எழுத்தாளர்களுக்கு தமிழ்சினிமா தரும் மரியாதை இவ்ளோதான்!

சில தினங்களுக்கு முன் முன்னணி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்கள் எழுத்தாளர்கள் சுபா! அதில், “ஒரு படம் துவங்கப்படுவதற்கு முன் அழைக்கப்படுவது நாங்கள்தான். ஆனால் எல்லாரும் சம்பளம் வாங்கிய பிறகும் கூட கடைசியில் எங்கள் சம்பளத்தை வாங்க அரும்பாடு பட வேண்டியிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்கள்.

யாரோ ஒரு சோப்ளாங்கி டயலாக் ரைட்டர்ஸ் இப்படி புலம்பியிருந்தால் அதில் ஒன்றும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. அழுகுன வாழைப்பழத்துக்கு நசுங்குன தக்காளிதான் நல்ல ஜோடியா இருக்க முடியும்னு விட்டுட்டு போயிடலாம். ஆனால் கோ- வில் ஆரம்பித்து கே.வி.ஆனந்தின் வெற்றிப்படங்களில் பயணித்து, அண்மையில் வந்து கலெக்ஷன் சூறாவளியாக கைதட்டல் பெற்ற தனி ஒருவன் வரைக்கும் சுபாவின் எழுத்தில் விளைத்த வெற்றிகள் ஏராளம். இவர்களுக்கே இந்த நிலைமையா?

அண்மையில் எழுத்தாளர் யுவகிருஷ்ணா தன் வலைதளத்தில் ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார். அது அப்படியே உங்கள் பார்வைக்கு கீழே தரப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட நியாயவான்கள் வாழ்ந்த பூமியில்தான் இப்படியொரு அவலம். ஆமாம்… சுபா சொல்வது உண்மைதானா? அவரை வைத்து படம் எடுத்து லாபம் பார்த்த தயாரிப்பாளர்களும், பெயர் வாங்கிய இயக்குனர்களும் சொல்ல வேண்டிய படு முக்கியமான பதில் அது. சொல்வார்களா? அல்லது சுருட்டிக் கொண்டு கிளம்பிவிடுவார்களா? தெரியவில்லை.

இந்த பேஜ்க்கு வந்த கடமைக்கு கீழேயுள்ள பகுதியை மறக்காமல் படித்துவிட்டு நகருங்கள் ரீடர்ஸ்…

நாதஸ்வர அறிஞர் காருகுறிச்சி அருணாசலத்தின் தீவிர ரசிகர் இயக்குநர் ஏ.பி.நாகராஜன். தன்னுடைய இசைக்கு சினிமாவில் ஒரு சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தருமாறு காருகுறிச்சி, ஏ.பி.என்.னிடம் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து நாதஸ்வர இசையை பிரதானமாக கொண்ட திரைப்படம் ஒன்றினை இயக்க கதை தேடினார் ஏ.பி.என். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த ‘தில்லானா மோகனாம்பாள்’ கதையை படமாக எடுத்தால், அதில் காருகுறிச்சியின் இசையை பயன்படுத்த முடியும் என்று அவருக்கு தோன்றுகிறது.

கதையின் உரிமை ஆனந்த விகடன் அதிபரிடமே இருக்கிறது என்று தெரிந்துகொண்டு அவரை தொடர்பு கொண்டார். “நானே அதை படமா எடுக்கலாம்னு இருக்கேன்” என்று சொல்லிவிட்டார் வாசன். இதையடுத்துதான் ‘திருவிளையாடலை’ கையில் எடுத்தார் நாகராஜன். ‘திருவிளையாடல்’ வெளியானவுடன் ஏ.பி.என்.னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டுகிறார் வாசன். இதுதான் சமயமென்று அவரிடம் மீண்டும் தில்லான மோகனாம்பாளை கேட்கிறார். மீண்டும் மறுக்கிறார் வாசன். வேறு வழியில்லாமல் ‘சரஸ்வதி சபதம்’ எடுக்கப் போய்விட்டார் ஏ.பி.என். இந்த படமும் சூப்பர்ஹிட் ஆக மீண்டும் வாசனை அணுகுகிறார். “வேணும்னா பார்ட்னர்ஷிப் போட்டு பண்ணலாமா?” என்று கொஞ்சம் இறங்கி வந்தார் ஆனந்த விகடன் அதிபர். ஏ.பி.என்.னுக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால், திரும்பவும் ‘திருவருட் செல்வர்’ செய்ய போய்விட்டார்.

