அவ நடிக்கணும்! அதுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன்!

‘சவுக்காரம்’ என்ற சொல்லையே சம்ஹாரம் ஆக்கிவிட்டது காலம்! இந்த லட்சணத்தில் ‘உருக்காங் கல்’ தெரியுமா உலகத்திற்கு? செங்கல்லை விட கடினமாக, பாறாங்கல்லை விட இலகுவாக இருப்பதுதான் இந்த உருக்காங் கல்! செங்கல் சூளையில் எப்படியோ எக்குத்தப்பாக வெந்து, ஏடாகூடமான வலுவில் இருக்கும் அது. ஆணானப்பட்ட ஷாஜகான்களையே கூட வீழ்த்திவிடும்! கிராமத்து மும்தாஜ்களுக்கு இந்த கையளவு உருக்காங் கல்தான் ஒரு காலத்தில் மைசூர் சாண்டில், சின்த்தால், ஹமாம், டவ் எல்லாம்! அழுத்தித் தேய்த்தால் ஆயுளுக்கும் அண்டாது அழுக்கு!

இதமாக தேய்த்தால் மசாஜ், இழுத்து இழுத்துத் தேய்த்தால் ஏதோவொரு மெசேஜ் என்று வாய்க்கால் கரையோரம், குளக்கரையோரம், ஆற்றங்கரையோரம் அந்த உருக்காங் கல்லை வைத்துக் கொண்டே ஊருக்கு கதை சொன்ன அழகிகள் ஏராளம். முப்பாட்டன், முப்பாட்டிகள் தேய்த்த அந்த உருக்காங் கற்களின் வரலாறு ஒரு யுகத்தை கூட தாண்டியிருக்கலாம். யார் கண்டது? ஆனால் ஒரு இஞ்ச் கூட தேயாமல் கிடக்கின்றன இப்போதும்! ஊர்புறத்தில் நதி இருக்கிறது, நீர் இல்லை!. குளம் இருக்கிறது, குதிகால் நனைக்க தண்ணீர் இல்லை!. அங்கெல்லாம் ஏக்கத்தோடு கிடக்கும் அந்த உருக்காங்கற்களை இப்போது தவளைகள் கூட சீண்டுவதில்லை.

அப்படிப்பட்ட உருக்காங் கல் கூட தேய்ந்தாலும் தேயும். சிலரிடம் கால்ஷீட் கேட்டு அலைந்தால் சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகளின் உருக்காங் கல் மனசு மட்டும் தேயவே தேயாது. ஒரு டாப் நடிகையிடம், ஒரு டாப் நடிகர் கால்ஷீட் கேட்டு தவம் கிடந்தார். ‘அவரா? அந்த காம்பவுண்டே வேணாம்மா…’ என்று தனக்கு எல்லாமுமாக இருக்கும் அம்மாவிடம் சொல்லிவிட்டு ஓடிப்போனார் நடிகை. ‘அவர் நடிச்சா இந்த படத்தை தயாரிக்கிறேன். இல்லேன்னா இந்த கதையை அப்படியே ஓரமா வச்சுட்டு வேற கதை தயார் பண்ணு. வேற எவள வச்சு வேணும்னாலும் அதை எடுப்போம்’ என்றார் முழு நேர நடிகரும், பகுதி நேர தயாரிப்பாளருமான இவர். எப்படியோ… பெரும் போராட்டத்திற்கு பிறகு ஓட்டை பானையில் இவர்கள் சுட்ட கொழுக்கட்டை, டெல்லி வரைக்கும் பேசியது.

ஏன் இந்த படத்தில் நடிக்க மறுத்தார் அந்த நடிகை?

