வாலு படத்திற்காக 26 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி செட்டில் செய்தேன்! டி.ராஜேந்தர் பேட்டி
“வாலு” என்று பெயர் வைத்த போதே நான் சொன்னேன், வாலு என்றாலே பிரச்சினைகள் நீளும் என்று அதுபோல எத்தனை எத்தனை தடங்கல்கள் இறுதியில் எல்லாத்தடைகளையும் தாண்டி வாலு, வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது….”என்றார் டி ராஜேந்தர். இதுகுறித்து இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த டி ராஜேந்தர், “ வாலு படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் உலகம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகிறது…. தமிழகத்தில் மட்டும் 300 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது….
இந்த நேரத்தில் இந்தப் படம் வெளியாக எனக்கு தார்மீக ஆதரவு அளித்த விஜய், அவரது புலி படத்தின் தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் மற்றும் விஜய் படங்களை கோயமுத்தூரில் தொடர்ந்து வெளியிட்டு வரும் காஸ்மோ சிவகுமார் உள்ளிட்டவர்களுக்கும் வாலு படத்தைத் திரையிட ஒத்துக்கொண்ட திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்… சிம்பு படத்தை எடுத்ததால் தான் நிக் ஆர்ட்ஸ் கடன் பிரச்சினையில் இருக்கிறார் என்கிறார்கள் அப்படியல்ல அவர் அவரது மகனை வைத்தும் 3 படங்களை தயாரித்திருக்கிறார்… சரியான நேரத்தில் வெளியிடமுடியாததால் வட்டி வட்டிக்கு வட்டி என்று பெரிய கடன் சுமையாக வளர்ந்திருக்கிறது…
எனது மகன் நடித்த படம் என்பதால் மட்டுமல்ல அவன் ஒரு நல்ல நடிகன் அவனது படம் முடங்கக்கூடாது என்கிற எண்ணத்தாலும், 26 கோடிகளுக்கு மேல் கடன் வாங்கி சம்பந்தப்பட்டவர்களுக்கு ‘செட்டில்” செய்து விட்டு படத்தைத் திரையிடுகிறேன்…. ஏற்கனவே தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை வாங்கி வைத்திருந்த மேஜிக் ரேய்ஸ் நிறுவனத்தாரின் வழக்கால் , ஜூலை 17 ஆம் தேதி வெளியாகவிருந்த வாலு திரைப்படத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்தது… தொடர்ந்து ஜூலை 17 வெளியீடு என்று விளம்பரம் கொடுத்துக் கொண்டிருந்த எனக்கு உலக சினிமா வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக ஒரு சில நாட்கள் இருக்கையில் தடை போடப்பட்டது…. நீதி மன்றத்தின் முடிவுக்குத் தலைவணங்கி ஏற்றுக்கொண்டேன்….
அதற்குப் பின் நிக் ஆர்ட்ஸும் மேஜிக் ரேய்ஸ் நிறுவனத்தாரும் பேசி பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள மேஜிக் ரேய்ஸ் நிறுவனம் தனது வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டது….அவர்கள் இல்லாமல் சம்பந்தமில்லாமல், கிட்டத்தட்ட 14 வழக்குகள் போடப்பட்டன…. அவற்றையெல்லாம் வென்று வாலு வெளியாகிறது….வாலு படத்தை வெளியிட விடாமல் பெரிய சதியே நடந்திருக்கிறது….
இந்தப் பிரச்சினைகளுக்கு முன்பே , மலேசியாவில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக 10 நாட்கள் தங்கியிருந்தபோது இண்டெர் நேஷனல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் நானும் ஒரு நீதிபதியாக இருந்தேன்…. அதில் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகரும் நீதிபதியாக இருந்தார்கள்…. அப்பொழுதே விஜயைப் பற்றிப் பெருமையாகப் பேசியிருந்தேன்… தனது வீட்டில் ஒரு நடிகரை வைத்துக் கொண்டு விஜயைப் பெருமையாகப் பேசுகிறாரே என்று ஆச்சிரியப்பட்ட எஸ் ஏ சி குடும்பத்தினருடன் அடுத்த 10 நாட்கள் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது…. விஜய் என்னுடைய ரசிகர் என்று பலமுறை சொல்லியிருக்கிறார்… நான் அவருடைய ரசிகன்…. புலி என்று பெயர் வைத்த விதத்தில் அவரை எனக்கு தமிழனாக மிகவும் பிடித்து விட்டது…. எனக்கும் புலி பிடிக்கும்….
எனது மகன் தல ரசிகர், அதையெல்லாம் நினைக்காமல் சக நடிகனாக வாலு பட வெளியீட்டிற்கு விஜய் எனக்கு தார்மீக ஆதரவு அளித்திருக்கிறார்…
இனிமேல் தொடர்ந்து படங்களை வெளியிடுவேன்… புலி படத்தினை வெளியிட பலர் இருக்கிறார்கள்…. இருந்தாலும் நானும் வெளியிட ஆவலாக இருக்கிறேன்…
அதுமட்டுமில்லாமல், வேறு நடிகர்கள் நடித்த படங்களையும் சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிடும்..” என்றார்.