காங்கிரஸ் பிரமுகரை சீண்டிய படம்! கையோட போட்டாங்க பூட்டு?

ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளியான சிவராசன்-தணு கதையை ‘குப்பி’ என்ற பெயரில் படமாக்கி, இந்தியா மொத்தத்தையும் “அசத்திட்டாரேப்பா…” ஆக்கியவர் ஏ.எம்.ரமேஷ். அதற்கப்புறம் அவர் இயக்கிய படங்களெல்லாம், “ஏம்ப்பா… குப்பிய இயக்குனது இவர்தானா?” என்கிற சந்தேகத்தை கிளப்பியது வேறு விஷயம். இருந்தாலும் அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ‘ஒரு மெல்லிய கோடு’ படம், படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. காரணம்? அது காங்கிரஸ் பிரமுகர் சசிதரூரின் காதல் மனைவியான சுனந்தா புஷ்கர் கொலை சம்பந்தப்பட்ட படம் என்பதால்தான்.

“இது சுனந்தா புஷ்கர் கொலை தொடர்பான படமா?” என்று காங்கிரஸ் கட்சியின் கலர்புல் தூண் குஷ்புவே போன் செய்து விசாரிக்கிற அளவுக்கு போனது நிலைமை. இருந்தாலும், தன் படத்தின் கதை பற்றி எங்கும் மூச்சுவிடாத ரமேஷுக்கு பெருமூச்சு விட வேண்டிய இக்கட்டை ஏற்படுத்திவிட்டது ஒரு நோட்டீஸ்.

‘தி பாடி’ என்ற ஸ்பேனிஷ் படத்தின் இந்திய மொழிகளுக்கான ரீமேக் ரைட்ஸ் வாங்கி வைத்திருந்த நிறுவனம் ஒன்று ஏ.எம்.ஆர் ரமேஷுக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டதாம். “உங்கள் படத்தின் ட்ரெய்லர் மற்றும் புகைப்படங்கள் அப்படியே தி பாடி படத்தை காப்பியடித்ததை போல இருக்கிறது. எங்களுக்கு திரையிட்டு காட்டாமல் படத்தை வெளியிடக் கூடாது” என்பதுதான் அந்த நோட்டீசில் இருக்கும் சாரம்சம்.

இதில் பெரும் ஷாக் ஆகிவிட்டாராம் ரமேஷ். காரணம், ‘தி பாடி’யைதான் அப்படியே அடித்திருந்தாராம் அவர். படத்தை பற்றிய ஒரு பரபரப்பு வேண்டும் என்பதற்காகதான் சுனந்தா புஷ்கர், சசிதரூர் என்று படத்தின் கதையையே திசை திருப்பிவிட்டிருக்கிறார். இளையராஜாவின் இசை, அர்ஜுன், ஷாம், மனிஷா கொய்ராலா என்கிற நட்சத்திர அந்தஸ்து என்று எல்லா நம்பிக்கையையும் காலி பண்ணிய மேற்படி ரைட்ஸ் பார்ட்டிகள், இப்போது ரமேஷை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறார்களாம். அவர்கள் கேட்கும் தொகை, ஹார்ட் அட்டாக் வரவழைப்பதை போல இருப்பதால், ‘ஒரு மெல்லிய கோடு’ ஒரு மாபெரும் கேடாகிவிடுமோ என்கிற அளவுக்கு சிக்கலில் தள்ளப்பட்டிருக்கிறாராம் அவர்.

நமது வருத்தமெல்லாம் இதுதான். அர்ஜுன் போன்ற உலகப்படம் பார்க்கிற ஹீரோக்கள், இப்படியொரு கதையை கேட்டவுடனேயே இது தி பாடி படத்தை அடித்த மாதிரியிருக்கிறதே… பிரச்சனை வருமா? என்று கேட்டு தெளிவு பெற்றிருக்கலாமே என்பதுதான்!

இது ஒருபுறமிருக்க, மேற்படி லாக்குக்கும் காங்கிரசுக்குமே கூட தொடர்பு இருக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுவதுதான்! சேச்சே… அப்படியெல்லாமா இருக்கும்?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Monali Sehgal Saree Photos

Close