எந்திரன் 2 ஷங்கருக்கு வந்த திடீர் சிக்கல்!
பாகுபலி வெற்றிக்குப் பின் 250 கோடி ரூபாய் படங்கள் தென்னிந்தியாவில் அநாயசமாக தயாரிக்கப்படலாம். அதற்கு முதல் ஸ்டெப்பாக பாகுபலி வழியில் பொருட் செலவும், பிரமாண்ட நட்சத்திரங்களுமாக களமிரங்க போகிறார் ஷங்கர். இந்த படத்தின் தயாரிப்பு நாட்கள் மட்டும் சுமார் இரண்டு வருடங்கள் என்று கணக்கு போட்டிருக்கிறார்களாம். எல்லாம் சரி… அடுப்பை பற்ற வைக்கணுமே? இன்னும் சமையல் கட்டு பக்கமே போக முடியாமல் சங்கடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறாராம் ஷங்கர். ஏன்?
அவர் போட்ட கணக்கொன்று. இவர் போட்ட கணக்கொன்று. இரண்டுமே தவறானது… என்கிற அளவுக்கு புதுச்சிக்கல் ஒன்று வந்ததால்தான். இந்த படத்தில் ரஜினிதான் ஹீரோ என்பது அசைக்க முடியாத சாசனம். அவருக்கு வில்லனாக நடிப்பது யாரென்பதில்தான் ஆரம்பத்திலிருந்தே இழுபறி. ஹாலிவுட் நடிகர்களுக்கெல்லாம் இமெயில் அனுப்பி தன் நட்பு வளையத்துக்குள் கொண்டு வந்துவிட்டார் ஷங்கர். இருந்தாலும், நமது தமிழ் நடிகர்களிலேயே ஒருவர் இருந்தால் கதையில் இன்னும் கொஞ்சம் மண் மணம் இழையோடுமே என்பது அவரது கணக்கு. கமல்ஹாசனில் ஆரம்பித்தது வில்லன் வேட்டை. நல்லவேளை… அவர் ஒதுங்கிக் கொள்ள ஷங்கர் கடைசியாக வந்து நின்றது விக்ரமிடம். எப்படியோ… இருதரப்பு இழுபறிக்கு பிறகு விக்ரம்தான் என்று முடிவாயிற்று.
படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்திடம் விஷயத்தை சொல்ல வேண்டுமே? சொன்னாராம் ஷங்கர். படு பயங்கர ஷாக் ஆகிவிட்டது லைக்கா நிறுவனம். ‘250 கோடி ரூபாய்க்கு மேல் இன்வெஸ்ட் பண்ணுறோம். அதை திருப்பி எடுக்கணும்னா இந்தியா முழுவதும் தெரிஞ்ச ஒருவர்தான் வில்லனா இருக்கணும். அப்பதான் பல்வேறு மொழிகளில் படத்தை வெளியிட்டு போட்ட பணத்தை எடுக்க முடியும். விக்ரமின் வியாபார வட்டம் ரொம்ப ரொம்ப சின்னது. நம்ம பட்ஜெட்டுக்கு தாங்க மாட்டாரே…’ என்றார்களாம்.
மறுபடியும் ஹாலிவுட் வேட்டையை ஆரம்பித்திருக்கிறார் ஷங்கர். பேரதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார் விக்ரம்!