அதுவும் வெளியான பிறகு, தன் முயற்சியில் சற்றும் மனம் தளரா விக்கிரமாதித்தனாக மீண்டும் வாசனிடம் வந்து, ‘தில்லானா மோகனாம்பாள்’ என்று இழுக்கிறார். வாசனுக்கு இம்முறை மறுக்க மனமில்லை. ஐந்து ஆண்டுகளாக ஒரு பெரிய இயக்குனர், இந்த கதையை கேட்டு திரும்பத் திரும்ப வந்து நிற்கிறாரே என்று ஆச்சரியம். “அந்த கதையை என்னாலே சரியா திரைக்கதை அமைக்க முடியலை. நீங்களே எடுத்துக்கங்க. ஒரு பத்தாயிரம் மட்டும் கொடுத்துடுங்க” என்றார். ஐம்பதாண்டுகளுக்கு முன்பு ஒரு கதைக்கு இது பெரிய தொகைதான் ஐம்பதாயிரம் கேட்டாலும் கொடுக்க தயாராகதான் இருந்தார் ஏ.பி.என். உடனே ஒரு பத்தாயிரத்துக்கு செக் கிழித்து விஜயலட்சுமி பிக்சர்ஸ் சார்பில் கொடுத்துவிட்டார்.

அடுத்து கதை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவை தேடிப் போனார். சுப்பு அப்போது கண் அறுவைச் சிகிச்சை செய்துக் கொண்டு மருத்துவமனையில் இருந்தார். மருத்துவமனையில் தேடிப்போய் ஒரு தொகையை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினார் நாகராஜன். “இந்த காலத்துலே அதுவும் சினிமாத்துறையிலே இப்படிப்பட்ட ஆளா இருக்கியேய்யா… உன் படம் நல்லா வரும்” என்று வாழ்த்தினார் சுப்பு. ஏ.பி.என். கொடுத்த தொகையை வாங்க மறுத்து, ”என் கதைக்கு எனக்கு ஏற்கனவே சம்பளம் வந்தாச்சி” என்றார்.

இவருக்கு ஆச்சரியம். எப்படி என்று கேட்டபோது பாக்கெட்டில் இருந்த செக்கை எடுத்து நீட்டினார். இவரிடம் வாசன் வாங்கிய செக், அப்படியே சுப்பு பெயருக்கு endorse செய்யப்பட்டிருக்கிறது. இருந்தும் ஏ.பி.என். தன் திருப்திக்காக வற்புறுத்தி சுப்புவுக்கு ஒரு பெருந்தொகை கொடுத்தார். எந்த காருகுறிச்சிக்காக ‘தில்லானா மோகனாம்பாள்’ எடுத்தே ஆகவேண்டும் என்று ஏ.பி.என். அடமாக நின்றாரோ, அந்த காருகுறிச்சி ’தில்லானா மோகனாம்பாள்’ வெளிவருவதற்கு ஐந்து ஆண்டுகள் முன்பே காலமாகிவிட்டார்.

படம் பிரமாதமான வெற்றியை பெற்றபிறகு அதற்கான கிரெடிட்டை ஏற்றுக்கொள்ளவும் ஏ.பி.என். மறுத்துவிட்டார். “அந்த கதையில் நடித்த நடிக நடிகையரின் வெற்றி அது” என்றார். அந்த காலத்தில் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் பெருந்தன்மை காட்டுவதில்தான் போட்டியாக இருந்திருக்கிறார்கள்.

நன்றி – யுவகிருஷ்ணா

Read previous post:
தாத்தாவுக்கு எம்.ஜி.ஆர் பேரனுக்கு விஜய்! தொட்டு தொடரும் சினிமா

தாத்தாவின் பெயரை சொன்னால் போதும், பேரனின் பின்புலத்தை விளக்கத் தேவையில்லை. அந்த தாத்தா... புலவர் புலமைப்பித்தன்! அரசவைப் புலவராகவும், மேல்சபை துணைத்தலைவராகவும், எல்லாவற்றுக்கும் மேல், புரட்சித்தலைவர் எம்ஜிஆர்...

Close