கரும்பலகையும் சாக்பீசும் போல காம்பினேஷன் பலம் என்பார்களே… அப்படியொரு பலம் அந்த நடிகர்.! எந்த படமாக இருந்தாலும் அவர் மட்டும் தனியாக தெரிகிற மாதிரி நடிப்பார். வில்லனா…. ஹீரோவா…. தாத்தாவா…. பையனா…. நெசவாளியா…. பொலிட்டீஷியனா…. எந்த வேஷம் போட்டாலும், ஏதோ அதற்கென்றே பிறந்த மாதிரி இருப்பார் அவர். என்ன ஒன்று? சமயங்களில் மண்டைக்குள் இருக்கும் மைக்ரோ ‘சிம்’ அவ்வப்போது ‘கரப்ட்’ ஆகி, சுற்றியிருப்பவர்களை செம குடைச்சலுக்குள்ளாக்கிவிடும்.

உலக்கையை பற்றி வர்ணிச்சாலும் கூட, உதாரணம் சொல்லலேன்னா புரியாதே? சாம்பிளுக்கு ஒன்று…

ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் இவர். வழக்கம்போல யூனிட்டே கைதட்டி பாராட்டுகிற அளவுக்கு நடித்துவிட்டு அறைக்கு திரும்பியிருந்தார். மறுநாள் காலை… எல்லாரும் தயாராகி கேமிராவுக்கு முன் வந்துவிட்டார்கள். இவரை மட்டும் காணோம். சரி… கண்விழிக்கிற விஷயத்தில் கடிகாரம் ஸ்ட்ரக் ஆகியிருக்கும். வருவார் வருவார்… என்று எல்லாரும் காத்திருந்தார்கள். மூணு மணி நேர அவகாசத்திற்கு பிறகும் ஆள் வராததால் அறைக்கதவை தட்டினார்கள். பொளக்கென்று திறந்து கொண்டது அது. ஆறேழு மாசத்திற்கு ஆள் தங்கிய அறிகுறியே இல்லை அங்கே. எங்கோ கிளம்பிவிட்டார். எப்போதோ கிளம்பிவிட்டார். அதற்கப்புறம் சுமார் பதினைந்து நாட்கள்… தேடாத இடமில்லை.

ஆல் லாங்குவேஜ் ஆர்ட்டிஸ்ட் ஆச்சே? தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று சல்லடை போட்டார்கள். நடுவில் சென்னையிலிருக்கும் அவரது முன்னாள் மனைவியிடம் கூட விசாரித்துவிட்டார்கள். அவரது மும்பை மனைவிக்கும் விஷயம் தெரியவில்லை. எங்கு போனாரென்றே தெரியவில்லை. பட்ஜெட் போடும்போதே ‘மிஸ்லேனியஸ்’ என்று உதிரி செலவுக்காக ஒரு தொகையை ஒதுக்குவார்கள் அனுபவசாலிகள். இவரைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் என்பதால், அந்த கால்ஷீட் தேதிகளை ‘மிஸ்லேனியஸ்’ கணக்கில் தள்ளியிருந்தார்கள். ‘சரிய்யா… சகஜம்தானே இதெல்லாம்?’ என்று ஒரு கட்டத்தில் அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்திருந்தார்கள். திடீரென போன்… ‘என்னய்யா, உங்களுக்கு கொடுத்த கால்ஷீட் தேதியெல்லாம் வீணாவுது. எப்ப ஷுட்டிங்?’ என்றார் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல்.

‘சார்… எங்க போனீங்க, நாங்க தேடிகிட்டேயிருக்கோம்’ என்றார்கள் இவர்கள். ‘ஓ…அதுவா? படுத்து தூங்கிகிட்டேயிருந்தேன். திடீர்னு ஒரு கனவு. அதுல அருமையான ப்ளேஸ் ஒண்ணு. என்னை வா வா ன்னு கூப்பிடுது. அது எதுக்கு என் கனவுல வரணும்? என்னை எதுக்கு வா வான்னு கூப்பிடணும்? இயற்கைக்கு மரியாதை கொடுக்காதவன் இருந்தாலென்ன? செத்தாலென்ன? அந்த இடத்தை கூகுள்ள தேடி கண்டுபிடிச்சேன். உடனே கிளம்பிட்டேன். ஆஹா… எல்லாரும் ஒரு முறையாவது அந்த பிளேஸ்சை பார்க்கணும்யா’ என்றார். அவர் போயிருந்த இடம், உலகத்தின் எங்கோ ஒரு மூலைக்கு.

