காத்துக்கு ஏன் காத்துன்னு பேரு வந்திச்சு தெரியுமா? ஒருதலைராகம் விழாவில் டி.ஆர் நெகிழ்ச்சி

‘ஒருதலை ராகம்’ படம் வெளிவந்து 34 ஆண்டுகள் ஓடிவிட்டன. அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு அப்படத்தின் பெருமையும் புகழும் தெரியுமோ, தெரியாதோ? ஆனால் சொல்ல வேண்டிய கடமை முதல் தலைமுறை ரசிகர்களுக்கு இருக்கிறது. தமிழ்சினிமாவை புரட்டிப்போட்ட படம் அது. டி.ராஜேந்தர் இயக்குனராக அறிமுகம் ஆன படம். ஆனால் டைட்டிலில் இயக்குனர் என்ற இடத்தில் அவர் பெயர் இடம் பெறாது. ஏன்? அப்பவே பாலிடிக்ஸ்! ஆனால், தான்தான் அந்த படத்தை இயக்கியவன் என்பதையும், கடல் அலையை ஒரு போதும் விரல் முனைகளால் அடக்கிவிட முடியாது என்பதையும் பிற்காலத்தில் தன் உழைப்பால் உணர்த்தினார் டி.ஆர். தொடர்ந்து எட்டு ஹிட்டுகள் கொடுத்தவர். அந்த காலத்தில் அவர் இயக்கிய எல்லா படங்களும் வருடக்கணக்கில் ஓடியது. இருந்தாலும், இப்போதும் எந்த மேடை கிடைத்தாலும் தனக்கு முதல் படம் கொடுத்த தயாரிப்பாளர் இப்ராஹிம் பற்றி சொல்ல மறந்ததில்லை அவர்.

நேற்றைய மாலைப்பொழுதில் ஒரு நெகிழ்ச்சியான தருணத்தை அவருக்கு ஏற்படுத்தி கொடுத்தது ‘மணல் நகரம்’ படக்குழு. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், ஒருதலைராகம் படக்குழுவினரை மேடையேற்றி பெருமை படுத்தினார்கள். ஆச்சர்யம் என்னவென்றால், இந்த ‘மணல் நகரம்’ படத்தை இயக்கியிருப்பது ஒருதலைராகம் பட ஹீரோ சங்கர்.

‘ரூபாவை 34 வருஷத்துக்கு முன்னாடி ஷுட்டிங் டயம்ல பார்த்தது. அதற்கப்புறம் இப்போதுதான் பார்க்கிறேன்’ என்றார் ஒருதலைராகம் படத்தின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான (ராபர்ட்)ராஜசேகரன். ‘உங்களை நான் ராஜேந்திரன்னுதான் கூப்பிடுவேன். இப்பவும் அப்படியே கூப்பிடட்டுமா?’ என்று அவர் மேடையிலிருந்த டி.ஆரிடம் கேட்க, ‘நான் அப்பவும் இப்பவும் எப்பவும் ஒரே மாதிரிதான். தாராளமா கூப்பிடுங்க’ என்றார் டி.ஆர்.

‘நான் ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கேன். என்னை பாட்டு பாட சொல்லாதீங்க. நான் பாட ஆரம்பிச்சா டண்டணக்கான்னு சொல்வாங்க. இப்ப கூத்தடிக்கிற நேரமில்ல என்று பேச ஆரம்பித்த டி.ஆர், நிஜமாகவே நெகிழ்ச்சியிலிருந்தார். அந்த படத்தில் ரூபா மேடத்தை கடைசி வரைக்கும் பேசவே விடலன்னு சொன்னாங்க. அவங்க பேசியிருந்தா படம் அவுட்டாகியிருக்கும். காத்துக்கு ஏன் காத்துன்னு பேரு வந்திச்சு தெரியுமா? அது மேகத்தை காதலிக்குமாம். ஆனால் அந்த மேகத்தை தொடாமலே தள்ளி நிக்குமாம். அப்படி காத்து காத்து நிக்கறதாலதான் அதுக்கு காத்துன்னு பேரு. அப்படிதான் படத்துல ரூபாங்கிற மேகத்துக்காக ராஜாங்கிற காத்து காத்துகிடந்துச்சு.

