவார் என்று தெரிந்தே ஆண்டவனால் பிக்ஸ் பண்ணப்பட்டிருக்கிறது அவருடைய கண்கள். ஊரெல்லாம் மேயும் அவருக்கு எதற்கு ஒரே ஒரு பர்மனன்ட் வைப்பாட்டி? கேட்கிற அதே நேரத்தில், விடுங்கப்பா… என்று சொல்ல வைக்கிறது அந்த ‘வைப்பு’ மீனாட்சியின் அனாடமியும் அட்டகாச கவர்ச்சியும்! சிலுக்கு மும்தாஜ்கள் இல்லாத ஊரில் மீனாட்சிதான் சர்க்கரை. வந்துரும்மா பர்மெனன்னட்டா!

திக்கி திக்கி பேசும் கருணாஸ், பரிதாபப்பட வைக்கும் பாத்திரத்திற்குள் மூழ்கியிருக்கிறார். கடைசியில் இவரும் ஜீவாவும் சேர்ந்து கொண்டு போடுகிற அந்த திட்டம், திடுக்கிடும் திருப்பம்தான்.

படத்தில் என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் நம்ம கோட் சூட் கோபிநாத்! நீயா நானா இமேஜ் கை கொடுக்கிறது. பிரபல ரவுடி திருச்சி துரையை (வ.ஐ.செ.செயபாலன்) போட்டுத்தள்ளும் அந்த காட்சி, போலீசின் உடுப்பை இன்னும் மொட மொடப்பாக்குகிறது.

அதிகம் பேசாமல் மிக மிக மவுனமாக அதே நேரத்தில் அழுத்தமாக தன் நிலையை புரிய வைக்கிறார் ஜோ மல்லூரி.

இசை ஸ்ரீ. (வேறு யாருமல்ல, நம்ம ஸ்ரீகாந்த் தேவாதான்) பெயர் மாறியதும் இவரின் ஆர்மோனியப் பெட்டியின் ஸ்டைலே மாறிவிட்டது. இன்னொரு டி.இமானாக மாறி அவர் போட்டிருக்கும் பாடல்கள் அத்தனையும் செம ஹிட்! தொடரட்டும் உங்கள் அசத்தல்…

நயன்தாரா விஷயத்தில் ஏமாற்றிய ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, மற்ற ஏரியாக்களில் சவால் விட்டு அசரடித்திருக்கிறார். கடுப்பு கலந்த பாராட்டுகள் சார்.

எவ்வளவுதான் பழைய கதையாக இருந்தாலும், கேன்ட்டீன் பக்கம் ஓடவிடாமல் தடுத்தாட் கொள்கிறது டைரக்டர் ராம்நாத்தின் திரைக்கதை தந்திரம். பாராட்டுகள்… அத நேரத்தில் இன்னொரு அட்வைஸ்!

ஜீவாவுக்காக கதை கேட்கும் குழுவில், யாரோ ஒரு ‘பிளேடு’ இருக்கிறார். கோபிநாத்தின் என்கவுன்ட்டர் துப்பாக்கியால் அவரை போட்டுத்தள்ளுங்க ஜீவா. அப்புறம் எல்லாமே சுபமஸ்து!

-ஆர்.எஸ்.அந்தணன்

https://www.youtube.com/watch?v=plmhu5pbnIk

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Simba Songs | Pinjula Pinjula Song with Lyrics | Bharath | STR | Vishal Chandrashekhar

Close