அவமானப்படுத்தப்பட்டாரா? விக்னேஷ்சிவன் படத்திலிருந்து த்ரிஷா விலகல்!
ஊருக் கண்ணு, ஒறவுக் கண்ணு, ஓரக் கண்ணு, சாரக் கண்ணு எல்லா கண்ணும் இப்போது விக்னேஷ்சிவன் மீதுதான். நயன்தாராவை ரகசியக் கல்யாணம் செய்து கொண்டார்…. இந்துவாக இருந்தவர் அவருக்காக கிறிஸ்துவராக மதம் மாறிவிட்டார்… என்று இந்த புது இயக்குனரை சுற்றி சுற்றி ராட்டினம் விட்டுக் கொண்டிருக்கிறது ஊர். அவருக்கு படம் கொடுத்து காதலிக்க ஒரு வழியையும் ஏற்படுத்திய தனுஷ் மட்டும், நடு ஹாலில் உட்கார்ந்து கொண்டு ‘நாசமாப் போக’ என்று சாபம் விட்டுக் கொண்டிருக்கிறார். காரணம், ‘நானும் ரவுடிதான்’ படத்தின் பட்ஜெட்டை சொன்னதைவிட ஐந்து கோடி ரூபாய் அதிகப்படுத்தியதுதான்.
இது ஒருபுறமிருக்க, தனுஷ் சாபம் சும்மாவிடுமா? என்பதை போல அடுத்தடுத்த அவஸ்தைகளை சந்திக்க ஆரம்பித்திருக்கிறார் விக்னேஷ்சிவன். அதில் ஒன்றுதான் இது. முதன் முறையாக த்ரிஷாவும் நயன்தாராவும் ஒரு படத்தில் இணைகிறார்கள். அது விக்னேஷ்சிவனின் அடுத்தப்படம் என்று புதுசு புதுசாக செய்திகள் கிளம்பின. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதாகவும், அப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிப்பதாகவும் ஏற்பாடு. நயன்தாராவே விக்னேஷ் சிவனுக்காக தன் ஈகோவை விட்டுக் கொடுத்து த்ரிஷாவுடன் பேசினார். அதற்கப்புறம்தான் அவரும் நடிப்பதாக கூறினாராம்.
எல்லாம் சரி. சம்பள விஷயத்தில்தான் த்ரிஷாவை நோகடித்துவிட்டார்களாம். தன்னை நடிக்க சொல்லி அழைத்த நயன்தாராவும் சரி, விக்னேஷ்சிவனும் சரி. த்ரிஷாவுக்கு சம்பளம் பேசும்போது மட்டும் நைசாக கழன்று கொண்டதில் ஏக அப்செட் ஆகியிருக்கிறார் த்ரிஷா. அப்படியென்ன அவரை அவமானப்படுத்துகிற சம்பளத்தை பேசினார் ஏ.எம்.ரத்னம்?
வேறொன்றுமில்லை. என்னை அறிந்தால் படத்தில் நடித்த போது த்ரிஷாவுக்கு வெறும் 25 லட்சம் சம்பளம் தரப்பட்டதாம். அதைதான் இப்போதும் தருவேன் என்று இவர் அடம் பிடிக்க, அதில் அஜீத், கவுதம் மேனன் என்ற ஈர்ப்பு இருந்தது. அதனால் அந்த சம்பளத்திற்கு நடிக்க ஒப்புக் கொண்டேன். இதில் என்ன இருக்கிறது… நயன்தாரா விக்னேஷ்சிவன் ஆஃப் லைனில் போடப் போகும் கடலையை தவிர…? என்று கடுப்பாகிவிட்டாராம் த்ரிஷா.
இதையடுத்து உங்க படத்தில் நடிக்கப் போவதில்லை என்று கட் அன்ட் ரைட்டாக அவர் கூறிவிட்டதால் விக்னேஷ்சிவன் கடும் ஷாக்கில் இருக்கிறாராம். இது குறித்து விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டோம். அழைப்பை அவர் எடுக்கவே இல்லை. ஒருவேளை நயன்தாராவுடன் கதை டிஸ்கஷனில் இருக்கிறாரோ என்னவோ?