ஐ – டைரக்டர் ஷங்கர் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம்? திருநங்கைகளின் திடுக்கிடும் முடிவு !

ஊனமுற்றவர்களையும் திருநங்கைகளையும் கிண்டல் செய்யும் போக்கு சமுதாயத்தில் மாறுவதாகவே இல்லை. அதுவும் தமிழ்சினிமாவிலிருப்பவர்களுக்கு இந்த மனப்பான்மை உச்சக்கட்டத்திலிருப்பதுதான் வேதனை. அண்மையில் வெளிவந்த ஐ திரைப்படத்தில் கூட திருநங்கைகளை கேலி செய்வது போல பல காட்சிகள் உள்ளன. இதையடுத்து இயக்குனர் ஷங்கர் வீட்டில் முற்றுக்கை போராட்டம் நடத்த தீர்மானித்திருக்கிறார்கள் திருநங்கைகள்.

இந்த போராட்டம் நாளையோ அல்லது அதற்கு மறுநாளோ நடைபெறக்கூடும் என்று ஒருங்கிணைப்பாளர் பானு என்பவர் தெரிவித்திருக்கிறார். டி.ராஜேந்தர், டைரக்டர் அமீரை தொடர்ந்து டைரக்டர் ஷங்கரும் இந்த அவமானகரமான செயலை செய்திருக்கிறாரே… என்று தன் வேதனையை தெரிவித்திருக்கிறார் அவர்.

‘ஐ’ படத்திற்கு எதிராக திருநங்கைகள் அனுப்பிய அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது-

‘ஐ’ படத்தில் திருநங்கைகளை மிகவும் தவறாக சித்தரித்திருக்கிறார்கள். இப்படத்தில் திருநங்கை அறிமுகமாகும் காட்சியில் விக்ரம் மற்றும் சந்தானம் இருவரும் இணைந்து “ஊரோரம் புளியமரம்” பாடலை பாடி கிண்டல் செய்வார்கள். மேலும், அந்த பாத்திரமே ஆண்களின் உடலுக்கு அலைவது போல சித்தரித்திருக்கிறார். திருநங்கைகள் இப்போது பல்வேறு சாதனைகள் செய்யத் தொடங்கிவிட்டோம். தமிழ்த் திரையுலகில் இருப்பவர்கள் கொஞ்சம் வளர வேண்டும். நம் சமூகத்தில் ஏற்கெனவே திருநங்கைகள் என்றாலே தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வருகிறார்கள். இப்படத்தை பார்ப்பவர்கள் அனைவருமே அந்தக் கண்ணோட்டமே மேலோங்கும். இறுதி காட்சியில் சந்தானம் கிண்டல் செய்திருக்கிறார். மேலும், சந்தானம் எப்போதுமே திருநங்கைகளை தவறாகவே பேசி வருகிறார்.

‘ஐ’ படத்துக்கு எதிராக இயக்குநர் ஷங்கர் வீட்டின் முன்பு நாளை அல்லது நாளை மறுநாள் போராட்டம் நடத்த இருக்கிறோம். மேலும், தமிழக அரசு திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே எங்களால் படத் தணிக்கை குழுவில் இடம்பெற்று, திருநங்கை கொச்சைப்படுத்தும் காட்சிகளை எல்லாம் நீக்க முடியும்” என்று பானு தெரிவித்தார்.

வழக்கம்போல சென்சார் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் குறட்டை விட்டுக் கொண்டிருப்பதில் ஆச்சர்யமில்லை.

Read previous post:
இனிமேலாவது தேறுவாரா? கார்த்திக்ராஜாவின் எதிர்காலம் எப்படி?!

ஆடியோ மார்க்கெட் அதல பாதாளத்தில் விழுந்திருச்சு என்கிற புலம்பல்கள் அவ்வப்போது சினிமாவில் ஒலித்தாலும், முன்னணி இசையமைப்பாளர்களின் படங்கள் என்றால், பணத்தை கொட்ட தயாராகவே இருக்கின்றன மேற்படி கம்பெனிகள்....

Close