மொட்ட மாடி எது? கட்ட சுவரு எதுன்னு தெரியலையே?

‘மாப்ளே… ஒருத்தன் சிக்கியிருக்கான்!’ என்றுதான் ஆரம்பிக்கிறது எல்லா காதலும். அந்த காதலில் சிக்கி சீவலப்பேரி பாண்டியானவனும் இருக்கான். சீவல் பொட்டலமா மடிஞ்சவனும் இருக்கான். ‘புல்லு நட்டேன்… நெல்லு முளைச்சுருச்சு’ என்று மகிழவும் வைக்கும். ‘நாத்து நட்டேன்… சேத்துப்புண்ணுதான் மிச்சம்’ என்று அழவும் வைக்கும் சக்தி அந்த காதலுக்குதான் உண்டு! இப்படி அமர காவியங்களும், ஒரு இடத்திலும் உருப்படியாக ‘அமரா’ காவியங்களுமாக சினிமாவில்தான் எத்தனையெத்தனை காதல்கள்?

நிறைஞ்ச ‘அமாவாசயா’ திரியுற சீரியஸ் காதல் தோல்வியாளர்கள், ‘காதல் ஒருமுறைதான் பூக்கும். அதோட வாசனை தெரியுமா? வர்ணம் தெரியுமா? நீங்க சொல்றதெல்லாம் காதலே இல்ல. கண்றாவி’ என்றெல்லாம் பிதற்றுவார்கள். என்ன செய்வது? அது அவர்களின் நம்பிக்கை. ஆனால் இதைதான் காதல் என்று நம்புகிறது சினிமா ஏரியா.

நடிகை பாவனா, அவர் நடித்த படத்தை இயக்கிய ஒருவரை ‘புரப்பல்லர்’ என்றுதான் அழைப்பார். சினிமாவில் புயல் அடிக்குமே, அதெல்லாம் எப்படி வருகிறது என்கிறீர்கள்? கால் பனை மர உயரத்திற்கு ஒரு ஃபேன் வைத்திருப்பார்கள். அதை ஓட விட்டால் புயல் ரெடி. அதன் பெயர்தான் புரப்பல்லர்! ஏன் இந்த பெயரை சொல்லி அழைக்கிறார் பாவனா? வேறொன்றுமில்லை. அந்த இயக்குனர் பாவனாவின் பெரிய்ய்….ய(?) விசிறியாம். அதனால்தான் அப்படி! செட்டுக்குள் நுழைந்ததுமே ‘குட்மார்னிங் புரப்பல்லர் சார்…’ என்று அவர் சொன்னால், டைரக்டரை தவிர மற்றவர்கள் எல்லாரும் கமுக்கமாக சிரித்துவிட்டு இடத்தை காலி பண்ணிவிடுவார்கள். ஹ்ம்ம்ம்… முன் கதை பின் கதை தெரிந்தவர்களல்லவா? இப்படியொரு சீரியஸ் காதலை காமெடியாக்கி தொலைய எப்படிதான் மனசு வந்ததோ பாவனாவுக்கு?

நான் சொல்லப் போவதை காதல் என்பீர்களா? கண்றாவி என்பீர்களா? படித்து முடியுங்கள்… பொம்மலாட்ட திரையில் ஸ்கீரின் கிழியும்!

இன்று பெரிய நகைச்சுவை நடிகராக இருக்கும் அந்த எலிராஜ மன்னவன், ஒரு காலத்தில் ஒரு நடிகர் கம் இயக்குனரிடம் ஆபிஸ் பாயாக இருந்தார். அவரைத்தேடி இரவு பத்து மணிக்கு மேல் வருவாராம் இன்று பெரிய மனுஷராக இருக்கும் அன்றைய சிறிய மனுஷன். உள்ளே செல்வார். பேசிக் கொண்டிருப்பார். சிறிது நேரத்தில் வெளியே கிளம்புவார். போகும் போது, ‘தம்பி… வா, ஒரு டீ சாப்பிடலாம்’ என்று இவரையும் அழைத்துக் கொள்வார். இருவரும் நடந்தே ஒரு ஏழெட்டு தெருவை சுற்றி சுற்றி வருவார்கள். ‘யோவ்… ஒரு டீயை வாங்கிக் கொடுத்துட்டு அந்த டீ கிளாசே செரிக்கிற அளவுக்கு நடக்க விட்றீயே’ என்றெல்லாம் மனசுக்குள் நினைத்துக் கொள்கிற எலி, ஆபிஸ் வந்து சேர்கிற போது, கால்கள் ஓய்ந்திருக்கும்.

