த்ரிஷாவும் அதிமுகவும்… தாமதமாக மறுத்ததன் பின்னணி?
நீ எதுக்கு ஆசைப்படணும்ங்கறத கூட நான்தான் தீர்மானிப்பேன் என்று கூறும் போலிருக்கிறது வதந்தி! வேறொன்றுமில்லை… கடந்த இரண்டு நாட்களாக த்ரிஷாவை போயஸ் தோட்டத்தில் கொண்டு போய் தள்ளிவிடுகிற அளவுக்கு வேகம் காட்டியது மீடியா. தனக்கு இருக்கிற லட்சம் வேலையில் இதற்கெல்லாம் மறுப்பு சொல்லி நேரத்தை வீணடிப்பானேன் என்று அமைதியாக இருந்துவிட்டார் த்ரிஷா.
த்ரிஷா குறித்து திடுக்கிடும் தகவல்கள் எதுவாக இருந்தாலும், உடனே சம்பந்தப்பட்ட மீடியாவுக்கு போன் அடித்து லபோ திபோ என்று கூப்பாடு போடும் மம்மியும், அமைதியாக இருந்துவிட்டார்.
அதிமுகவுல சேரப் போவது நெசமா? என்று கேட்க நினைத்து தொடர்பு கொண்ட மீடியாவுக்கெல்லாம் நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் பதில் சொல்ல முடியாத சங்கடத்திலிருக்கிறார் என்றே பதில் வர, ஒருவேளை கேள்விப்பட்ட அந்த விஷயம் நெசமா இருக்குமோ என்ற முடிவுக்கு கிட்டதட்ட வந்துவிட்டது நிருபர்கள் வட்டாரம்.
இதே நேரத்தில் இன்னொரு காமெடியும் நடந்ததாம். குஷ்பு காங்கிரசில் சேர்ந்த பிறகு எப்படி சத்திய மூர்த்தி பவனுக்கு வருகிற தொண்டர்கள் கூட்டம் பல மடங்கு
எகிறியதோ, அதே போல த்ரிஷா அதிமுகவில் சேரப் போகிறார் என்றதும் கட்சி பிரமுகர்களில் பாதி பேர் பயங்கர குஷியாகிவிட்டார்களாம். ஆனால் அந்தோ பரிதாபம்… அந்த செய்தியை இன்று சுட சுட மறுத்துவிட்டார் த்ரிஷா.
அதற்கு காரணம், தமிழில் வெளிவரும் பிரபல நாளேடு ஒன்றின் தலைப்பு செய்தியே ‘த்ரிஷா அதிமுகவில் சேருகிறார் ’ என்பதுதான். அதற்கப்புறமும் சும்மா இருந்தால், தெருமுனையில் தரப்படும் இலவச மிக்சி கிரைண்டரையெல்லாம் தன் கையால் கொடுக்க வைத்தாலும் வைத்துவிடுவார்கள் என்று அஞ்சிய த்ரிஷா, ‘நான் அரசியல்ல ஈடுபடுற ஐடியாவே இல்ல…’ என்று மறுத்திருக்கிறார்.
இல்லன்னு ஒடுறவங்களை கூட ஆமான்னு சொல்ல வைக்கிறதுதானே அரசியல்? வெயிட் பண்ணி பார்க்கலாம்…