உத்தம வில்லனுக்கு வில்லனாகும் தியேட்டர் வட்டாரம்? கமல் விஷயத்தில் மீண்டும் இழுபறி!

‘வேணாம்டா உங்க நாடும் உங்க அடக்குமுறையும். நான் போறேன்… எங்கயாவது போறேன்… ’ என்று கமல் கையில் ஒட்டியை மண்ணை தட்டிவிட்டு கிளம்பிய நாட்கள் அது. தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே பரபரப்பானது. ஒரு தேசிய விருது பெற்ற நடிகர் இந்தியாவை விட்டுப் போறேன்னு சொல்றது எவ்வ்வளவு பெரிய அவமானம் என்று துடித்தார்கள். துவண்டார்கள். நல்லவேளையாக கமல் அந்த முடிவுக்கு வரவில்லை. ஆனால் அவரது வசனம் தந்த வீரியம், காரியமாகி கைநிறைய கலெக்ஷனை கொண்டு வந்து சேர்த்தது. இதற்கெல்லாம் காரண கர்த்தவாக இருந்தது அந்த டிடிஎச் விவகாரம்தான்.

விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் வெளியிடப் போவதாக கமல் கூறியதும், திரையரங்க உரிமையாளர் சங்கம் ஒன்று கூடி இனி கமல் படங்களை எங்கும் திரையிடுவதில்லை என்று முடிவெடுத்தது. டிடிஎச் விவகாரத்தில் கமல் தன் முடிவை கைவிட வேண்டும் என்பதுதான் அவர்களது ஒரே சாட்டை வீச்சு. இதில் மூச்சு பேச்சில்லாமல் முடங்கிவிடுவார் என்று இவர்கள் நினைக்க, சைலண்ட்டாக ஒரு வேலை செய்தார் அவரது சகோதரர். ‘காம்படேட்டிடேட் கமிஷன் ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பில் புகார் தந்துவிட்டார். அதில், எங்களை தொழில் செய்யவிடாமல் முடக்குவதாக சம்பந்த திரையரங்க உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த சிலர் மீதும் குறை கூறியிருந்தார். வேக வேகமாக செயல்பட்ட அந்த அமைப்பு, சிலருக்கு கிடுக்கிப்பிடி போட்டுவிட்டது. இப்போது அந்த வழக்கை கமல் தரப்பு வாபஸ் வாங்கினால் ஒழிய இவர்கள் தப்பிக்க முடியாத சூழ்நிலை.

இந்த நிலையில்தான் மீண்டும் கமல் தரப்பை தொடர்பு கொண்ட விநியோகஸ்தர் சங்கம், மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்க பிரமுகர் டி.அருள்பதி நீங்க அவங்க மேல கொடுத்த புகாரை வாபஸ் வாங்குங்க. இல்லேன்னா உத்தமவில்லன் படத்தை மறந்துட வேண்டியதுதான் என்கிறாராம். வேதனை என்னவென்றால், கமலே நினைத்தாலும் இப்போது அது முடியாது போலிருக்கிறது. நீங்கள் வாபஸ் வாங்கினாலும் நாங்க இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவோம் என்கிறதாம் காம்படேட்டிடேட் கமிஷன் ஆஃப் இந்தியா என்கிற மேற்படி அமைப்பு.

நாலாபுறத்திலும் கடன் வாங்கி இந்த படத்தை எடுத்திருக்கும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ், இந்த இழுபறியாமல் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்களாம். கமல் மாதிரி பெரிய நடிகர் படங்களுக்கு செய்யப்படும் முதலீடும், அதற்கு கட்டும் வட்டியும் சிறு தொகையில் அடங்குவதல்ல. நாளுக்கு நாள் பெருகி வரும் வட்டியை கருத்தில் கொண்டாவது பிரச்சனையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் இரு தரப்பும். இல்லையென்றால், உத்தம வில்லனில் உத்தமன் தோற்று வில்லனுக்குதான் வெற்றி கிடைக்கும்!

1 Comment
  1. kk says

    adutha padathai otta ipothey vellaya arambichitura kamal.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உதயநிதியின் ‘கெத்து ’ அவ்ளோதான்!

அண்மையில் நடந்த உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா, அவரது எதிர்கால நாற்காலிக்கு நிகழ்காலத்தில் செதுக்கப்படும் தேக்கு மரமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது கழகத்தின் கண்மணிகளுக்கு! வரட்டும்... வரட்டும்......

Close