புதைகுழிக்கு போறவனே, ‘போயிட்டு வர்றேன்’னு சொல்றான். இல்ல… போற வழியிலேயே இமெயில் போடுறான். அப்படியெல்லாம் சொல்லிட்டுபோற காலத்துல, இந்தாளு இப்படி சொல்லாம கொள்ளாம ஓடுனா, சின்ன படம் எடுக்கிறவங்க கதி? இப்படி ஒன்றல்ல, ரெண்டல்ல… ஓராயிரம் கதைகள் இருக்கிறது இவரைப்பற்றி. அதனால்தான் அந்த நடிகை, ‘இவர் படம்னா வேணவே வேணாம்’ என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் அந்த நடிகையும், இந்த நடிகரும் சில படங்களில் சேர்ந்தே நடித்திருந்தார்கள். அதெல்லாம் ‘கில்லி’யாய் ஓடிய படங்களும் கூட! ஒருவேளை அந்த நேரத்து ‘அனுபவங்கள்’ தந்த பாடமாக கூட இருக்கலாம்.

இந்த படத்தின் டைரக்டரும் சாதாரண இயக்குனரல்ல! இவர் படத்தில் ஆபாசமிருக்காது. வன்முறை இருக்காது. அவற்றில் எல்லாம் ஒரு கவிதையின் ‘பயணம்’ இருக்கும். கவுரவத்தின் ‘மொழி’ இருக்கும். இந்த கதையும் அப்படிதான். ஒரு அப்பாவுக்கும் மகளுக்குமான அழுத்தமான அன்பை சொல்லும் படம். தயாரிப்பாளர் தவிர, படத்தில் நடிக்கும் அப்பாவான இவரைத் தவிர, மீதியெல்லாம் பிடித்திருந்தது நடிகைக்கு!

ஒரு சாயங்கால சந்தோஷ நேரத்தில், சர்வ கோபமும் தலைக்கு ஏறி கத்திக் கொண்டிருந்தார் நடிகர். ‘ஏன்யா… என்னத்துக்குய்யா வேணாங்கிறா அவ? சம்பளம் கோடி கோடியா தர்றேன். வேறென்ன சவுரியம் வேணும்னு கேளு, செஞ்சு தர்றேன். ஸ்கூல் யூனிபார்ம் போட்ற அளவுக்கு சிக்குன்னு இருக்கிற ஒரே நடிகை அவதானய்யா. வேற எவளுக்கு போட்டாலும், உரல்ல படுதாவை சுத்துனா மாதிரியிருக்கும். இவ்வளவு அருமையான கதையில நடிக்கிலேங்குதே, சனியன்… சனியன்…’ என்று ஒரு ஆள் காட்டி விரலை எடுத்து நெற்றிக்கு மேல் குத்திக் கொண்டு ஒரே ஓலம்!

நடிகை மட்டும் ஓ.கே சொன்னால் நாளைக்கே ஷுட்டிங் போய்விடலாம் என்கிற அளவுக்கு எல்லாரும் தயாராக இருந்தார்கள். ஒரு ‘யெஸ்’ காக சுமார் மூன்று மாத காலம் ஒரு மரியாதைக்குரிய படம் காத்துக் கொண்டிருந்தது. இந்த டென்ஷன் எதற்கும் இடம் கொடுக்காத அந்த நடிகை மட்டும், ஏதேதோ உப்புமா படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

‘சுத்தி நின்னு சாம்பிராணி போடுறீங்களே, ஒருத்தனாவது அவ கால்ஷீட் வாங்குறதுக்கு வழி சொல்றீங்களா?’ நடிகர் வானத்திற்கும் பூமிக்கும் வல்லூறு பாய்ச்சல் பாய்ந்து கொண்டிருக்க, ஒருவர் அவிழ்த்தார் பூட்டை! ‘சார்… அவங்களுக்கு எல்லாமே அவங்க அம்மாதான். அவங்க சொன்னா மட்டும்தான் அந்த பொண்ணு கேட்கும். அவங்களை உங்க வழிக்கு கொண்டு வந்திட்டீங்கன்னா எல்லாமே சுலபம் சார்’.