அதற்கப்புறம்? அதற்கப்புறமென்ன… அதுவரை அங்கு விட்டுவிட்டு போயிருந்த தனது மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பிவிடுவாராம் அந்த சின்ன மனுஷன். அவரும் ஒரு முன்னாள் டைரக்டர்தான். (அதற்கு மேல் யாரென்று விலாவாரியாக விளக்குவது ஒன்றும் பெரிய கஷ்டமில்லை, ஆனால் வேண்டாம்….) எலிராஜாவின் எஜமானுக்கு வந்த காதல் அது!

இன்னொரு சுவாரஸ்யமான ‘ஹா’ஸ்யம்….

அது ஒரு சினிமாவிழா. ஒரே தள்ளுமுள்ளு… மாலைகள்…. வாழ்த்துக்கள்… என்று நேரம் போய் கொண்டிருக்க, திடீரென கையில் ஒரு பொக்கேவுடன், தனது ட்ரெட் மார்க் சிரிப்புடன் வந்திறங்கினார் அந்த நடிகை. ‘சார்… USA நடிகை வர்றாங்க’ என்று அந்த படத்தின் கேமிராமேனின் காதில் கிசுகிசுத்தார் புரடக்ஷன் மேனேஜர். இங்கு USA என்பது… புரப்பல்லர் மாதிரி ஒரு குறியீடுதான்! இது சம்பந்தப்பட்ட நடிகைக்கு தெரியுமா, தெரியாது. ஆனால் அவரை எல்லாரும் அப்படி ஒரு குறியீடு வைத்துதான் அழைக்கிறார்கள். வரட்டும்… வரட்டும்… என்று முகத்தை திருப்பிக் கொண்டாலும், கேமிராமேனின் எண்ணம் சுமார் பதினைந்து வருடங்கள் பின்னோக்கி ஓடியது.

சினிமாவில் பெரிய ஒளிப்பதிவாளராக வர வேண்டும் என்ற ஆசையோடு சென்னைக்கு வந்த நேரம் அது. புகைப்பட கலைஞராக ஆங்காங்கே பணியாற்றிவிட்டு அடுத்த கட்ட பாய்ச்சலுக்காக அந்த பெரிய ஒளிப்பதிவாளர் வீட்டுக்கு நடையாய் நடந்து கொண்டிருந்தார் இவர். சினிமாவில் ஒரு பெரிய கலைஞனிடம் வேலைக்கு சேர்வதென்பது, நதிநீர் இணைப்பை விட சிரமமானது. சிக்கலானது. ஆயுளின் பாதியை அசால்ட்டாக விழுங்கிவிடுவார்கள். ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்…’ என்று விடாப்பிடியாக திரிந்தாலொழிய லட்சியங்களெல்லாம் கழுதை வாயில் சிக்கிய காகிதங்கள்தான்.

ஒளிப்பதிவாளர் வெளியே கிளம்பும்போதெல்லாம் அவர் கண்ணில் படுகிற தூரத்தில் நின்று, அதற்கப்புறம் ஒருநாள், ‘ தம்பி… என்ன விஷயம்? அப்படியா? போயிட்டு அடுத்த வாரம் வர்றீயா?’ என்று இன்சால்மென்ட்டில் பதில் கேட்டு முன்னேறுவதற்குள் சில வருஷங்கள் போயிருந்தன. நினைத்தால் யாரிடம் வேண்டுமானாலும் சேர்ந்திருக்கலாம். ஆனால் இவரிடம்தான் சேர வேண்டும் என்கிற அளவுக்கு தொழில் நேர்த்தி ஒளிப்பதிவாளர் அவர். அதனால்தான் இந்த காத்திருப்பும், கடும் முயற்சியும். அத்தனை வருட போராட்டத்திற்கு பிறகு ஒரு தேதியை சொல்லி அன்று காலையில் ‘பத்து மணிக்கு வந்துரு’ என்று கூறியிருந்தார் ஒளிப்பதிவாளர். எத்தனை வருஷ தவம்? பத்து மணியெல்லாம் ஒண்ணுமேயில்ல. ராத்திரி ஒரு மணி என்றால் கூட இவர் போயிருப்பார்.

