நியாயமா நீங்க வடிவேலுக்குதானேய்யா கப்பம் கட்டியிருக்கணும்?
கககபோ! அர்த்தமே இல்லாத இந்த எழுத்துக்களுக்காக அடித்துக் கொண்டு வேகிறார்கள் இரண்டு இயக்குனர்கள். ஒருவர் விஜய் சேதுபதியை வைத்து காதலும் கடந்து போகும் படத்தை இயக்கி வரும் நலன் குமாரசாமி. மற்றொருவர் பவர்ஸ்டார் சீனி உள்ளிட்ட 33 காமெடி நடிகர்களை வைத்து கவிதாவும் கண்தாசனும் காதலிக்கப் போறாங்க என்ற படத்தை இயக்கி வரும் விஜய்! இரண்டு பேருமே தங்களது தலைப்பை சுருக்கி கககபோ வைத்திருப்பதுதான் இவ்வளவு அடிதடிக்கும் காரணம். இதில் முதலில் விஜய் சேதுபதி படம் திரைக்கு வந்துவிடுவதால், விஜய்யின் கககபோ ஸோலோவாக வரும் போலிருக்கிறது.
நியாயமா நீங்க ரெண்டு பேரும் உரிமை கொண்டாடுவதை விட, இப்படியொரு ஒரு டயலாக்காக போட்டுத் தாக்கிய வடிவேலுவிடம்தானே இந்த தலைப்புக்கான ரைட்ஸ் வாங்கியிருக்கணும் என்றோம் விஜய்யிடம். ஆமாம் சார்… அதுதான் நியாயம் என்று வழிந்தவர் நேரடியாக தனது படம் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்.
ஒரு முத்தம் ஒருவனின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதுதான் இந்த படத்தின் ஒன்லைன் என்றவர் அருகில் நின்ற சாக்ஷி அகர்வாலை அறிமுகப்படுத்தினார். அவர்தான் இப்படத்தின் ஹீரோயின். இதற்கு முன் சிலபல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் சாக்ஷியின் ரோல் அவரை பெரிய ஹீரோயின் வரிசையில் சேர்க்கும் என்றார் விஜய். (உங்க விருப்பம் அதுதான்னா நடந்துட்டு போகட்டும். ஆமேன்) கககபோ படத்தில் சாக்ஷியின் பங்கு ஒரு ஹீரோயின் என்பதை விட பெரியது. டைரக்டர் என்பதை விட சிறியது. எப்படி?
இந்த ஷுட்டிங்கில் ஒரு உதவி இயக்குனராக மட்டுமல்ல, இயக்குனர் ஏதோ ஒரு காரணத்திற்காக பத்து நாட்கள் ஷுட்டிங்கே வரவில்லையாம். அந்த பத்து நாட்களும் இவரே ஆக்ஷன் கட் சொல்லி ஆக்டிங் டைரக்டராகவும் ஆகியிருக்கிறார். அடிப்படையில் சாக்ஷி என்று எம்.பி.ஏ பட்டதாரி. இன்போசிஸ்ல லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குனவங்க. புத்திசாலி என்றெல்லாம் புளகாங்கிதப்பட்டார் டைரக்டர் விஜய்.
இப்பதான் டவுட் வருது. கண்ணதாசன் யாரு? கவிதா யாரு?