உனக்கென்ன வேணும் சொல்லு- விமர்சனம்

சீசனுக்கு வந்திருக்கும் மற்றுமொரு ‘ஆவ்’வி படம் என்று அலட்சியமாக ஒதுங்கிப் போய்விட முடியாது. ‘அவியில் பொறியல்’ சமாச்சாரங்களை தவிர வேறொன்றும் தெரியாத நமக்கு, ‘மனவியல் உளவியல்’ என்று இவர்கள் காட்டும் இன்னொரு உலகம் வியப்பாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. அதிலும், மேலோகத்தில் வாழும் குழந்தையொன்று, பெற்ற தகப்பனிடம் “ஏம்ப்பா என்னை பார்க்க நீ வரல?” என்று கேட்கிற போது பொளக்கென்று எட்டிப்பார்க்கும் அந்த ஒரு சொட்டு கண்ணீர் துளி, ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு எக்ஸ்ட்ரா டிக்கெட்டாக மாறிவிடக் கூடும். மிக நேர்த்தியான ஆவிப்படம்!

வெளிநாட்டிலிருக்கும் பூஜாவின் மகனுக்கு திடீரென விநோதான நோய். நியூயார்க்கிலிருக்கும் மருத்துவரிடம் போகலாம் என்றால் அவ்வளவு தொலைவு டிராவல் தாங்காது என்கிறார் டாக்டர். வேணும்னா சென்னைக்கு போங்க. நான் சொல்றேன் என்று அவர் கேட்க, பூஜாவுக்கு சென்னை வருவதில் தயக்கம். ஏன்? அங்குதான் இருக்கிறது வம்பு. இங்கு அவளுக்கு ஒரு முன்னாள் லவ். அதன் மூலம் ஒரு குழந்தை. அது அநாதை ஆசிரமத்தில்… என்று பிசைய பிசைய ஒரு பிளாஷ்பேக். அதையெல்லாம் கணவரிடம் மறைக்கும் பூஜா வேறு வழியில்லாமல் சென்னைக்கு வர, சென்னையில் காத்திருக்கும் அந்த அநாதை ஆசிரமத்துக் குழந்தை ஆவியாகி, அதே அன்னைக்காக காத்திருக்கிறது. மீதி என்ன என்பதை யூகித்துவிடலாம் என்றாலும், அதை சொன்ன விதத்தில் இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கமும், படத்தில் பங்கு பெற்ற டெக்னீஷியன்களும் பிற ஆவி படங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு ஒரு ஸ்டெப் அந்தரத்தில் பறக்கிறார்கள்.

எங்கெங்கோ நடக்கும் கதை திரிவேணி சங்கமம் மாதிரி ஓரிடத்தில் மிக்ஸ் ஆவதை மிக இயல்பாக கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். கழுத்தை சுற்றி காதை தொடுகிற அவஸ்தையில்லை அதில். அதற்காகவே ஒரு சபாஷ்.

பூஜாவாக நடித்திருக்கிறார் ஜாக்லின் பிரகாஷ். குற்றவுணர்ச்சியில் தவிப்பதையும், பேய் அச்சத்தில் வியர்ப்பதையும் வித்தியாசப்படுத்தி காண்பிக்க முடிந்திருக்கிறது அவரால். கடைசியில் தன் மகளை தூளியில் எலும்புக்கூடாக பார்த்து அவர் உடைந்து அழுவதெல்லாம் திகிலை தாண்டிய தாய்ப்பாசம்! இவரது முன்னாள் காதலராக நடித்திருக்கும் தீபக் பரமேஷ் ஆரம்பத்தில் ஒரு ஸ்திரி லோலன் போல காண்பிக்கப்படுவதுதான் ஏனென்று புரியவில்லை. இருந்தாலும் எல்லாவற்றையும் மன்னிக்கிறது இவரும் அந்த ஆவிக்குழந்தையும் சந்திக்கிற அந்த அற்புதமான தருணம்.

அந்த காட்சியை பிரசன்ட் செய்திருக்கிற விதத்தில் கண்கொள்ளாமல் நிறைந்திருக்கிறது கேமிரா.

தன்னை அந்த நிலைமைக்கு ஆளாக்கின பூஜாவின் தோழியை கூட போட்டுத்தள்ளும் அந்த குழந்தை, ஏன் பெற்ற அப்பனை விட்டு வைத்தது என்பதுதான் புரியவில்லை. இருந்தாலும், அந்த குழந்தையின் கேள்வியும், துறுதுறு கண்களும் மனசை விட்டு அகல வெகு நாட்கள் ஆகும். சபாஷ் அனு!

விட்டால் ஓவர் ஆக்ட்டர் லிஸ்ட்டில் சேர்ந்துவிடுகிற அபாயம் இருந்தும், அளவாக நடித்து பெயரை தட்டிச் செல்கிறார் மைம் கோபி. அவரது எய்ம் முழுக்க அந்த ஆவியை துரத்துவதிலேயே இருக்க, பாதி காட்சிகளில் கழுத்தில் காலரோடு திரிய வேண்டிய கட்டாயம்! ஒருகாட்சியில் அவரே தடுமாறி எடுக்கிறாரே ஓட்டம்… அங்கு கிளப்புகிறார்கள் பீதியை.

ஆங்… படத்தில் வரும் அந்த ஜிடி மாதிரி ஊருக்கு நாலு பெண்மணிகள் இருந்தால், கள்ளக்காதல் ஆசாமிகள் இன்னொரு வீட்டில் கால் வைக்கவே அஞ்சுவார்கள். நல்லா நடிச்சுருக்கீங்க மோர்ணா!

ஒரு அறைக்குள் நுழைகிற போது நாம் செய்யும் முதல் வேலை லைட்டை போடுவதுதான். அதென்னவோ தெரியவில்லை. இந்த படத்தில் வரும் அத்தனை கேரக்டர்களும் இருட்டிலேயே இடியாப்பம் தின்கிறார்கள். கடுப்ஸ்…! (லைட்டா போட்டால் ஆவி எப்படி வருமாம்? விடுங்கப்பா)

ட்யூனுக்கு அதிக அக்கறை காட்டியதாக தெரியவில்லை, ஆனால் பின்னணி இசையில் பிரமாதப்படுத்துகிறார் சிவசரவணன்! மேக்கிங் பிரமாதம் என்று சொல்ல வைத்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் மனிஷ்மூர்த்தியும், படத்தொகுப்பாளர் ஹரிகரனும்!

உனக்கென்ன வேணும் ‘கொல்லு’ என்பதைதான் ‘சொல்லு’ என்று மாற்றியிருக்கிறார்களோ?

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கிருமி -விமர்சனம்

காக்கி சட்டையில் காக்கா எச்சம் போடுகிற கதைளும், அதே காக்கி சட்டையில் பதக்கம் குத்தும் கதைகளும் என்று இரு வேறு கதைகள் கோடம்பாக்கத்தில் வேண்டுமளவுக்கு புழங்கியவைதான்! இங்குதான்...

Close