இன்னைக்கு ஒருதலைராகம் படத்தை எடுத்தா இப்படி எடுக்க முடியுமா? அவ பேசமாட்டாளான்னு வருஷக்கணக்குல காத்திருந்தான். லவ்வை சொல்லவே முடியாம தவிச்சுகிட்டு இருந்தான். ஆனால் இன்னைக்கு லவ் வந்ததும் அதை எஸ்.எம்.எஸ் ல தட்டிவிட்டுர்றான். வாட்ஸ் அப்புலயே சொல்லிடுறான் என்றவர், தனது தங்கை கல்யாணத்திற்காக அவர் வாங்கிய கோல்டு மெடலை விற்ற கதையை சொல்ல, கூட்டத்திலிருந்து ஒரே கைத்தட்டல்.

டக்கென அதற்கும் ரீயாக்ஷ்ன் கொடுத்தார் டி.ஆர். ‘பாருங்க… கஷ்டத்துக்காக நான் வாங்கிய தங்க மெடலை வித்தேன்னு சொல்றேன். இவ்ளோ பேரும் சந்தோஷமா கைதட்டுறீங்க. ரசனை அப்படி மாறிப்போச்சு. அக்கா, தங்கச்சி, அம்மா சென்ட்டிமென்ட்டுன்னு படம் எடுத்தா ஒரே ஷோவோட ஊத்தி மூடிருவாங்க போலிருக்கு. இனிமே ஜாலியா எதையாவது எடுத்தால்தான் ஓடும் போலிருக்கு’ என்று வேதனைப்பட்டார்.

இந்த படத்திற்காக 100 பாட்டுக்கும் மேல போட்ருந்தேன். அதில் சில பாடல்களைதான் அதில் வைத்திருந்தோம். எல்லா பாட்டும் சூப்பர் ஹிட் ஆனது. 35 வருஷத்துக்கு முன்னாடி மயிலாடுதுறையில் இருக்கும் ஏ.வி.சி கல்லுரியில் அந்த படத்தின் ஷுட்டிங் எடுத்தோம். அதற்கப்புறம் அந்த காலேஜ் உள்ளேயே நான் போனதில்ல. ஆனால் ஒவ்வொரு முறை மயிலாடுதுறை போகும்போதும், அந்த காலேஜ் வாசலில் காரை நிறுத்தி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவேன். இப்பதான் இத்தனை வருஷம் கழிச்சு அந்த காலேஜ் விழாவுக்கு என்னை சீஃப் கெஸ்ட்டா கூப்பிட்டுருக்காங்க. ரொம்ப ஆவலா காத்துட்டு இருக்கேன் என்று தான் படித்த காலேஜில் மீண்டும் நுழையும் நெகிழ்ச்சியான தருணம் பற்றியும் ரசிகர்களுக்கு சொல்லிவிட்டு அமர்ந்தார் டி.ஆர்.

அற்புதமான ஒரு காலத்தை மீண்டும் நினைவு படுத்திய மணல் நகரத்திற்கு டிஆர் மட்டுமல்ல, ரசிகர்களும் நன்றி சொல்ல வேண்டும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நம்பர் நடிகையால் நாசமாய் போன இன்னொரு ஹீரோ! ஹ்ம்ம்ம்.. தற்கொலை முயற்சியாம்?

தமிழ் திரையுலகமே கிடுகிடுத்துப் போய் கிடக்கிறது. நேற்று மாலை வெளி மாவட்டங்களிலும், இன்று காலை சென்னையிலும் வெளியாகியிருக்கும் குமுதம் ரிப்போர்ட்டரின் கவர் ஸ்டோரிதான் இந்த கிடுகிடுப்புக்கு காரணம்....

Close