ஒரு நூறு மேகம் உச்சந்தலை வழியா போனலும் ஒண்ணு மட்டும்தான் கருணையோட கண் திறக்குது! பொலபொலவென சந்தோஷம் கொட்டியது நடிகருக்கு. ‘யோவ்… அது என்ன அவ்வளவு கஷ்டமா?’ என்றார். ‘தெரியல சார். ஆனால் நீங்க இறங்குனா ரப்பர் பால்ல கூட காபி போடலாம். ஒட்டக பால்ல கூட ரப்பர் செய்யலாம்!’ என்று உசுப்பேற்றினார்.

‘யோவ்… எண்ணி வச்சுக்கங்க. இன்னும் ஒரே மாசம். நாம ஷுட்டிங் போறோம். ஹீரோயின் அவதான்!’ அதுவரைக்கும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ஆறிப்போன அந்த சிக்கன் 65 கலீரென விசிலடித்தது. அதன் மீதே நச்சென்று சத்தியம் பண்ணிவிட்டு எழுந்தார் ஹீரோ. லேசான தள்ளாட்டம்தான்! ஆனால் ஸ்டடியான லொக்கேஷனை தேடிப் போக ஆரம்பித்திருந்தது அவரது லட்சியம்!

இன்னும் ஒரு வாரத்திற்கு ஒருத்தரும் என்னை ‘டிஸ்டிரப்’ பண்ணக் கூடாது. போன் பண்ணக்கூடாது. ஏராளமான கண்டிஷன்களுடன் அன்று காலையிலேயே விடை பெற்றிருந்தார் அவர். தேவன் கோவில் மணியோசைக்காக காத்திருந்தது இவர்களின் தியான மண்டபம்!

சாமமோ, பேதமோ, தானமோ, தண்டமோ? இது எதற்குமே அடங்காதவர்களுக்கு கூட ஸ்பெஷல் மந்திரம் இருக்கிறது சினிமாவில். அந்த மந்திரத்தை நன்றாகவே அறிந்து வைத்திருந்தார் நடிகர். அந்த ஒரு வாரமும் அவருக்கு வேறு வேலையே இல்லை! காப்பர் கம்பியும், காயல் சுற்றும் விரலும் பொருத்தமான நேரத்தில் ஒன்றிணைந்தால், கரண்ட்தான்! மின்னோட்டம்தான்!

நெட் ரிசல்ட் என்ன? மற்றவர்களுக்கு வாங்குகிற சம்பளத்தை விட பெரும் பங்கு குறைவாகவே இந்த படத்திற்கு சம்பளம் வாங்கினார் மகள். எல்லாம் அம்மா தந்த பிரஷர்! பின்னாட்களில் இவரது படங்களை யாரேனும் ஆராய்ச்சி செய்து எம்.பில் வாங்க முயன்றால், இந்த படம்தான் அந்த ஆராய்ச்சி கட்டுரையின் ஆகப்பெரிய மதிப்பெண்ணாக இருக்கும்! அந்த படத்தை பற்றி கேட்டால் இப்போது சம்பந்தப்பட்ட நடிகையே சொல்வார்…

‘மரியாதையும் நானும்’ என்று!

(குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிவரும் கோடம்பாக்கம் செக்போஸ்ட் தொடரிலிருந்து…)

2 Comments
  1. howdoesitmatter says

    who is the heroine? which movie is it?

  2. gk says

    trisha with äbiyum naanum

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
234 தொகுதியிலும் தனித்துப் போட்டி! சீமான் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இலங்கைத் தமிழர்களின் துயரத்தில் பிறந்தது நாம் தமிழர் கட்சி. இன்று தமிழகத்தில்...

Close