தாறுமாறு பாடலில் ஏன் விஜய் மாதிரி ஆடவில்லை சிம்பு? காரணம் சொல்லும் டிஆர்!
“வாலு படம் வெற்றியா, தோல்வியா என்பதெல்லாம் இப்போது முக்கியமில்ல. வாலுவை ரிலீஸ் பண்ணினேனே… அதுதான் பெரிய வெற்றி” என்று டி.ஆர் சொன்னபோது அதில் இருக்கும் உண்மை பளிச்சென்று புலப்பட்டது. நேற்றைய சிம்பு பிரஸ்மீட்டில் விழுந்த முத்துக்கள் அத்தனையும் முக்கியமானவைதான். அதில் மிக மிக முக்கியமானது இந்த சப்பை கட்டு.
உலகம் முழுக்க இருக்கிற விஜய் ரசிகர்கள், சிம்புவுக்கு உதவி செஞ்சதே எங்க தலைவர்தான். ஆனால் படத்துல மருந்துக்கும் அவரை காட்டலியே? ஒரே அஜீத் புராணமா இருந்திச்சே என்று உடம்பு முழுக்க மிளகாய் பொடியை தடவிக் கொண்டு உருளாத குறையாக எரிச்சலானார்கள். உச்சக்கட்டமாக சிம்பு ஆடும் தாறுமாறு பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், அஜீத் என்று நான்கு வித தோற்றங்களில் ஆடிக் களேபரம் பண்ணிவிட்டார். அப்போது விஜய் மாதிரி அவர் ஏன் ஆடவில்லை? என்ற கேள்வி நடுத்தர ரசிகர்கள் மனதிலும் இருந்தது.
இதற்கான விளக்கத்தை நேற்று பத்திரிகையாளர்களுக்கு அளித்தார் டி.ஆர். உண்மையில் அந்த பாடலில் விஜய் கெட்டப்பில் சிம்பு ஆடுவதாகதான் இருந்தது. ஆனால் பாடலுக்கான நீளத்தை அதற்கு மேல் நீட்டிக்க முடியாது என்பதால், விஜய் கெட்டப் வேண்டாம் என்று டைரக்டர் சொல்லிவிட்டார். இல்லையென்றால் அதையும் எடுத்திருப்போம் என்றார்.
நம்புற மாதிரி இல்லைதான். ஆனால் அம்மாம் பெரிய மனுஷன் சொல்றாரே… நம்பிட்டோம்!