இப்போதைக்கு உதயநிதி தேவைப்படல… சந்தானத்தின் ஒப்பன் பதில்!
‘இனிமே இப்படிதான்’ என்று டைட்டில் வைத்தாலும் வைத்தார். இனிமே இப்படிதானா சார்? என்று கேள்வியாக கேட்டு கிறுகிறுக்க வைக்கிறது மீடியா. ‘இனிமே ஹீரோவாதான் நடிப்பீங்களா?’ என்பதை வெவ்வேறு விதங்களில் கேட்க, வெவ்வேறு ஸ்டைல்களில் ஒரே விஷயத்தை ஒப்பித்துக் கொண்டிருந்தார் அவரும். குறிப்பிட்ட சிலரை தவிர மற்றவங்க படத்தில் காமடியனாக நடிப்பதில்லை என்பதற்கு சந்தானம் கொடுத்த விளக்கம், ஆஹா!
‘என்னோட நல்ல புரிதல் இருக்கிற என்னோட நண்பர்களின் படத்துல மட்டும் காமெடியனா நடிப்பேன்னு சொன்னேன். ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க. ஆர்யாவை ட்விட்டர்ல ஒரு கேள்வி கேட்டிருந்தாங்க. படம் முழுக்க உங்க கூட சந்தானம் வர்றாரே… அப்படின்னா அவரு ஹீரோவா? நீங்க ஹீரோவா?ங்கறதுதான் கேள்வி. அதுக்கு அவன் என்ன பதில் சொன்னான் தெரியுமா? சந்தானம்தான் ஹீரோ. நான் வெறும் காமடியன்னு. அதுக்காக நான் ஹீரோவும் இல்ல. அவன் காமெடியனும் இல்ல. இருந்தாலும் அந்த ஜோவியலான பதிலும், மனசும்தான் எனக்கு முக்கியம். அந்த மாதிரி நண்பர்கள் படத்துல மட்டும் காமெடியனா நடிப்பேன்ங்கிற அர்த்தத்துலதான் அப்படி சொன்னேன்’ என்றார் சந்தானம்.
‘உதயநிதி ஸ்டாலின் எல்லாருடைய படங்களையும் வாங்கி ரிலீஸ் பண்ணுறாரு. ஆனால் அவரோட குளோஸ் பிரண்ட் நீங்க. உங்க படத்தையும் அவர் வாங்கி வெளியிடலாமே?’ என்ற கேள்விக்கு, நிறுத்தி நிதானமாக பதில் சொன்னார் சந்தானம். ‘ஒரு படத்தை ஆரம்பிக்கிறோம். ஒவ்வொரு ஸ்டெப்பாக போய் கடைசியில்தான் வியாபாரம்ங்கிற ஏரியாவுக்கு வருவோம். இப்பவே அது பற்றி பேசுறதுக்கான தேவை வரல. அப்படி வரும்போது கண்டிப்பா அவர்ட்ட கேட்பேன்’ என்றார். (கேட்கறது என்ன, கொடுத்துருங்க)
படம் எடுக்கறது சாதாரண விஷயமில்ல. நல்ல அனுபவசாலிகள் உடன் இருக்கணும். அதுபோல சந்தானத்திற்கு உதவியாக இருக்கிறார் வி.டிவி. கணேஷ். இந்த படத்தின் தயாரிப்பு பணியில் மட்டுமல்ல, ஒரு முக்கியமான ரோலில் நடித்தும் கொடுத்திருக்கிறார் வி.டிவி.கணேஷ். படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக கதை திரைக்கதை இயக்கம் பட நாயகி அகிலா கிஷோரும், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் பட நாயகி ஆஸ்னாவும் நடித்திருக்கிறார்கள்.
வேறென்ன… ரெண்டு பொண்டாட்டி கதைதான்!
பின்குறிப்பு- என் வளர்ச்சிக்கு இவங்கதான் காரணம்னு ஒப்பனா ஒப்புக் கொள்ள ஒரு மனசு வேண்டும். அது சந்தானத்திடம் சற்று அதிகமாகவே இருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர்கள் முருகன், பிரேமானந்த் இருவரும்தான் சந்தானத்தின் இத்தனை வருட பஞ்ச் டயலாக்குகளுக்கு காரணம். டி.வி யில் இவர் தொகுப்பாளராக இருந்த காலத்திலிருந்தே பிரண்ட்ஸ். அவர்களுக்கு இந்த படத்தை இயக்குகிற வாய்ப்பை கொடுத்துடன் நில்லாமல், அந்த பிரஸ்மீட்டில் ‘என் வளர்ச்சிக்கு இவங்கதான் காரணம்’ என்றார் சந்தானம்.