உதயநிதியின் ‘கெத்து ’ அவ்ளோதான்!
அண்மையில் நடந்த உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா, அவரது எதிர்கால நாற்காலிக்கு நிகழ்காலத்தில் செதுக்கப்படும் தேக்கு மரமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது கழகத்தின் கண்மணிகளுக்கு! வரட்டும்… வரட்டும்… என்கிற சந்தோஷக்குரல்கள் ஆங்காங்கு ஒலித்தாலும், ஆள் அடிதடி கட்டை பஞ்சாயத்து என்று இறங்கினால்தானே ஒரு கெத்து இருக்கும்? ஆனால் கழகத்தின் எதிகால பில்லருக்கு அப்படியொரு எண்ணம் இல்லவே இல்லை என்பதைதான் நிருபிக்கிறது இந்த ஃபெதர் டச்! எப்படி?
மான்கராத்தே படத்தின் இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் கெத்து என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். எல்லா வேலைகளையும் பரபரப்பாக துவங்கிவிட்டு படத்தின் தலைப்பை பதிவு செய்யலாம் என்று போனால் அந்த தலைப்பு வேறொருவர் வசம் இருந்தது. தம்பி… சிரிச்சிகிட்டே கேட்கிறேன். கொடுத்துருங்க என்று கோட்டா சீனிவாசராவ் டைப்பில் கேட்காமல், பதவி செஞ்சவங்க யாரு என்னன்னு விசாரிங்க என்றாராம் உதயநிதி. விசாரித்தால்…? அவரும் தமிழ்சினிமாவில் குறிப்பிட்ட மரியாதைக்குரியவர். தில் துள் படங்களின் ஒளிப்பதிவாளரான கோபிநாத் தான் அவர்.
அவரே இயக்கி ஒளிப்பதிவு செய்யவிருக்கும் ஒரு படத்திற்குதான் இப்படி கெத்து என்று பெயர் வைத்திருக்கிறார். அவர் உடனே உதயநிதியை தொடர்பு கொண்டு, ‘சார்… அந்த தலைப்பு என்னோட கதைக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு. எனக்காக அதை நீங்க விட்டுக் கொடுக்கணும்’ என்று கேட்க, ‘ஐயய்யோ… நீங்கதான் முதல்ல பதிவு பண்ணியிருக்கீங்க. நீங்களே வச்சுக்கோங்க. நோ இஷ்யூஸ்’ என்றாராம் உதயநிதி.
என்னே ஒரு நாகரீகம் இருவருக்கும்…?