காலை ஆறு மணிக்கெல்லாம் தும்பைப் பூ போல தயாராகி அவர் வீட்டு வாசலில் நிற்க ஆரம்பித்துவிட்டார் இவர். செக்யூரிடியிடம் தனது வருகையை சொல்லிவிட்டு, இன்னும் சில மணி நேரத்தில் நம்ம வாழ்க்கையே மாறப்போகுது என்று காத்திருந்தார்.

தெய்வம் மனுஷ ரூபத்தில் வரும். தேவாங்கு எந்த ரூபத்தில் வரும்? அந்த சந்தேகத்திற்கெல்லாம் விடை சொல்வது போல வந்திருந்தார், இதோ- இப்போது பொக்கேவுடன் வந்து கொண்டிருக்கிறாரே… அதே USA நடிகை! அதுவும் இதே போலொரு காலை நேரம்தான்!

தழைய தழைய பட்டுப்புடவை, தலை நிறைய மல்லிகைப்பூ, வெளிச்ச வெளிச்சமாக சிரிப்பு. அதுவும் அவர் சிரிக்கும் அந்த சிரிப்பு இருக்கிறதே…. அது இந்தியா பாகிஸ்தான் ராணுவ தளவாடத்தையெல்லாம் காலி பண்ணி, அங்கெல்லாம் பருத்திப்பூக்களை பறக்க விடுகிற அழகான சிரிப்பு. இவர் நடித்த பல படங்களை பார்த்துவிட்டு இவரது பெரும் விசிறியாகவும் மாறியிருந்தார் நம்ம கேமிராமேன். ஆனால் அந்த இடத்தில் அதையெல்லாம் பார்க்க முடியாது. லேசாக தலையை குனிந்து கொண்டார். அவர் ஏன் அங்கு வந்திருக்கிறார் என்பதும் நாளிதழ்கள் மூலமாக தெரிந்து வைத்திருந்தார். வேறொன்றுமில்லை… நடிகைக்கும் பிரபல இயக்குனர் ஒருவருக்கும் திருமணம். அழைப்பிதழ் வைக்கதான் அங்கு வந்திருக்கிறார்.

‘இரு நாட்டு தலைவர்கள் வளர்ச்சி குறித்து சந்தித்தாலே கூட, இடியாப்பம் பாயா தின்கிற நேரத்தில் முடிந்துவிடுகிறது எல்லாம். இந்த சந்திப்பு அதிகபட்சம் அரை மணி நேரம் போகுமா? காத்திருப்போம்…’ கையை கட்டிக் கொண்டு அந்த பங்களாவை பார்த்துக் கொண்டு எதிர் வீட்டு மதில் சுவரில் சாய்ந்து நின்று கொண்டார். இவருக்கு அப்பாயின்ட்மென்ட் தரப்பட்ட நேரமான அந்த பத்து மணி சுலபத்தில் கரைந்து போனது. பதினொன்று… பனிரெண்டு… ஒன்று… இரண்டு… என்று நேரம் போய் கொண்டிருந்ததே தவிர, உள்ளே போன USA வெளியே வரவேயில்லை. இவர் அழைக்கப்படவும் இல்லை. நடுவில் பசி, இடுப்பில் போட்டிருந்த பெல்ட்டையே தின்றுவிடுகிற அளவுக்கு முறைத்தது. தெரு முனையிலிருக்கிற டீக்கடைக்கு போகலாம். பன்னோ, டீயோ பசியாற்றும். ஆனால், அதையெல்லாம் பார்த்தால் மூணு நாலு வருஷம் அலைஞ்சது வீணாப் போயிருமே?

