நட்சத்திர கிரிக்கெட்டில் உதயநிதி ஆப்சென்ட்! அஜீத் காரணமா?
ஒட்டுமொத்த நடிகர் நடிகைகள் மனசும் இந்தியா பாகிஸ்தானின் ஒன் டே மேட்ச் கிரவுண்ட் போலவே விறுவிறுத்துக் கிடக்கிறது. நடிகர் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டியால், உள்ளுக்குள் இன்னொரு போட்டி உருவாகி தலை ஒருபக்கமும் வால் இன்னொரு பக்கமுமாக இரண்டு தரப்பினரின் கைகளில் சிக்கி அல்லோலப்படுகிறது. இதில் யார் யாரை கவிழ்ப்பார்கள் என்ற போட்டி முடிவு ஒருபக்கம் இருக்கட்டும். அவ்வளவு பரபரப்பிலும் ஒருவர் வர்லீயே… அது ஏன்ப்பா? என்று கேட்டு வந்தார்கள் சிலர். அந்த ஒருவர் வேறு யாருமல்ல, கழகத்தின் வருங்கால வைப்புநிதி உதயநிதிதான்.
அவர் ஏன் வரவில்லை என்பதற்கு முன் ஒரு முன் கதை சுருக்கம். இவரது ரெட் ஜயன்ட் மூவிஸ்சுக்காக ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அந்த கதை உதயநிதிக்குப் போக இரண்டு காரணம். ஒன்று கதை. இன்னொன்று அப்படத்தில் நடிக்க வைப்பதாக சொல்லப்பட்ட அஜீத். அந்த பொறுப்பு எனக்கு என்று கூறிவிட்டாராம் ஏ.ஆர்.முருகதாஸ். சொன்ன மாதிரியே பேச்சு வார்த்தைகள் போய் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் நாம் உதயநிதியை சந்தித்தோம்.
நீங்க ஏன் நட்சத்திர கிரிக்கெட்டுக்கு வரல? ஒருவேளை அஜீத்தை வச்சு நீங்க படம் பண்ணப் போறதால வரலேன்னு எடுத்துக்கலாமா? இந்த கேள்விக்கு சிறு புன்னகையை முதலில் வெளிப்படுத்திய உதயநிதி, மிக அமைதியாக பேச ஆரம்பித்தார்.
“சார்… அவ்வளவு கூட்டத்துக்கு நடுவிலேயும் நான் வரலேங்கறதை நோட்டீஸ் பண்ணிய உள்ளங்களுக்கு நன்றி. எனக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது. அதனால்தான் நான் அங்கு வரல. மற்றபடி அஜீத் சார் புராஜக்ட் இப்பதான் பேச்சு வார்த்தையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கு. அதுமட்டுமல்ல, அஜீத் சார் சொல்லிதான் நான் போகலேங்கறதெல்லாம் சுத்த கப்சா… அவர் அப்படி சொல்லக்கூடியவரும் அல்ல” என்றார்.
கட்டிடம் கட்டி முடியுற வரைக்கும் இந்த அஜீத் ரெக்கார்டு தேய தேய ஓடும் போலிருக்கு!