வேந்தர் மூவிசுக்கு ரஜினி கால்ஷீட் தருவதாக சொல்லவேயில்லை! திருப்பூர் சுப்ரமணியன் மறுப்பு

இன்னும் ஓராண்டானாலும் இழுத்துக் கொண்டேயிருக்கும் போலிருக்கிறது லிங்கா விவகாரம். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கும், ரஜினிக்கும் இடையே தூதுவராக செயல்பட்ட பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து லிங்கா விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை நடந்தது என்ன? என்று கூறினார்.

‘படம் வெளியான மூன்றாவது நாளிலிருந்தே சிங்காரவேலன் தரப்பினர் ரஜினி பற்றியும், படத்தை பற்றியும் அவதூறாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். விநியோக துறைக்கு புதிதாக வந்தவர்கள் என்பதாலும், எந்த சங்கத்திலும் அவர்கள் உறுப்பினர்கள் இல்லை என்பதாலும் இந்த விவகாரத்தில் யாரும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அதற்கப்புறம் அவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்திய பிறகு என்னை அழைத்த ரஜினி, இந்த விவகாரத்தில் உண்மையில் நடப்பதென்ன என்பதை விசாரித்து சொல்லும்படி கேட்டுக் கொண்டார். அதற்கப்புறம் நான் கணக்கு வழக்குகளை விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடம் வாங்கி ரஜினி சாரிடம் கொடுத்தேன். அவர்களுக்கு 33 கோடி நஷ்டம் ஏற்பட்டிருந்ததும் உண்மைதான் என்று  எடுத்துக் கூறினேன்’.

‘தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும் லிங்கா படத்தின் மூலம் பெரிய அளவில் சம்பாதிக்கவில்லை என்பதால், சிறிய அளவு நஷ்ட தொகையை திருப்பி தருவதாக ஒப்புக் கொண்டார். முதலில் ஐந்து கோடி தருவதற்கு மட்டுமே ஒப்புக் கொண்டவரை, மெல்ல மெல்ல 12.5 கோடி வரை திருப்பி தருவதாக ஒப்புக் கொள்ள வைத்தோம். தயாரிப்பாளர் தரப்பில் இருந்து 6.26 கோடி பணம் மட்டுமே கிடைத்தது. இதை விநியோகஸ்தர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டோம். இன்னும் 6.24 கோடி பணம் வரவில்லை. வந்தவுடன் விநியோகஸ்தர்களுக்கு பிரித்துத் தந்துவிடுவோம். இதற்கிடையில் ரஜினி சார் வேந்தர் மூவிசுக்கு கால்ஷீட் தருவதாக நான் சொல்லவேயில்லை. அவர் அப்படி சொல்லாத போது நான் எப்படி சொல்ல முடியும்? நான் பேசிய பல விஷயங்களை ஆடியோவாக வெளியிடும் சிங்காரவேலன், இப்படி நான் சொன்னதாக சொல்கிறாரே… அதையும் வெளியிட வேண்டியதுதானே?’ என்று கேள்வி எழுப்பினார். ‘இன்னும் ஒரு வாரத்திற்குள் மீதி பணத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தந்துவிடுவோம்’ என்றார் அவர்.

சந்திப்பின்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, நடிகர் சங்க தலைவர் சரத்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இதற்கு பதிலடி தரும் விதத்தில் சிங்காரவேலன் தலைமையில் நாளையும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. அங்கு என்ன பூதத்தை கிளப்புவார்களோ?

Read previous post:
நடந்தது இதுதான்! டோண்ட் மேக் டென்ஷன்!

சற்று தாமதமானாலும் இவிய்ங்க அட்டகாசம் பொறுக்க முடியாமல்தான் இந்த நியூஸ். (மொதல்ல இதெல்லாம் ஒரு நியூசா? என்று மற்றவர்கள் குமுறினாலும்...) சமூக வலைதளங்களில் ஒரு விஷயத்தை கொண்டாடிக்...

Close