அந்த நேரத்தில் உள்ள வாய்யா… என்று அழைத்துவிட்டால் என்னாவது? பசியும் மயக்கமும் தயக்கமும் தடுமாற்றமுமாக இவர் காத்திருக்க, என்னவோ எடுப்பதற்காக மாடிக்கு வந்த ஒளிப்பதிவாளர் இவரை பார்த்துவிட்டார். ‘செக்யூரிடி… அவனை உள்ள அனுப்பு’. குரல் வந்த அடுத்த வினாடி இவர் அவர் வீட்டுக்குள் நுழைந்திருக்க, அதற்கப்புறம்தான் ஷாக்.

காலையில் பட்டுப்புடவையும், பாரிஜாத வாசமுமாய் காரில் வந்திறங்கிய நடிகை, அங்கு ஒரு நைட்டியை போட்டுக் கொண்டு இங்குமங்கும் திரிந்து கொண்டிருந்தார். அவர் கையில் எடுத்து வந்திருந்த பூ, பழம், கல்யாண இன்விடேஷன், அதை ஏந்தி வந்த வெள்ளித்தட்டு எல்லாம் அந்த அறையின் ஓரத்தில் வைத்தது வைத்தபடி இருந்தது. ‘இந்தாளு இன்னும் இன்விடேஷனை பிரிச்சுக்கூட படிக்கல போலிருக்கே’ என்றது மனசுக்குள்ளிருந்த அன் வான்ட்டட் அரிவாள்மனை!

சின்ன கொஞ்சலும், சீமெண்ணை சிரிப்புமாக சமையல் கட்டுக்குள்ளிருந்து வெளிப்பட்ட USA, ‘டீ போட்டுத்தரட்டுமா?’ என்றார் ஒளிப்பதிவாளரிடம். ‘க்ரீன் டீ… இவனுக்கும்…’ என்று ஒளிப்பதிவாளர் கூறிவிட்டு, ‘தம்பி சொல்லு. என்ன ஊர் உனக்கு?’ என்று ஆரம்பித்தார். அதற்குள்,

தடவி தடவி தண்டையார் பேட்டைக்கு வந்தா, தபாலாபீசு ஆழ்வார் பேட்டைக்கு மாறிடுச்சுன்னு சொன்னா எப்படியிருக்கும்? அப்படியாகியிருந்தார் நம்ம வருங்கால கேமிராமேன். ஊர்ல எத்தனையோ ஒளிப்பதிவு மேதைகள் இருக்க, சேர்ந்தா இவருகிட்டதான் சேரனும்னு பல வருஷம் காத்திருந்தோம். அவரோ மொட்ட மாடி எது? கட்ட சுவரு எது?ன்னு தெரியாத ஒரு வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்காரே?ங்கிற கோபமும் வந்து தொலைத்திருந்தது.

‘சார்… டீ வேணாம்’ என்றவர், மெல்ல எழுந்தார். விறுவிறுவென வெளியேறியிருந்தார். அதற்கப்புறம் வேறொரு ஒளிப்பதிவு மேதையிடம் தொழில் கற்று இன்று இந்தியாவின் முக்கிய ஒளிப்பதிவார்களில் ஒருவராக இருக்கிறார்.

ஆமாம்… அதென்ன USA குறியீடு? அண் சேட்டிஸ்பைடு ஆன்ட்டியாம்.

அடேய்… அடேய்…!

(குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய கோடம்பாக்கம் செக்போஸ்ட் தொடரிலிருந்து)

Read previous post:
இருவர் ஒன்றானால் / விமர்சனம்

‘காதல் போயின் சாதல் என்பதெல்லாம் சுத்த ஊத்தல் சமாச்சாரம்’ என்பதை இவ்வளவு லைவ்வாகவும் ஜாலியாகவும் ஒரு படம் சொல்லிவிட முடியுமா? புதுமுகங்களை வைத்துக் கொண்டு புரட்டி புரட்டி...

Close