அந்த புலி மேட்டருக்கு பிறகு நான் பேசுறதாகவே இல்ல…! ஃபுல் அப்செட்டில் டி.ராஜேந்தர்!
“பாகுபலி படத்துல வர்ற எருது மாதிரி இருந்த ஆளை, இப்படி பச்சைக்கிளி மூக்கு மாதிரி ஆக்கிட்டாங்களே…” என்று நேற்று சித்தம் கலங்கி கலைந்திருப்பார்கள் நிருபர்கள். ஏன்? டி.ராஜேந்தரின் பேச்சு அப்படி!
அவர் பேச்சை கேட்டால், மண் குதிரைக்கும் உயிர் வரும் என்பதெல்லாம் கடந்த கால வரலாறு. வாயை திறந்தால் அடுக்குமொழி, பேச்சுக்கு பேச்சு நான் தமிழன் என்று நெஞ்சை மடேர் மடேர் என அடித்துக் கொள்ளும் ஆத்திரம், தலையை கோதி, தாடியை நீவி, துள்ளிக் குதித்து, தோள் பட்டையிலேயே தபேலா வாசித்து, அவர் பேசும் அந்த நிமிஷங்கள்…. சத்தியமாக பார்வையாளர்களுக்கு ஒரு லைவ் சர்க்கஸ்!
ஆனால் போக்கிரிராஜா சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டுக்கு வந்தவர், பரம சைலண்ட்டாகதான் தன் பேச்சை ஆரம்பித்தார். அதற்கப்புறம் தான் பல மேடைகளில் பேசிய அதே சவடால் பேச்சை அங்கும் தொடர்ந்தார் என்பது வேறு விஷயம். ஆனால் அதையும் தாண்டி அவருக்குள் ஒரு விரக்தி, வேதனை, எரிச்சல் எல்லாம் இருந்தது மட்டும் நிதர்சனம். “என்னை இங்கு பேச கூப்பிட்டவே, நான் இந்த படத்தின் தயாரிப்பாளர் செல்வகுமாரிடம் சொன்னேன். நான் வர்றேன். ஆனால் பேச மாட்டேன். ஏன்னா புலி சமயத்துல நான் பேசிய பேச்சை மக்கள் எப்படி வேறு மாதிரி ட்விஸ்ட் பண்ணினாங்கன்னு எனக்குத் தெரியும். என் பேச்சை ஒளிபரப்பிய அதே தொலைக்காட்சியே அதற்கப்புறம் அதை கிண்டல் பண்ணிச்சு”.
“அந்த புலி மேட்டருக்கு பிறகு நான் எந்த மேடையிலும் பேசுறதாவே இல்ல. இங்கு வரும்போதும் அப்படிதான் சொன்னேன். ஆனால் என்னை கட்டாயப்படுத்தி பேச வச்சுட்டீங்க ” என்றார் கவலையோடு.
ஆனால் இந்த படத்தில் வரும் ‘அத்துவுட்டா, அத்துவுட்டா…’ என்ற பாடலுக்கு அவர் கொடுத்த விளக்கம், நமது வயிறை மட்டும் தனியாக பிடுங்கி, நாலைஞ்சு நாளைக்கு ‘வச்சு செய்யுற’ களேபரம். “முதல்ல கண்ண விட்டா, அப்புறம் மனசை விட்டா, பிறகு எஸ்.எம்.எஸ் விட்டா, கடைசியில் இப்படி அத்துவுட்டா…” என்று அவர் தனக்கேயுரிய ஸ்டைலில் சொல்ல, பிரசாத் லேப் தியேட்டரே அதிர்ந்தது.
முன்னதாக பேசிய புலி மற்றும் போக்கிரிராஜா பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், புலி படம் சிக்கலில் இருந்தபோது அப்படம் வெளிவருவதற்கு பெரிய காரணமாக இருந்தவர் டி.ராஜேந்தர்தான் என்று நன்றியோடு நினைவு கூர்ந்தார். நல்ல விஷயம்…. அப்படின்னா தெறி படத்தின் ஆடியோ பங்ஷனுக்கும் டி.ஆர் வருவார்னு சொல்லுங்க!